Tuesday, March 9, 2010

என் வருங்கால காதலிக்கு ஒரு கடிதம் - என்னவளே, நீ எங்கே!

இனியவளே,

யாரென்றே தெரியாத உன்னை முதன் முதலில் சந்திக்கப் போகும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் ஒருவன் உனக்கு எழுதும் முதல் கடிதம். வெகு நாட்களாக உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நீ எப்படி இருப்பாய் என்று மனதிற்குள் உன்னைப் பற்றி கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் உன்னை கற்பனையில் வைத்து கவிதை செய்வது. என் கவிதையின் கருப்பொருளே, என் கவிதை தீரும் முன் ஒரு முறையேனும் உன்னை பார்த்து விட்டால் புதிய கவிதை ஊற்றுகள் பிறக்கும் என் மனதிற்குள்.

பலரும் காதல் நோயினால் அவதிப்படுகையில், காதலியே இல்லாததால் அவதிப்படும் புதிய வகை நோய் பற்றி அறிந்திருக்கிறாயா? உனது நினைவுகளால் என் இரவின் நீளத்தை அதிகப்படுத்தியவளே, இன்னும் எத்தனை நாள்தான் என்னோடு கண்ணாம்பூச்சி ஆடுவாய்.

எந்த இளம்பெண்ணை புதிதாய் பார்த்தாலும் என்னவளாய் இருக்கக் கூடுமோ என்று மனது ஒரு நொடி அதிர்ந்து மீள்கிறது. இந்த நரக வேதனையை இன்னும் எத்தனை நாளைக்கு நான் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.

உனக்கு எது பிடிக்கும் என்று தெரியாத நிலையில் இப்பொழுது இருந்தே பரிசுப் பொருட்களை வாங்கி சேமிக்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு பரிசுப் பொருள் உனக்கு பிடிக்காமல் போனால் எனக்காக அதை ஏற்றுக் கொள்ளும் சங்கடம் உனக்கு வேண்டாம்.

நமது முதற் சந்திப்பு கடந்த காலமா அல்லது எதிர்காலமா? இதற்கு முன் நாம் எங்கேனும் சந்தித்திருக்கலாம், ஓரிரு வார்த்தைகள் பேசியும் இருக்கலாம். அவ்வாறு நடந்திருப்பின் நீதான் என்னவள் என்று அந்த கணம் உணர்த்தாமல் போனது ஏன்?

போனது போகட்டும், இனியாவது எனைத்தேடி வருவாயா.

என் அறை முழுதும் என் நினைவலைகளால் நிரம்பி இருக்கின்றன. அந்த நினைவலைகள் மொத்தமும் நீ!

என் வீட்டுப் பூந்தோட்டம் உன் வரவிற்காக காத்திருக்கின்றன, என் வீட்டு வாயிற்படி உன் பாதம் தொட பாதை பார்த்திருக்கின்றன. அதிக நாட்கள் காக்க வைக்காதே, பாவம் அவைகளுக்குப் புலம்பக்கூட இயலவில்லை.

நாம் பேசப்போகும் காதல் மொழிகளுக்காக வார்த்தைகள் காத்துக் கிடக்கின்றன. நாம் சந்தித்துக் கொள்ளப் போகும் இடங்கள் நம்மை எதிர்பார்த்து ஏகாந்தத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. நாம் இட்டுக் கொள்ளப் போகும் முத்தங்கள் நமக்காக தவமிருக்கின்றன. நாம் வாழவிருக்கும் வாழ்க்கை நம்மை வரவேற்க ஆவலுடன் இருக்கிறது. நீ என் மனதை கொள்ளை கொள்ளும் நாளுக்காக ஏக்கத்துடன் நானும் காத்திருக்கிறேன். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

பெண்ணே, காலம் காலமாக வாழும் காதலுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம். காதலை எடுத்துரைக்க ஒரு புது மொழி கண்டு பிடிப்போம். மனித வாழ்வில் காதலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்போம். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

இத்தனை காலமும் நம்மை பிரித்து வைத்திருக்கும் அந்த கடவுளிடம் கேட்டே ஆக வேண்டும், "இன்னும் எத்தனை நாட்கள் என்னவளை என்னிடம் இருந்து மறைத்து வைக்கப் போகிறாய்?".

எனது இரசனையின் உச்சமாய் இருக்கப் போகின்றவளே, கேள் என் மனதின் ஓசையை ஒரு நிமிடம் செவி சாய்த்து.

என்னவளே, நீ எங்கே!

கனவுகளில் சுமந்து வந்த
காதலை நிஜமாக்க
என்னவளே, நீ எங்கே!

கலங்கி நிற்கும் வேளையில்
ஆறுதலாய் தோள் சாய
என்னவளே, நீ எங்கே!

காதல் எனும் புத்தகத்தில்
நம் வாழ்கையை
கவிதையாய் எழுதிவிட
என்னவளே, நீ எங்கே!

கணப்பொழுதும்
எனைவிட்டு பிரியாமல்
என் உயிருக்குள் கலந்துவிட
என்னவளே, நீ எங்கே!

உனது நினைவே எனது நினைவுகளாக
உனக்காக காத்திருக்கும்,
உன் அன்பன்....


-

9 comments:

  1. //இதற்கு முன் நாம் எங்கேனும் சந்தித்திருக்கலாம், ஓரிரு வார்த்தைகள் பேசியும் இருக்கலாம்.//

    ரைட்டு :) :)

    உங்களது இனியவளுக்கான கவிதை: காத்திருப்பின் வலி

    ReplyDelete
  2. DHANS
    சரவண வடிவேல்
    சபரி

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி
    Sivaji Sankar

    ReplyDelete
  4. அருமையான கடிதம்

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக இருந்தது.

    ReplyDelete