Friday, March 26, 2010

இரசிக்க வைக்கும் பாடல் வரிகள்

"பொய்யிலாமல் காதல் இல்லை, பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்". இந்த வரிகள் 'சொல்லாயோ சோலைக்கிளி' என்ற பாட்டின் இடையே வரும்.

 கவிதைக்கு பொய் அழகு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் காதலுக்கும் பொய் அழகு என்ற கருத்தை நம்மிடையே விட்டுச் செல்லும் வரிகள் இவை. காதலில் உண்மையும் நம்பிக்கையும் தான் முக்கியம் என்பது நமது கூற்று. அனால் அதை கட்டுடைக்கும் வரிகள் இவை.

****

 'சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே, தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடந்தானே'. 'கத்தாழ காட்டு வழி' என்னும் பாட்டில் இடம் பெற்ற வரி.

தவளை நீரிலும் நிலத்திலும் வாழும், அதற்கென்று ஒரு தனி இடம் கிடையாது.
பிறந்த வீடு விட்டு புகுந்த வீடு செல்லும் பெண்ணை தவளையோடு ஒப்பிட்டிருப்பார் கவிஞர். தவளை தண்ணீருக்கும் நிலத்திற்கும் மாறி மாறி தாவும். பெண்ணும், பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் அலைபாயும் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

****

புத்தம் புது பூமி வேண்டும்' என்ற பாடலில் அனைத்து வரிகளும் மனதை கொள்ளை கொள்ளும்.  அதில்நான் மிகவும் ரசித்தது

'சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்'.

சொந்தமாக ஆகாயமே கிடைத்தாலும் ஜோடியாக நிலவும் வேண்டும் என்ற கற்பனை சிலிர்க்க வைக்கிறது. காற்றே இல்லாத நிலவில் தேவையான போது மழையும் வேண்டும் என்பது சற்று அதிகப்படியோ! கவிதைக்கு பொய் அழகு என்பதை மீண்டும் நிரூபிக்கும் கற்பனை.

****

'மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்'

காதலன் தன் காதலியிடம் "நீ விரும்பாவிட்டாலும் விரும்புவதாக ஒரு பொய் சொன்னாலே போதும் அதில் என் உயிர் வாழும்" என்று கூறுவது நம் உணர்வுகளை த(எ)ட்டிப் பார்க்கும் வரிகள். இந்த இடத்தில் முதலில் நான் குறிப்பிட்டிருந்த பாடலின் வரிகளை நினைவு கொள்கிறேன். இங்கும் பொய் என்பது காதலை வாழ வைக்கும் ஒரு நிஜமாகவே இருக்கிறது.

****

'மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்று கேளுங்கள்'

இந்த வரிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'மெளனமான நேரம்' பாடலில் வரும் இவ்வரிகள் வெறும் எழுத்தோ அல்லது  ஓசையோ மட்டும் அல்ல. மனதில் எத்தனை ஆசைகள் இருந்தாலும் இதழில் மெளனம் சாதிக்கும் ஒருவன் இந்த மெளனத்தின் காரணம் என்ன என்று கேளுங்கள் என்று நம்மிடம் மன்றாடுவதாய் அமைந்திருக்கிறது. எழுதிய கவிஞனின் கற்பனை தொட முடியாத தூரம்.

****

'பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கற்பத்தில் நானே கலைந்திருப்பேனே'

ஒரு பெண் தன் பிறப்பைப் பற்றி சுய பச்சாதாபம் கொண்டு வெளியிடும் வேதனையை இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இன்னும் இதுபோன்று பல பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் நான் ஒருவனே சொல்வதைக் காட்டிலும் அவரவர்க்கு தோன்றும்(விரும்பும்) பாடல் வரிகளை எழுதினால் பலரும் இரசிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

அதனால் இது ஒரு தொடர் பதிவாக இருப்பின் பல நயம் மிகு வரிகள் அனைவரையும் சென்றடையும் என்ற நோக்கத்தோடு எனக்கு தெரிந்த, தெரியாத அனைவரையும் அழைக்கிறேன்.

இதற்க்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை. வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

நான்  பதிவுலகிற்கு புதிது என்பதால் எனக்கு வெகு சிலரே பரிட்சயம். இப்பதிவின் மூலம் தொடர நான் அழைப்பது

மதுரை சரவணன்
சபரி
மர்மயோகி
ஜெய்லானி
மங்குனி அமைச்சர்
ஜீவன்சிவம்
SUREஷ்
தேவன் மாயம்
வால் பையன்
ரோஸ்விக்

நண்பர்களே, பதிவை தொடருங்கள். நீங்கள் இரசித்த பாடல் வரிகளை மற்றவரும் இரசிக்கும் வண்ணம் பகிருங்கள்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Wednesday, March 24, 2010

கல்யாணம் ஆனவங்க இதை கண்டிப்பா படிங்க

பேச்சுலர்ஸ் அப்படின்னாலே எதோ  தெனைக்கும் தண்ணி அடிக்கிறவங்க, எங்க பொண்ணுகளைப் பாத்தாலும் உடனே ஓடிப் போய் கையப் புடிச்சு இழுத்துருவாங்க அப்படிங்கற அளவிலேயே பாக்கறீங்களே!. நாலு பசங்க ஒன்னா சேர்ந்து தங்கினாலே அவங்கள ஏதோ தீவிரவாதியப் பாக்கிற மாதிரிதானே பாக்கிறீங்க.

பேச்சுலர்ஸ் போய் வீடு வேணும்னு  கேட்டா வீட்டுக்காரங்க ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க, அடுத்த பேச்சுக்கு இடமே இல்லாம திரும்பி நடக்க வேண்டிய பார்வை அது.

அப்படியே வீடு கொடுத்தாலும் அந்த பசங்க மேல ஒரு கண்ணுவெச்சுகிட்டே இருப்பாங்க.

இந்த நிலைமையில ஒரு பேச்சுலர் எந்த தப்பும் பண்ணாம பக்கத்து வீட்டு பொண்ண டாவடிச்சதா அவன் மேல ஒரு குற்றம் சுமத்தப் படுது. அப்போ அவன அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் சுத்தி நின்னு கேள்வி மேல கேள்வியா கேக்கிறாங்க.

அந்த சூழ்நிலைய பத்தி மாட்டிக்கிட்ட பையன் மனம் வெறுத்து சொல்றதுதான் கீழ்க்கண்ட தொடர்ச்சி.

---------------------------------------------------------------

கண்மூடி நிதானித்து பதிலுரைக்க காலம் தாழ்த்திய இடைவெளியை நிரப்பும் பொருட்டு எழுந்த பேச்சுக்கள் மனதின் திண்மையை ஆட்டிப் பார்க்கினும் நிதானம் இழக்காமல் நிற்பவனின் பொறுமையை சோதனைச் சாலை எலி என நினைப்பவர்களை மன்னிக்கும் மகாத்மா அல்ல நான்.

நீங்களும்  இதற்க்கு ஒரு நாள் ஆட்படின் செய்வதறியாது நிலைகுலைந்து சூடேறும் இரத்தத்தை ருசிக்கும் ஓநாய் கூட்டத்தின் வம்சம் அல்ல நான்.

தன் சுற்றம் அல்லாத பெண்ணை கண்டு பேருவக்கும் செயல்தனை புறம்  ஒதுக்கும் சொற்ப மனிதர்களை அற்பமாய் பார்க்கும் ஈனம் என்னுள் குடிவர அனுமதித்ததில்லை.

தனித்திருப்பினும் தனக்கான கொள்கையினை பிறர்க்கென தளர்திக்கொள்ளும் மனிதர்களை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தாழ்ந்தவன் அல்ல நான்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்னும் கூற்றிக்கு பக்கம் நின்று கூக்குரலிடும் தன்மையினை எனக்குள்ளே வளர்த்துக் கொண்டவன் நான்.

அயல்நாட்டு மோகத்தின் பால் ஈர்ப்பு கொண்டு என்னையன் வள்ளுவன் கூறிச்சென்ற பிறன்மனை நோக்காப் பேராண்மை என்னும் முதுமொழியினை தகர்க்கும் கூட்டத்தில் சேர்ந்திட்டேன் அல்லன் நான்.

இப்படிப்  பலவாறு எடுத்துரைத்தும் உரைத்த கருத்தினை கண்டுகொள்ளாது தன் இருப்பை காட்டிக் கொள்ள முயலும் கூட்டத்தினுள் மாட்டிகொண்ட கதைகளத்தின் கருப்பொருள் நான்.

 ---------------------------------------------------------------

என்னங்க, இவனுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு பரிதாபமா பாக்கிறது புரியுது.
ஏதோ புதுசா முயற்சி செஞ்சு பாக்கலாமுன்னுதான் இப்படி. நீங்க எதையும் மனசில் வெச்சுகாதிங்க.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 


-

Tuesday, March 23, 2010

சூழ்நிலைக் கைதிகள்

நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நடைபாதையில் தூங்கும்
மனிதர்களை இறக்கத்துடன் பார்த்து
கால் படாமல் ஒதுங்கிச் செல்வோம் 
ஆனால் அவர்களுக்கு
உறைவிடம் தரமாட்டோம்.
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பிச்சை எடுக்கும் சிறுமிக்கு
ஒத்தை ரூபாய் பிசையிட்டு
கர்ணனாய் நினைத்து நகர்ந்துவிடுவோம்
அச்சிறுமியின் துயரப் பின்புலம் பற்றி
எண்ணமாட்டோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பேருந்துப் பயணத்தில்
நிற்கும் பெரியவருக்கு
யாராவது இடம் கொடுப்பார்களா என்று
சுற்றிலும் பார்த்துவிட்டு
உறங்குவது போல் கண்மூடிக் கொள்வோம்
எமது இருக்கையில்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

சாலை விதிகளை மீறும்
வாகன ஓட்டிகளை
மனதிற்குள் திட்டிக் கொள்வோம்
எங்கள் வாகனங்களை
நிறுத்தமில்லா இடங்களிலும் நிறுத்துவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

 வெளிநாடுகளின் தூய்மையைப் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசுவோம்
ஆனால் எம் நாட்டில்
கூச்சப் படாமல்  பொது இடங்களை
அசுத்தம் செய்வோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

கண்ணெதிரே அநியாயம் நடப்பினும்
பாராமுகமாய் இருந்து விட்டு
சமுதாயத்தை திட்டுவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Monday, March 22, 2010

கிராமத்து பேருந்து

கிராமங்களில் உள்ள பேருந்துகளில் பிரயாணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம். நகரத்தில் உள்ள டவுன் பஸ் போல் பரபரப்போ ஏறி இறங்க அடிதடியோ இருக்காது. எந்தெந்த கிராமங்களின் வழியாக செல்கிறதோ அந்த ஊர்களில் எல்லாம் அந்த பஸ் ஒரு நீண்ட நாள் நண்பனைப் போலவே நடத்தப்படும்.

சிறிது  நாட்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுடைய ஊருக்கு அதிகம் பஸ் வசதி கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டோ அல்லது மூன்று முறையோதான் பஸ் சென்று வருகிறது.

அந்த கிராமத்து மனிதர்களைப் போலவே பேருந்துகளும் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது. புஷ் பாக் சீட்டுகள் கிடையாது, காதுகள் அதிரும் D.T.S. ஒலி கிடையாது. ஆனால் திறந்த ஜன்னல் வழியே நம் கேசம் கலைக்க ஓடி வரும் தூய்மையான காற்று உண்டு.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் உறவினர்களைப் போல் குடும்ப நலன் விசாரிக்கின்றனர். அவர்களுக்குள் பயணி என்ற உறவை தாண்டி ஒரு நட்பு எப்பொழுதும் இழையோடுகிறது.

பயணிகளை ஏற்றி இறக்குவதில் அவசரம் காட்டுவதில்லை. நிறுத்தி நிதானமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர், அதனால் ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ தேவை இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வர நடத்துனர் அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு கூட்டமும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பயணி பஸ்ஸில் ஏறிய பிறகு பயணச்  சீட்டிற்கு காசு குறைவாக இருக்கிறது என்றார். அதற்க்கு நடத்துனர் சரி அடுத்த முறை  வரும் பொழுது கொடுங்கள் என்று கூறினார். அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை அது.

பயணிகளோடு ஆடு கோழிகளும் பயணிப்பதை பார்க்க முடிகிறது. நடத்துனருக்கு தெரியாமல் பைக்குள் வைத்து கோழியை கொண்டு செல்வது ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால் ஒருவர் ஒரு ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார். அது பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை, அசூயை கொள்ளவும் இல்லை. சாதாரண விஷயமாகவே எடுத்துக்கொள்ளப் படுகிறது.

சாலையின் குறுக்கே ஆடு மாடுகளை ஒட்டி வந்தாலும் ஓட்டுனர் ஏக வசனத்தில் திட்டுவதில்லை. சில சமயங்களில் நடத்துனர் இறங்கிச் சென்று ஓரமாக விரட்டுவதும் உண்டாம்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, நகரத்து பேருந்துகளில் நடக்கும் இடிபாடுகளும், வசவு மொழிகளும் எண்ணத்தில் உரசிச் செல்கிறது.

கிராமத்துப் பேருந்துகளில் என்ன  ஒரு பிரச்சனை, சில சமயங்களில் வெற்றிலை எச்சிலை கொஞ்சமும் யோசிக்காமல் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி துப்புகிறார்கள். காற்றில் நம் மேல் படாமல் உஷாராக இருக்க வேண்டி இருக்கிறது.

உண்மையில் பல கிராமங்களில், பக்கத்து நகரத்திற்கு செல்லும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பஸ் ஒரு காதல் வாகனம். அவர்களுக்கு சந்தித்துக்கொள்ள  வேறு பாதுகாப்பான இடம் கிடைப்பது பெரும் கடினம். வேறு எங்கேயாவது தனித்து நின்று பேசினால் அவர்கள் வீடு சென்று சேர்வதற்கு முன் அவர்களின் விஷயம் வீட்டிற்கு சென்றுவிடும். கல்லூரியிலும் இதற்க்கு வாய்புகள் குறைவு. பஸ்ஸிலும் இந்தப் பிரச்சனை இருந்தாலும் அவர்களுக்குள்ளான தகவல் பரிமாற்றம் சற்று எளிது.

இடம்  பிடிப்பதற்காக யாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுவதில்லை. நிதானமாகவே ஏறுகிறார்கள், முண்டியடித்துக் கொண்டு உட்காராமல் அடுத்தவர்களுக்கு உட்கார வழி விடுவதை காண முடிகிறது.

பல பஸ்களில் இரண்டு மூன்று சீட்டுகள் அகற்றப் பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் சந்தைக்கு காய்கறி மூட்டையை அடுக்கி எடுத்துச் செல்கிறார்கள்.

நகரத்தைப் போன்று சாலைகளில் செல்வோரை பீதியடைய வைக்கும் வகையில் வேகமாக செல்வதில்லை. பஸ்ஸை ஓட்டுவதில் ஒரு நிதானம் இருக்கிறது.


குண்டும்  குழியுமான சாலைகளில் பேருந்து ஆடி ஆடி செல்வது தேர் ஊர்வலம் செல்வது போலத்தான் இருக்கிறது. பல கிராமங்களின் நகரத் தொடர்புக்கு இது போன்ற சாலைகளும் அதில் அவ்வப்பொழுது வந்து செல்லும் பஸ்களும் மட்டுமே இருக்கிறது.

நண்பர்களே, உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Friday, March 19, 2010

அதிர்வுகள் - 2 (யு.டி.வி. பிந்தாஸ் - ஒரு அதிர்ச்சி தகவல் )

நண்பர்களே, நேற்று இரவு எதேச்சையாக "யு.டி.வி. பிந்தாஸ்" என்ற சேனல் பார்க்க நேர்ந்தது. அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி 'இமோசனல் அத்யாசார்'. காதலர்களுக்கு இடையே உள்ள காதலை பரிசோதிக்கும் ஒரு நிகழ்ச்சி.

"ஒரு காதலனோ அல்லது காதலியோ தன் காதலன்/காதலி மீது சந்தேகம் கொள்ளும் பட்சத்தில், இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்".

அதாவது, காதலிக்கும் ஒரு பெண்ணிற்கு தன் காதலன் மீது சந்தேகம் வந்தால் இந்த நிகழ்ச்சி தொடர்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள், தாங்கள் நியமித்த பெண்ணின்/ஆணின்  மூலம் அந்த காதலரை சந்திக்கச் செய்வர். இதில் பெரும்பாலும் சந்தேகம் கொள்ளும் நபர் பெண்ணாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை  உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு பெண் தன் காதலனின் மீது சந்தேகம் கொண்டோ அல்லது ஒரு விளையாட்டாகவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தொடர்பு கொண்டு சோதிக்க விரும்புகிறாள். முதலில் அந்த சேனல் நியமித்த பெண் அந்த வாலிபரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பூங்கா, ஷாப்பிங் மால் (படுக்கை அறை வரை கூட) என்று ஏதாவது ஒரு இடத்திற்கு வரச் செய்கின்றனர்.  பின்பு மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து, தன் அழகை பிரதானமாகக் கொண்டு தன்பால் ஈர்க்கின்றார் அந்தப் பெண்.

அதை உண்மை என்று நம்பும் அந்த வாலிபர் அப்பெண்ணின் பேச்சிற்கு இணங்க அவள் கூப்பிட்ட இடத்திற்கு செல்ல முனைகிறார். இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், எந்த ஒரு மனிதனையும் தன் வசம் இழக்க வைப்பது சூழ்நிலையே. ஏற்க மறுத்தாலும் நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகள் என்பது மறுக்க முடியாதது.

பெண்ணின் பேச்சு மற்றும் செய்கை அந்த வாலிபரின் உணர்சிகளை தூண்டுவதாகவே இருக்கும் (அந்த வாலிபரை மட்டும் அல்ல யாராய் இருப்பினும்). அவரும் தன்னிலை மறந்து சில்மிசங்களில் ஈடுபட ஆரம்பிப்பார். இதை அனைத்தும் மறைந்திருந்து கேமிரா மூலம் பத்தி செய்வார்கள். அது மட்டுமில்லாமல் இதை நேரடி ஒளிபரப்பாக அந்த பையனை காதலிக்கும் பெண்ணிற்கும் காண்பிப்பார்கள்.

இதை பார்த்துக்கொண்டிருக்கும் பெண் தன் காதலன் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து கோபம் கொள்வாள். அதுமட்டுமில்லாமல் தன் காதலனும் அந்தச் சேனலால் நியமிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் படுவாள்.

திடீரென்று முளைத்த கேமிரா மற்றும் ஆட்களைப் பார்த்து அந்த பையன் அதிர்ச்சி அடைவான். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் மாட்டிகொண்டோமே என்ற படபடப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உணர்ச்சி மேலீட்டில் செயல்படத் துவங்குவான்.  அப்பொழுது அந்த பெண் மற்றும் காதலன் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் பதிவு செய்வார்கள்.


ஒரு காதலர்களுக்கு இடையே செயற்கையான நிகழ்வின் மூலம் பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்குள் என்ன மாதிரியான வாக்குவாதம் நடைபெறுகிறது என்று பதிவு செய்யப்படுகிறது.


பின்பு அதை தங்களின் 'இமோசனல் அத்யாசார்' நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்புவார்கள். இது அந்த சேனலின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு வியாபாரத்தந்திரம். அவர்களின் வியாபாரத்திற்க்காக ஒரு காதலர்களின் காதலை கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப இந்தியச் சட்டம் எவ்வாறு அனுமதிக்கிறது. இதற்க்கு சட்டவியலில் தடை செய்ய எந்த ஒரு பிரிவும் இல்லையா?.


இதில் காதலனோ காதலியோ அவர்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, ஒரு நபர் இப்படிப்பட்ட பொது ஊடகத்தை தேர்ந்தெடுத்தாலும் அதில் சம்பத்தப்பட்ட அடுத்த நபரின் அனுமதி இல்லாமல் அவர் வேண்டாம் என்று மறுத்த பின்பும் டி.வி.யில் ஒளிபரப்புவது அடாவடித்தனமில்லையா?.


இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்த்து அதை ஊக்குவிக்கும் நபர்கள் இருக்கும் வரை இது போன்ற சேனல்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் நடனக் கலையை ஊக்குவிக்கலாம், பாட்டு போட்டி நடத்துவதன் மூலம் இளம் பாடகர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டலாம். இது போன்று எத்தனையோ ஆக்கப் பூர்வமான நிகழ்ச்சிகள் இருப்பினும், இது போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு என்ன மாதிரியான பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.


அதுமட்டுமில்லாது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காதலர்கள் அதன் பின்பு என்ன மாதிரியான முடிவு எடுக்கிறார்கள் என்பதை பற்றி யாரும் யோசிப்பதாய் தெரியவில்லை.


இது பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்யவும்.

--------------------------------------------------------------------

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

நான் கேட்டுக்கொண்டதர்க்காக என் பதிவுகளைப் படித்து நிறை குறைகளை சுட்டிக் காட்டியதோடு ஆலோசனையும் வழங்கிய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

--------------------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

காதலும் காற்றும் ஒன்றா
ஆம் என்கிறது
என் சுவாசம்

--------------------------------------------------------------------

(அதிரும்...)

பிடிச்சிருந்தா ஒரு ஒட்டு குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!

-

Wednesday, March 17, 2010

அதிர்வுகள் - 1

20-20 கிரிகெட் ஆரம்பித்து விட்டது, இனி உயிரே போனாலும் மேட்ச் பார்க்காமல் இருக்க முடியாது. அதென்னவோ தெரியலைங்க இந்த கிரிகெட் மட்டும் ஆரம்பிச்சுட்டா பக்கத்தில உக்காந்திருக்கிறது பொண்டாட்டியா இல்ல அவ சக்கலத்தியான்னு கூட தெரியறது இல்ல. என்ன கருமாந்திரம் புடிச்ச விளையாட்டோ!

கிரிகெட் பாக்கிற ஒவ்வொரு ஆளையும் புடிச்சு உங்க அம்மா அப்பாவோட பிறந்த தேதி என்னன்னு கேட்டா எத்தன பேரு விட்டத்த பாப்பாங்கன்னு தெரியல. ஆனா 2005 ல டெண்டுல்கர் எத்தன ரன்னுன்னு கேட்டா மூச்சு விடாம அத பத்தி அரை மணி நேரம் பேசுவாங்க.

சரி விடுங்க இத பத்தி அதிகம் பேசாம இருக்கிறது ரொம்ப நல்லது. நா எனக்கு சொன்னே!

------------------------------------------------------------------

"ச்சே, என்ன கொடும மச்சி இது. காலைல ஆபீஸ் வந்தா யாருமே ஒழுக்கமா வேலையைப் பாக்கிறது கிடையாது. பக்கத்து ஆளுகிட்ட நாயம், கிளுகிளுப்பான படத்தோட ஈமெயில் ஏதாவது வந்திருக்குதான்னு பாக்கிறது, இன்னைக்கு யார் யாரு என்னென்ன டிரஸ் போட்டிருக்காங்கன்னு அப்படியே ஒரு நோட்டம். மொத்தத்துல இவங்க எல்லாம் வேலையே செய்ய மாட்டங்க போல இருக்குது."

"ம்"

"இப்போ மணி பன்னிரண்டு, பத்து மணிக்கு வந்த ஆளுங்க இதுவரைக்கும் வேலைய ஆரம்பிக்கல. நம்ம ஒன்னும் உழைச்சு ஓடா தேய வேணாம், எதோ கொடுக்கிற சம்பலத்துக்காகவாவது வேலை செய்யனுமில்ல?"

"ம்"

"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பட்ட கொட்டிக்க கிளம்பிருவாங்க"

"வாய் கிழிய பேசுறியே காலைல இருந்து நீ என்ன பண்ணுனே?"

"வந்ததிலிருந்து எப்படி எப்படியோ பிட்டப் போட்டும் அந்தப் பொண்ணு மடங்க மாட்டேங்குது மச்சி. ஏதாவது செய்யணும் மச்சி!"

!!!???

------------------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

மற்றவர்கள் முன்
என்னிடம் பிச்சை கேட்கும் சிறுவன்
மதில்மேல் பூனையாய்
மனது

------------------------------------------------------------------

(அதிரும்...)

ஒரு ஓட்ட குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!

-

Tuesday, March 16, 2010

தனிமை எனக்கொரு போதி மரம்

எப்போதேனும், ஒரு நாள் முழுவதும் தனிமையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? தனிமை தரும் அனுபவத்தை உணர்ந்ததுண்டா? தனிமையை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை, ஆனால் நாம் விரும்பா விட்டாலும் சில நேரங்களில் அது நம்மை தேடி வந்து விடுகிறது.

ஆள் அரவமற்ற இடத்தில் தான் தனிமை என்றில்லை, இரைச்சலான பேருந்து பயணத்தில் அருகில் இருப்பவர்கள் என்னே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஜன்னல் வழி காட்சிகளை மவுனமாக பார்த்துக்கொண்டு வருவோமே, அதுவும் ஒருவித தனிமைதான்.

நான் எந்த இடத்தில் இருந்தாலும் எனக்கான தனிமை எப்பொழுதும் என்னுடன்தான் இருக்கிறது அதை கவனிக்க பலநேரம் நான்தான் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் நானும் எனது தனிமையும் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக்கொள்வது போல் தனிமை என்னை தன் கரங்களுக்குள் தழுவிக் கொள்கிறது.

தனிமையை பழகி விட்டால் அது ஒரு விதமான மயக்கம், தியானம். நம்மை சுற்றி இருக்கும் காற்று வெளியில் தனிமையும் காற்றோடு கலந்து நம்மை சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.தனிமையில் இருக்கும் பொழுது மனதில் எண்ணங்கள் பலவாறு பீறிட்டுக் கிளம்பும், சில நேரம் எண்ணக் கூடாததும்.

தனிமையின் இருப்பை கண்டுகொள்ள மறுக்கிறோம். சில நேரங்களில் தனிமையை மறுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, நண்பர்களோடு பேசி, தொலைக்காட்சி பார்த்து, வண்டி எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி இப்படி எத்தனையோ.

ஒரு நாள் மதிய வேலை, புறநகர். அலுவலகத்துக்குச் செல்ல பேருந்தை எதிர்நோக்கி ஆட்கள் அற்ற நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தேன். சாலை, வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லாமல் வெயிலும் தனிமையும் மட்டுமே நிறைந்திருந்தது. சாலையோர மரம் ஒன்று யாரோ ஒருவரின் வரவுக்காக காத்திருப்பது போலவே இருந்தது. ஆனால் உண்மையில் அந்த மரம் யார் வந்தாலும் போனாலும் கண்டுகொள்வதே இல்லை போலவும் இருந்தது.

அதன் எதிர்புறம் யாராலோ , எப்பொழுதோ, எதற்காகவோ கொண்டுவந்து போடப்பட்ட கல் ஒன்று, நூற்றாண்டு கடந்த மவுனத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்டு எது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன் அதன் தோற்றம் நிச்சயம் வேறு மாதிரி இருந்திருக்கும். இன்று இருக்கும் அதன் உருவத்தைப் பெற காரணம் என்னவாக இருக்கும்.

கல்லைப் பற்றிய எண்ணத்தைக் கலைத்து எங்கிருந்தோ வந்த பட்டாம்பூச்சி ஒன்று நிழற்குடைக்குள் வந்து சற்று நேரம் அங்கும் இங்கும் வட்டம் போட்டது. பின்பு அங்கிருந்த தடுப்பு கம்பியின் மீது அமர்ந்து சிறகுகளை அசைத்தபடியே இருந்தது. இந்த காட்சிகளை பார்த்து கொண்டே தனிமை கொஞ்சம் கொஞ்சமாக என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

தூரத்தில் பேருந்து வருவது தெரிந்ததும் தனிமை என்னிடம் இருந்து மெல்ல கையசைத்து விடைபெற்றுக்கொண்டது. சில சமயங்களில் என்னையும் அறியாமல் இதுபோல் தனிமை கிடைப்பதுண்டு, சில வேளைகளில் நானாக தேடிச் செல்வதும் உண்டு.

மழையோ, அதிக காற்றோ அற்ற வெறுமையான இரவு. நிலவும், மேகங்களும் இல்லாத வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும். மாடி முகப்பில் அமர்ந்து இருந்தேன், அந்த பின்னிரவு வேளையில் அமைதியை போர்த்தியபடி மரங்கள் உறங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் செல்போன் டவரின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது சிகப்பு வண்ண நட்சத்திரமாய்.

தனிமை ஒரு காதலியைப் போல் ஓடி வந்து ஒட்டிக் கொண்டு மெல்ல மெல்ல என்னுள் இறங்குவதை உணர முடிந்தது. சில்வண்டுகள் தங்களுக்குள் பேசிக்கொள்வது தனிமையின் ஒரு அங்கமாகவே இருந்தது. அவைகளின் சத்தம் தனிமையை கலைப்பதர்க்குப் பதில் மேலும் மேலும் தனிமைக்குள் ஆழ்த்திக்கொண்டே போனது.

இரவுப் பறவை ஒன்று சத்தம் இல்லாமல் எதோ ஒரு இடத்தை நோக்கி பயணித்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் படுத்து உறகலாம் என்று ஒரு எண்ணம் வந்தாலும், தூங்கிவிட்டால் இது போன்ற ஒரு தனிமையை இழக்க நேரிடும் என்ற உண்மை தூக்கத்தை விரட்டி அடித்தது.

நேரம் செல்லச் செல்ல தனிமை எனும் அந்த அழகான உணர்வுக்குள் நான் மொத்தமாக தொலைந்து விட்டிருப்பது தெரிந்தது. கிழக்கில் சூரியன் வருவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. சாலையில் மனிதர்களின் நடமாட்டம் தெரிய ஆரம்பித்தது. இம்முறை நான் மெல்ல கையசைத்து தனிமையிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

தனிமை பல வேளைகளில் போதி மரமாகவே இருக்கிறது. அதன் நிழலில் சற்று நேரம் இளைப்பாறிப் பாருங்கள்.


-

Saturday, March 13, 2010

வலைப் பதிவரும் ஒரு பத்திரிகையாளரே

பதிவர்கள் எல்லோருக்கும் வணக்கம்.

நாட்டில் நடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய ஒரு ஊடகம் பத்திரிகை. ஆனால் அந்த பத்திரிகையில் எழுதும் வாய்ப்புகள் எழுத நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிலரது எழுத்துக்களும் அது எந்தப் பத்திரிகையில் வெளிவருகிறது என்பதைப் பொறுத்தே அச்செய்தி எத்தனை மக்களை சென்றடைய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இன்று தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் சட்டசபை வளாகம் கட்டி முடிக்கப் படாத நிலையில் பகுதி வேலை செட் என்று தமிழ் மக்கள் எத்தனை பேர்களுக்கு தெரியும். இதை நான் எந்த ஒரு பத்திரிகையில் படிப்பதற்கு முன் நம் சக வலைப் பதிவர் மர்மயோகி அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இரண்டு கோடி செலவில் செட் என்பது தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு வேண்டுமானால் சாதாரண விசயமாக இருக்கலாம். அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கோடியில் புரளுபவர்கள் அல்லவா? ஆனால் ஒரு கடைக்கோடி தமிழனுக்கு இரண்டு கோடி என்பது தன் வாழ்நாளிலும் எட்ட முடியாத ஒரு இலக்கு.

ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதையாக, சற்று நேரம் வந்து போகும் மேலிடத்துக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அவ்வாறு செலவிடப்படும் பணம் நிரந்திர தீர்வுக்காகவும் அல்ல என்பதுதான் மன வேதனைக்குரியது.

இப்படி ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, நாம் படித்தறியாத எத்தனையோ விஷயங்கள் பதிவுகளில் படிக்கப் படாமலே தூங்கிக் கொண்டிருக்கின்றன. பதிவுகளை தேடும் பொழுது எது நமக்கு விருப்பமான ஒன்றோ அதை மட்டுமே தேர்வு செய்து படிப்பது அனைவருக்கும் இயற்கையானதே. ஆனாலும் நம் பதிவர்கள் மறைந்து கிடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கையின் செய்திகள் சென்றடையும் மக்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால் அப்பத்திரிக்கையில் வரும் செய்திகளுக்கு எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்பதை இன்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த , குடும்பத்தில் அனைவரும் படிக்க ஏற்றத்தக்கதாய் இருந்த பத்திரிக்கைகள் இன்று மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு இணையாக வளம் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் காலத்தின் கொடுமை இன்னும் அதை குடும்பம் சகிதமாக படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது மக்களின் அறிவுடைமை என்று முழுமையாக கூறிவிட முடியாது, அவர்களின் அறிவு அவ்வாறு மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது.

பத்திரிகைக்கும் பதிவருக்கும் மிகப்பெரிய வித்யாசம் என்னவென்றால், பத்திரிகையாளரின் செய்தி மக்களால் படிக்கப் பட்டே ஆக வேண்டும். இல்லையெனின் அந்த பத்திரிகையின் வருமானம் குறையும். அது நீடித்தால் அந்த செய்தியாளரின் வேலை பறிபோகும். அதனால், செய்தியில் உண்மையை விடவும் சுவாரஸ்யமே முக்கியமாகிப் போகின்றது. செய்தியின் நம்பகத்தன்மையும் குறைகிறது. ஆனால் பதிவாளருக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, அவர்கள் பெரும்பாலும் ஆதாய நோக்கோடு எழுதுவதில்லை. தங்கள் கருத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தவே தம் எழுத்தின் மூலம் முயற்சிக்கிறார்கள்.

பதிவு என்பது வெறும் கேளிக்கைகளுக்கும் சுய விமர்சனங்களுக்கும் என்பது மாறி இன்று வெகு ஜன உடகங்களும் திரும்பிப் பார்க்கும் வலிமையை பெற்றிருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் பதிவர்களுக்குள்ளும் இருக்கும் போட்டி பொறாமைகள் அதற்கொரு தடைக்கலாகவே இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. அவர்களது பெரும்பாலான நேரம் தங்களுக்குள் மாற்றி மாற்றி திட்டி எழுதிக்கொள்ளவே செலவிடப்படுகிறது. இது கவலைக்குரிய விசயமாகும்.

பதிவராய் இருப்பதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு செய்தியாலருக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கலாம். ஒரு கவிஞன் செய்தி கூற விரும்பலாம். இப்படிப்பட்ட வாய்ப்புகள் பதிவாலனுக்கே உள்ள ஒரு வரப்பிரசாதம்.

அதுவே ஒரு பத்திரிகையில் வேலை செய்யும் செய்தியாளர் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும். சினிமா பற்றி செய்தி எழுதும் ஒருவர் தனக்கு கிடைத்த அரசியல் விஷையத்தைப் பற்றி அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. அரசியல் பற்றி எழுதுபவர் தனக்கு தெரிந்த சினிமா விசயங்களை சுலபமாக பதிவேற்றிவிட முடியாது.

இன்னும் சொல்லப் போனால், ஒரு விதத்தில் பதிவாளர்களின் வேலை அவர்களின் முழு நேரப் பனி அல்ல. இருந்தும் தன்னாலான செய்திகளைத் திரட்டி வெளியிடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களை விட பதிவர்களுக்கு அதிக சுதந்திரம் என்றே சொல்லலாம். தனக்கு கிடைக்கும் செய்திகளை வெளியிட யாரிடமும் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. தான் அளித்த செய்திகள் முழுதும் பதிவேருமா அல்லது பதிப்பாளரின் விருப்பத்திற்க்கேற்ப மாற்றியமைக்கப்படுமா என்று கவலை கொள்ள தேவையில்லை.

ஒரு குறை என்னவெனில், தவறான செய்திகளும் பதிவேற்றப்படும் வாய்ப்புகள் பதிவர்களின் பதிப்புகளில் அதிகம் என்பதை மறுக்க இயலாது. அது பதிவாலரைப் பொறுத்தே அமைக்கிறது.

எழுத்து சுதந்திரம் என்பதை பதிவுகள் எழுத ஆரம்பித்த பின்புதான் உணர்ந்தேன். தனது எண்ணங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஒருவர் அதிக பட்சம் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். அதுவே ஒரு பதிவாக இருப்பின் முகம் அறியா எத்தனையோ நபர்களிடம் சென்றடைகிறது. அவர்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

செய்திகள் மட்டுமன்றி, கதைகள் கவிதைகள் புனைவுகள் என்று ஏராளமான விஷயங்கள் பதிவுலகில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பத்திரிகை தவறான செய்தியை வெளியிடுகிறது என்றால் அது பொது மக்களிடையே என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதே மாதிரியான விளைவுகள் தான் பதிவுகளில் தவறான செய்தி வெளிவரும் போதும் ஏற்ப்படுகிறது.

ஆக, ஒரு பதிவாளர் எந்த விதத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகரானவர்கள் என்பது உண்மை.

பதிவுகளை எழுதும், படிக்கும் நண்பர்களே, இன்னும் பல விஷயங்கள் இது போன்று உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது தங்களின் பின்னூட்டத்தைப் பொறுத்தே அமையும்.

எனது எழுத்துக்களில், கருத்துக்களில் ஏதேனும் நிறை, பிழை இருப்பின் பின்னூட்டம் இட்டுச் செல்லுங்கள். அது எனது குறைகளை திருத்திக்கொள்ள, நிறைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பேருதவியாய் இருக்கும்.


-

Tuesday, March 9, 2010

என் வருங்கால காதலிக்கு ஒரு கடிதம் - என்னவளே, நீ எங்கே!

இனியவளே,

யாரென்றே தெரியாத உன்னை முதன் முதலில் சந்திக்கப் போகும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் ஒருவன் உனக்கு எழுதும் முதல் கடிதம். வெகு நாட்களாக உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நீ எப்படி இருப்பாய் என்று மனதிற்குள் உன்னைப் பற்றி கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் உன்னை கற்பனையில் வைத்து கவிதை செய்வது. என் கவிதையின் கருப்பொருளே, என் கவிதை தீரும் முன் ஒரு முறையேனும் உன்னை பார்த்து விட்டால் புதிய கவிதை ஊற்றுகள் பிறக்கும் என் மனதிற்குள்.

பலரும் காதல் நோயினால் அவதிப்படுகையில், காதலியே இல்லாததால் அவதிப்படும் புதிய வகை நோய் பற்றி அறிந்திருக்கிறாயா? உனது நினைவுகளால் என் இரவின் நீளத்தை அதிகப்படுத்தியவளே, இன்னும் எத்தனை நாள்தான் என்னோடு கண்ணாம்பூச்சி ஆடுவாய்.

எந்த இளம்பெண்ணை புதிதாய் பார்த்தாலும் என்னவளாய் இருக்கக் கூடுமோ என்று மனது ஒரு நொடி அதிர்ந்து மீள்கிறது. இந்த நரக வேதனையை இன்னும் எத்தனை நாளைக்கு நான் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.

உனக்கு எது பிடிக்கும் என்று தெரியாத நிலையில் இப்பொழுது இருந்தே பரிசுப் பொருட்களை வாங்கி சேமிக்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு பரிசுப் பொருள் உனக்கு பிடிக்காமல் போனால் எனக்காக அதை ஏற்றுக் கொள்ளும் சங்கடம் உனக்கு வேண்டாம்.

நமது முதற் சந்திப்பு கடந்த காலமா அல்லது எதிர்காலமா? இதற்கு முன் நாம் எங்கேனும் சந்தித்திருக்கலாம், ஓரிரு வார்த்தைகள் பேசியும் இருக்கலாம். அவ்வாறு நடந்திருப்பின் நீதான் என்னவள் என்று அந்த கணம் உணர்த்தாமல் போனது ஏன்?

போனது போகட்டும், இனியாவது எனைத்தேடி வருவாயா.

என் அறை முழுதும் என் நினைவலைகளால் நிரம்பி இருக்கின்றன. அந்த நினைவலைகள் மொத்தமும் நீ!

என் வீட்டுப் பூந்தோட்டம் உன் வரவிற்காக காத்திருக்கின்றன, என் வீட்டு வாயிற்படி உன் பாதம் தொட பாதை பார்த்திருக்கின்றன. அதிக நாட்கள் காக்க வைக்காதே, பாவம் அவைகளுக்குப் புலம்பக்கூட இயலவில்லை.

நாம் பேசப்போகும் காதல் மொழிகளுக்காக வார்த்தைகள் காத்துக் கிடக்கின்றன. நாம் சந்தித்துக் கொள்ளப் போகும் இடங்கள் நம்மை எதிர்பார்த்து ஏகாந்தத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. நாம் இட்டுக் கொள்ளப் போகும் முத்தங்கள் நமக்காக தவமிருக்கின்றன. நாம் வாழவிருக்கும் வாழ்க்கை நம்மை வரவேற்க ஆவலுடன் இருக்கிறது. நீ என் மனதை கொள்ளை கொள்ளும் நாளுக்காக ஏக்கத்துடன் நானும் காத்திருக்கிறேன். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

பெண்ணே, காலம் காலமாக வாழும் காதலுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம். காதலை எடுத்துரைக்க ஒரு புது மொழி கண்டு பிடிப்போம். மனித வாழ்வில் காதலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்போம். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

இத்தனை காலமும் நம்மை பிரித்து வைத்திருக்கும் அந்த கடவுளிடம் கேட்டே ஆக வேண்டும், "இன்னும் எத்தனை நாட்கள் என்னவளை என்னிடம் இருந்து மறைத்து வைக்கப் போகிறாய்?".

எனது இரசனையின் உச்சமாய் இருக்கப் போகின்றவளே, கேள் என் மனதின் ஓசையை ஒரு நிமிடம் செவி சாய்த்து.

என்னவளே, நீ எங்கே!

கனவுகளில் சுமந்து வந்த
காதலை நிஜமாக்க
என்னவளே, நீ எங்கே!

கலங்கி நிற்கும் வேளையில்
ஆறுதலாய் தோள் சாய
என்னவளே, நீ எங்கே!

காதல் எனும் புத்தகத்தில்
நம் வாழ்கையை
கவிதையாய் எழுதிவிட
என்னவளே, நீ எங்கே!

கணப்பொழுதும்
எனைவிட்டு பிரியாமல்
என் உயிருக்குள் கலந்துவிட
என்னவளே, நீ எங்கே!

உனது நினைவே எனது நினைவுகளாக
உனக்காக காத்திருக்கும்,
உன் அன்பன்....


-

Friday, March 5, 2010

கடவுளை சந்தித்தேன்

இன்றைய போலி நாகரீகம் நிறைந்த உலகில் நேரில் யாரும் பார்த்தறியாத கடவுளை சந்தித்தேன் என்று கூறினால் நம்புவதற்கு ஆளில்லை. அப்படியே நம்ப தயாராயிருந்தாலும் அவர்களுக்கும் தக்கதொரு சான்று தேவைப்படுகிறது.

நான் சந்தித்த கடவுள்

அழுக்குப் படிந்த உடையுடன் பேருந்தில் ஏறிய வயதானவரை எல்லோரும் அசூயையுடன் பார்த்தபொழுது அதுபற்றி கவலைப்படாமல் தன் பக்கத்தில் கூப்பிட்டழைத்து அமர்த்திகொண்ட சக பேருந்து பயணி.

உழைக்கும் நேரத்தில் உடற்ச்சோர்வினால் களைப்புற்று தள்ளாடிய உழைப்பாளியை சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள பணிந்த முதலாளி.

கையிலிருந்த தின்பண்டத்தைப் பார்த்து பசியோடு ஓடிவந்த நாய்க்குட்டிக்கு சற்றும் யோசிக்காமல் பாதியை பகிர்ந்து தந்த சிறுவன்.

தள்ளாடும் வயதிலும் உழைத்து உண்ணும் வைராக்கியத்தோடு காய்கறி விற்கும் மூதாட்டி.

தனது கடைப் பொருளேயாயினும் கெட்டுப்போன மிட்டாயை வியாபாரமாக்காமல் கடைக்கு வந்த சிறுமிக்கு வேறு மிட்டாய் கொடுத்த பெட்டிக்கடைக்காரர்.

இப்படி எத்தனையோ கடவுள்கள் நம்மைச்சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனக்கு என்று என்னாது பிறருக்காக கவலைப்படும் யாவரும் கடவுளுக்கு நிகரானவர்களே.


-

Tuesday, March 2, 2010

கவிதை எழுதச்சொல்லிய கவிதை

நானும் நல்லவன்தான்
முகத்தை திருப்பிக்கொண்டிருக்கும்வரை
எதிரே இறுக்கமான உடையணிந்த பெண்.

வலப்புறம் இதயம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது
அரவணைப்பில் பெண்.

காத்திருப்பதின் வலி அறிந்தேன்
என்னவள் எனக்காக காத்திருந்த பொழுது.

ஆட்கள் யாருமற்ற தீவில்
என்னோடு சேர்த்து இறக்கி விடப்பட்ட எதிரி
ஏனோ எதிரியாக தெரியவில்லை.

ஒரு கவிதை பாதியில் நின்று போனது
மகிழ்ச்சி!
அது காதல் தோல்வியால் எழுத ஆரம்பித்த கவிதை.

கவிஞனாகிவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது
இரவின் தனிமையில் அமர்ந்தபடி நான்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
என்னவளே நீ என்னை
காதலித்தாலும் வெறுத்தாலும் எனக்கு
ஆயிரமாயிரம் கவிதைகள்.

என்னைப்பற்றி இன்னும் எத்தனை கவிதைதான் எழுதுவாய்
கூச்சத்துடன் கேட்கிறது கவிதை.

நிலவு தர்மசங்கடப் பட்டது
பசியால் அழும் குழந்தைக்கு
தன்னை காட்டி சமாதானப் படுத்தும் ஏழைத் தாய்.

ஒற்றையடி பாதையில் எதிர்ப்பட்ட பிரிந்த காதலி
என்ன செய்ய வேண்டும் நான் இப்பொழுது!?


இது அனைத்தும் நான் twitter ல் எழுதியவை.

Monday, March 1, 2010

பதிவுக்கு என்னமாதிரி தலைப்பு வெச்சா நிறைய குத்து வாங்கலாம்

என்னென்னமோ தலைப்ப வெச்சும் நம்ம ஏரியா பக்கம் யாருமே வரமாட்டீன்றாங்கன்னு கவலைப்படற ஆளா நீங்க? அப்படீனா கண்டிப்பா இங்க ஒரு பார்வை பார்த்துட்டு போயிடுங்க. ஏதோ என்னாலான உதவி.

நேத்து பெஞ்ச மழைல இன்னிக்கு மொளச்ச காளான் நமக்கு ஐடியா கொடுக்குது பாருடான்னு அடிக்க வந்தாலும் பரவால்ல 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' (வ்வ்விடமாட்டேன்).

கீழ்க்கண்ட தலைப்பை வைத்தும் எழுதலாம் அல்லது ஏதாவது எழுதிவிட்டு அதுக்கு இதுல இருந்து ஒரு தலைப்ப எடுத்து வெச்சுடலாம், உங்க இஷ்ட்டம்.


- உண்மைச் சாமியாரும் உன்மத்த நிலையும்

- நேக்ச்பிளியோபோத்தோ கிளியோபாத்ராவிடம் வாங்கிய அடி

- பன்ச் டயலாக்கும் தமிழ் திரையுலகமும்

- திகில் படம் பார்க்கப் போன திடீர் சுமதி

- காதலிய பார்க்க போறப்ப மனைவிய கூட்டிட்டு போகாதீங்க

- மேங்கோ மரத்துக்கு பக்கத்துல ஒரு மாங்கா மரம்

- பெண்ணாதிக்கம் - ஒரு பேரிடி

- 67 மணிநேரம் செலவழித்து எழுதப்பட்ட கட்டுரை

- அரசியல் நோக்கோடு எழுதப்படாத ஒரு அரசியல் கட்டுரை

- அழகான பனியனும் அவுந்துபோன டவுசரும்


இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நா மொத மொதல்ல எழுதுன பதிவுக்கு என்ன தலைப்பு வெச்சிருக்கேன்னு இங்க போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க. அதுனோட பாதிப்புதா இப்படி எல்லாம்.

இந்த மாதிரி தலைப்பு வெச்சு குத்து உங்க பதிவுக்கு பதிலா உங்களுக்கு விழுந்துச்சுன்னா நான் பொறுப்பு இல்லை.

அப்படியே நம்ம பதிவுக்கும் ஒரு குத்து குத்திட்டு போங்க!!

சிறு வயது ஞாபகம்

சிறு வயதில் அப்பாவுடன் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சாலையின் போக்குவரத்துகளை வேடிக்கை பார்த்தவண்ணம் பள்ளி சென்ற ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் மனதிற்குள் ஒரு சந்தோசம் வருமே அதை என்னெவென்று சொல்வது. விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். காலை உணவு முடிக்கும் வரைதான் வீட்டில் பின்பு மாலைவரை நண்பர்களுடன் எங்காவது விளையாட சென்றுவிடுவேன்.

அனால் இப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்கள்தான் சோம்பலுடன் விடிகிறது!.

கடைவீதிகளில் எதிர்ப்படும் தெரிந்தவர்களைப் பார்த்து அப்பா சிநேகத்துடன் புன்னகைக்கும் பொழுது ஏன் என்று தெரியாமல் நானும் புன்னகைத்திருக்கிறேன்.

மாலைப் பொழுதுகள் எப்பொழுதும் மனதிற்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது ஆனால் அதை அனுபவிக்கத்தான் நேரம் கிடைப்பதில்லை இன்று. அந்த வயதில் மாலைப்பொழுதும் நேரமும் கிடைத்தும் அதுபற்றி கவலைப்படாமல் விளையாடி தீர்த்திருக்கிறேன். அதைப் பற்றி சிந்திக்கக்கூடிய வயதும் அல்ல அது.

அன்று எனது ஊருக்குள் அடிக்கடி பார்த்த பல முகங்கள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவர்களையெல்லாம் இப்பொழுது மீண்டும் பார்க்க வாய்ப்பும் இல்லை அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

ஊருக்குள் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் ஒருவரை தினமும் பார்ப்பேன். அவரைப்பற்றி பள்ளி நண்பர்கள் "அவுரு சாதாரண ஆள் இல்ல! கொலைகாரன பிடிக்கறதுக்காக வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்கிற CID" என்று சொல்லக் கேட்டு பயத்தோடு பார்த்திருக்கிறேன். அதுமட்டுமின்றி வீட்டில் பெரியவர்களிடம் அந்த விஷயத்தைச் சொல்லி அதிசயித்திருக்கிறேன். இதுபோல் பலபேர், இப்பொழுது அவர்கள் எல்லாம் ஊரில்தான் இருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை.

நீச்சல் கற்றுக்கொடுக்க தாத்தா கிணற்றுக்கு அழைத்துச்செல்லும் பொழுது பயந்துகொண்டு பாதி வழியிலேயே ஓடி வந்துவிடுவேன். கடைசியில் எப்படியோ ஒரு வழியாக கற்றுக்கொண்டபின், காலையில் எழுந்தவுடன் சீக்கிரம் நீச்சலடிக்கப் போகலாம் என்று நச்சரிப்பு ஆரம்பமாகிவிடும். நேரம் போவது கூட தெரியாமல் எந்த கவலையும் இல்லாமல் கிணற்றில் குதித்து விளையாடிய அந்த நாட்கள் எவ்வளவு அற்புதமானது.

அன்று நான் பார்த்த பாதைகள் இன்று தார்ச் சாலையாகி முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும் எப்பொழுதாவது அந்த சாலைகளில் செல்லும் பொழுது பழைய பாதையின் தோற்றம் ஒரு நொடியாவது கண்முன் தோன்றி மறைவதை தவிர்க்கமுடியவில்லை.

பால்ய வயதில் இருளைக்கண்டு பயப்படாமல் இருந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பொழுதெல்லாம் எட்டு மணியானால் ஊர் அடங்கிவிடும். அதுவும் என் வீடோ சற்று தள்ளி தோட்டத்திற்குள். வீட்டைவிட்டு வெளியே வரவே பயமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மனதில், வெளியே கொட்டகையில் கட்டியிருக்கும் ஆட்டுக்குட்டி எப்படி பயம் இல்லாமல் இருளில் இருக்கிறது என்று ஒவ்வொரு இரவும் வியப்பு மேலிடும்.

மழை. அந்த வயது மழையை மட்டும் இரசிப்பதில்லை, மழை நின்றபின் வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் விளையாட வைக்கிறது. வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மேல் குதித்து சிதறும் தண்ணீரை பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம். ஆனால் இப்பொழுது ஒதுங்கிச் செல்லச் சொல்கிறது மனசு.

வயது ஏற ஏற எண்ணங்கள் மாறுவதும், காலத்திற்க்கேற்ப ஊர் மாறுவதும் இயற்க்கை. ஆனாலும் மனது சட்டென்று அதை ஏற்றுக்கொள்வதில்லை.

காலத்தின் பிடிக்குள் நாம்.