Tuesday, April 27, 2010

ஒவ்வொரு நாளும் ஏதாவது

ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றை சந்திக்க வேண்டி இருக்கிறது

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்சனை
கொஞ்சம் தனிமை

சில நேர அமைதி
சட்டென்று பொங்கும் கோபம்

நண்பனின் துரோகம்
சிறு புன்னகை
துளிர்க்கும் கண்ணீர்
வெறுக்கும் சுற்றம்
நீளும் நட்புக் கரம்

முரண் எண்ணங்கள்
ஈர்க்கப்படும் கவனம்
கூடா நட்பு
தெளிந்த மனது

தவிர்க்க முடியா ஆசை
தீராத தேடல்
முடிவில்லா பயணம்
எதிர்கொள்ளும் ஏமாற்றம்

புறம் பேசும் குணம்
விரும்பத்தகாத நிகழ்வு
கேட்கப் படும் உதவி
எதிர்பாரா அதிர்ச்சி

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது

ஆனாலும்,
இது எதுவும் இல்லாவிட்டால்
அது வாழ்க்கையாகவும் இருக்காது..

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

 -
 

Thursday, April 22, 2010

அதிர்வுகள் - 6 (ஒரு கமல் இரசிகரின் கேள்வி)

உங்களுக்கு வினு சக்கரவர்த்தி  யாருன்னு தெரியுமா?

"ஏம்பா, தமிழ் சினிமா பாக்கிற எங்களுக்கு வினு சக்கரவர்த்தி யார்னு தெரியாதா என்ன?" என்று நீங்கள் அங்கே கேட்கும் கேள்வி இங்கே வரை கேட்கிறது.

நீங்க கேட்டு என்னங்க பிரயோஜனம். இத படிங்க.

நேத்து  KTV ல  'நாட்டாமை' படம் பார்த்து கொண்டிருந்தேன் நம் நண்பர்களுடன். நமக்குதா வாய் சும்மா இருக்காதே, இந்த சீன்ல மீனா வருவாங்க , அடுத்த சீன்ல வினு சக்ரவர்த்தி வருவாரு பாருங்கன்னு ஆன்லைன் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன்.

அப்போ நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டார், "அது யாருங்க வினு சக்கரவர்த்தி?".

இதுல வேடிக்கை என்னன்னா, நம்ம நண்பர் ரொம்ப காலமா கமலோட இரசிகர். எனக்கு அப்பதா திடீர்னு ஒரு டவுட்டு வந்துது. கமல் தமிழ் படத்துலதா நடிக்கிராரான்னு.

பின்ன என்னங்க, அந்த காலத்துல இருந்து கமல் இரசிகரா இருக்கிற ஒருத்தருக்கு வினு சக்கரவர்த்தி யாருன்னு தெரியாதுன்னா என்னான்னு நெனைக்கிறது.

இத பத்தி நீங்க கண்டபடி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

*****************************************************

இரவினை கவிதையாய் மொழி பெயர்பேன்

இது "மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு" என்ற பாடலில் வரும் வரி. இந்த பாட்ட கேட்டுட்டு சரி நாமும் நம்ம இரவ கவிதையா மொழி பெயர்தா என்னான்னு தோனுச்சு.

அதனால ஒரு இரவுல உக்காந்து என்னத்த மொழி பெயர்கிரதுன்னு யோசிச்சப்ப....

காலையில பஸ்ல ஏறும்போது அந்த கண்டக்டர் ஐம்பது பைசா மீதி சில்லறை கொடுக்காம ஏமாத்திட்டானே, ம்ம்ம்...

நம்ம என்னதா மாஞ்சு மாஞ்சு பாத்தாலும் நம்மள ஒரு பிகரும் பாக்க மாடேங்குதே, இதுக்கு என்னதா பண்ணுறது!

ஒரு வேலையும் இல்லாட்டியும், ஏதோ கம்பனியோட மொத்த வருமானமும் என்னாலதா அப்படிங்கற மாதிரி பீலா உடுற ஆளுங்கள என்ன பண்ணலாம்?

அட ராத்திரியாவது ருசியா சாப்பிடலாமுன்னு வந்தா, ஒரு ஹோட்டலும் ஒழுங்கா இல்லையே...

ஏங்க, நீங்களே சொல்லுங்க. இதை எல்லாம் கவிதையா மொழி பெயர்தா நல்லாவா இருக்கும். என்னங்க பண்றது ராத்திரில உக்காந்து யோசிச்சா இப்படித்தான் தோணுமோ!

*****************************************************

ஒரு சின்ன கவிதை

எனக்குப் பிடிக்காதவர்களை
நான் திட்டுவதில்லை
சில சமயம்
என்னையே எனக்கு
பிடிப்பதில்லை.

*****************************************************

ஒரு சின்ன ஆசை

என்றாவது ஒரு நாள், ஊர் பேர் தெரியாத, ஆட்கள் இல்லா இடத்தில் நான் தொலைந்து போக வேண்டும்.

*****************************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-

Tuesday, April 20, 2010

பனைமரம் - கடந்த காலம்

வயல் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் ஒரு பனைமரம் தனியே நின்றிருந்தது. ஒரு காலத்தில் அந்த வழி நெடுக பனை மரங்கள் இருந்தன. காலச் சுழற்சியில் மற்ற அனைத்து மரங்களையும் இழந்து ஒற்றை மரத்துடன் நீண்டிருந்தது பாதை.

வயல் காடுகளில் இருக்கும் பனைமரங்கள் பெரும்பாலும் வரப்பு ஓரங்களில் தான் இருக்கிறது. இல்லை, வரப்புகள் பனைமரங்களை ஒட்டியே இருக்கிறது.

அந்த பாதை வழியேதான் நகர்புறச் சாலையை அடைய முடியும். சிறு வயதிலிருந்து பல வருடங்கள் அந்த பாதை வழியே தினமும் பல முறை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கடக்கும் பொழுதும் அந்த பனை மரங்களைப் பார்க்காமல், அதைப் பற்றி நினைக்காமல் சென்றதில்லை.

அப்படியே ஒரு வேளை வேறு ஏதாவது நினைப்பில் சென்று கொண்டிருந்தாலும் அந்த மரங்களின் சலசலப்பு என் நினைவை கலைத்து  தன் இருப்பை சொல்லிவிடும்.

சிறு காற்றுக்கும் ஒலி எழுப்பக் கூடியது பனை ஓலைகள்.பனை ஓலைகளின் சலசலப்பு இரவு வேளைகளில் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

என் வீட்டிற்கு செல்லும் பாதையின் அடையாளமாய் இருந்த மரங்கள் இன்று இல்லை. மரங்கள் அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் கூட இன்று அழிந்து விட்டது. ஆனாலும் அதன் ஞாபகங்களை சுமந்தபடியே இருக்கிறது பாதை.

பனைமரம் என்று கூறினாலே சட்டென்று வறண்ட பூமி ஞாபகம் வருகிறது. எப்படிப் பட்ட வறட்சியையும் தாங்கிக் கொள்ளக் கூடியது பனைமரம். தண்ணீரில்லாமல் பனைமரம் வறண்டு போகிறது என்றால் அந்த ஊறில் நிச்சயம் மனிதர்கள் வாழ முடியாது.

என் பாதையில் இருந்த மரங்களை வறட்சியான காலத்திலும் பார்த்திருக்கிறேன், மழைக்காலங்களிலும் பார்த்திருக்கிறேன். அவை மழைக் காலத்தில் துளிர்விட்டு வறட்சிக் காலத்தில் காய்ந்து விடுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. அவ்வளவு எளிதாக பனை மரங்கள் காய்ந்து விடுவதில்லை.

மற்ற மரங்களைப் போல் கிராமங்களில் பனை மரங்களை யாரும் நட்டு வளர்ப்பதில்லை. தானாகவே வளர்கிறது. என்னுடைய ஆச்சரியம் எல்லாம், பாதை நெடுக எப்படி அந்த பனை மரங்கள் வரிசையாக  முளைத்தன என்பதுதான்.

 சில நேரங்களில் அதன் அருகே சென்று தொட்டு தடவிப் பார்ப்பேன். செதில் செதிலாய் கையை கிளித்துவிடுவது போல் இருக்கும். அந்த பனைமரங்கள் எனக்கு தின்னக் கொடுத்ததுதான் எத்தனை. நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு,  பனம் கோட்டையில் இருக்கும் பூ. அது மட்டுமில்லாமல் பதநீர் மற்றும் விளையாட நுங்கு வண்டி.


வேம்பு, அரச மரங்களைப் போல பனைமரம் நிழலுக்கு அவ்வளவாக உதவாது. ஆனாலும் அதன் மற்ற பயன்பாடுகள் மிக அதிகம். மரத்தின் நுனி முதல் அடிவரை பல விஷயங்களில் பயன்படுகிறது.


பனை ஓலைகள் கூட கத்தி போல கூர்மையாக இருக்கும். சற்று கவனமில்லாமல் கையில் பிடித்தால் அறுத்து விடும்.

பனைமரம் இல்லாத கிராமங்கள் மிக அரிதாகவே இருக்கும். பனைமரம் காலத்தின் சின்னம். வறண்ட பூமியின் அடையாளம். மென்மையின் எதிர்ப்பதம். சலசலப்பின் அங்கீகாரம். தனிமையின் இருப்பிடம்.

கூட்டமாக,  குடும்பம் போல் இருந்த மரங்களில் இன்று இந்த ஒற்றைப் பனைமரம் மட்டும் மிச்சம் இருக்கிறது தனது மிச்ச நாட்களை எதிர் நோக்கி.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Monday, April 19, 2010

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

எல்லோரும் பதிவு எழுதுகிறார்கள்
கவிதை அனுபவம் நகைச்சுவை என்று

ஆனால்  எழுதப்படும்
கரு சுற்றி வருகிறது

சுய கற்பனை
சுய எள்ளல்
சுய பெருமை
சுய பச்சாதாபம்

சந்தித்த இகழ்ச்சி
சந்தித்த மகிழ்ச்சி
சந்தித்த வறுமை
சந்தித்த நண்பர்

எதிர்கொண்ட நிகழ்வு
எதிர்கொண்ட பிரச்சனை
எதிர்கொண்ட காதல்
 எதிர்கொண்ட சமூகம்

சிந்தித்த கற்பனை
சிந்தித்த கவிதை
சிந்தித்த கதை

அனுபவித்த சோகம்
அனுபவித்த வரிகள்
அனுபவித்த பாடல்
அனுபவித்த புணர்ச்சி

எதிர்க்கும் ஜாதி
எதிர்க்கும் மதம்
எதிர்க்கும் கருத்துக்கள்

படைப்பின் நிறைகள்
படைப்பின் குறைகள்
படைப்பின் தத்துவங்கள்

கேட்ட செய்திகள்
பார்த்த புகைப்படங்கள்
நெஞ்சை வருடிய திரைப் படங்கள்
மற்றும் சில...

இது தாண்டி
யாரேனும் எழுதுங்கள்
தயவு செய்து...!

எனக்குத்தான் தோன்றவில்லை
உங்களுக்கும் கூடவா....!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

எதற்காக இந்த வாழ்க்கை!

எதற்கு இந்த வாழ்க்கை!

ஆசைப்பட்டு கேட்ட பொம்மை
கைக்கு கிடைக்காமல்
அதோ பாரு
யாரு வர்றாங்கன்னு
என்று சொல்லி
திசை திருப்பப் படுவதர்க்காகவா

பக்கத்து வீட்டு
பையனைப் போல்
துணி வேண்டும் என்று கேட்டதர்ற்கு
அது ஆயி என்று சொல்லி
கவனம் கவரப்படுவதர்க்காகவா

மிதிவண்டி இருந்தால் தான்
பள்ளிக்கு செல்வேன் என்று சொல்லி
அடம் பிடித்ததற்காக
மிதி வாங்குவதர்க்காகவா

பள்ளிப் படிப்பை தாண்டி
கல்லூரி செல்ல
வசதி இல்லாததை நினைத்து
கண்ணீர் வடிக்கவா

இளமை காலம் தாண்டியும்
பொருளாதாரம் நிமித்தமாக
எதிர் பார்த்த நேரத்தில்
ஆகாத கல்யாணத்தை நினைத்து
மனம் வாடவா

தாமதமாய் அமைந்த மனைவி
எதிர்பார்ப்பை நிறைவு
செய்யாதது கண்டு
மனம் புளுங்கவா

பெற்ற மக்களை
என் பால்யம் போல் அல்லாமல்
வசதியாய் வாழ வைக்க
முடியாததை நினைத்து
சுவற்றில் முட்டிக் கொள்ளவா

அல்லது என் வாழ்க்கை போலவே
எனது பிள்ளைகளின் வாழ்க்கை
மறு சுழற்சியாய்
அமைந்து விட்டதை நினத்து
மனம் புளுங்கவா

எதற்காக இந்த வாழ்க்கை!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Friday, April 16, 2010

என் காதலியின் பெயர்

முதல் முறை உன்னைப் பார்த்தேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்முகம் என்னுள் பதிந்து போனது

மறுமுறை காண்பேனா...
விடை தெரியாது...

விடை தெரியா கேள்விக்கு
விளக்க உரையாய்
வந்து சேர்ந்தாய்
எனது அலுவலகத்திற்க்கே

நீ வந்ததில் இருந்து
என் வேலை நாட்களில்
விடுப்பு என்பதே இல்லாமல்
பதிவு செய்து கொண்டது
என் அலுவலக
வருகை பதிவேடு

எதிரில் இருந்த
கணினி திரையை
மறைத்தது உன் பிம்பம்
என் எண்ணத்தில்

என் எண்ணத்தை
ஊடறுத்த உன் பிம்பத்தை
காண சுற்றி அலைந்தேன்
இதுவரை அறிந்திராத
அலுவலக இடுக்குகளிலும்

கண்டு கொண்டேன்
நீ இருக்கும் இடத்தை
அதோடு என் வேலை மறந்தேன்
என்னை மறந்தேன்

நீ அலுவலகம் வரும் நேரம்
நானும் வந்தேன்
நீ உணவருந்தும் வேளை
நானும் அருந்தினேன்
நீ விடுப்பில் இருந்தால்
நான் நெருப்பில் இருந்தேன்

வாரத்தில் ஏழு நாட்களும்
வேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்

காரணமின்றி உன் இருப்பிடத்தை
ஒவ்வொரு நாளும்
பலமுறை கடந்தேன்

அதற்க்கான காரணம் உனக்கு தெரித்திருக்க
நியாயம் இல்லை
ஏனெனில் நீ இதுவரை
என்னை பார்த்ததில்லை

நினைத்திருந்தேன்
வாழ் நாளின் ஆகச் சிறந்த
தருணங்கள்
கவிதைகள் என்னை ஆட்கொண்ட
நேரமென்று

அதை பொய்யாக்கிச் சென்றது
உன் பெயரை தெரிந்து கொண்ட பொழுது.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Tuesday, April 13, 2010

வாழ்க என் தாயகம்!

பாதி உலர்ந்துவிட்ட இரத்தம் கைகளில் பிசுபிசுத்தது. அதை துடைக்கக் கூட தோன்றாமல் எதிரில் இருந்த காட்சிகளை வெறித்தபடி நின்றுகொண்டிருக்கிறேன். அங்கங்கே சிதறிக் கிடக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்ட முழுமையான, முழுமை அல்லாத உடல்கள். சற்று முன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு எதிராளியை கொல்வதற்கு ஓடிய கைகளும் கால்களும் புற்களின் இடையே சிதறடிக்கப் பட்டு கிடக்கின்றன.

காலையில் இருந்து நிற்காமல் துப்பாக்கியையும் குண்டுகளையும் சுமந்து கொண்டு ஓடியதில் கால்கள் வலிக்க ஆரம்பித்தது. ஓடும் பொழுது மரத்தில் இடித்துக் கொண்டதால் ஏற்பட்ட இடது தோள் சிராய்ப்பு ஏறிய ஆரம்பித்தது. அயர்ச்சியில் அப்படியே கால்கள் மடிய அமர்ந்து விட்டேன்.

"எதற்காக  நான் இங்கு வந்தேன்? எதற்காக இத்தனை பேரை கொன்றேன்? இன்னும் எத்தனை பேரை கொல்ல வேண்டும்? நான் உயிருடன் வீடு திரும்புவேனா? அல்லது கொல்லப்படுவேனா? எப்பொழுது யாரால் கொல்லப்படுவேன்?" மனதில் இடைவிடாமல் கேள்விகள் எழுந்தன.

என்னைப்போல் இத்தனை மரணங்களை மிக அருகில் பார்த்தவர்கள் ரொம்பவும் குறைவாகவே இருப்பார்கள். என்னுடன் ஓடிவந்து கொண்டிருந்த நண்பன் கண்ணெதிரே சீறிவந்த தோட்டாவினால் துளைக்கப் பட்டு இரத்தம் கொப்பளிக்க விழுந்து இறந்தான்.

அதே தோட்டா, இன்னும் சற்று தள்ளி இந்தப் பக்கம் பாய்ந்திருந்தால் இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். இன்னும் எத்தனை முறை இதுபோல் தப்பிக்க நேரிடும் என்று தெரியவில்லை.

இறந்துவிட்ட நண்பனின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் எல்லோரும் இவன் அடுத்த விடுமுறைக்கு மீண்டும் ஊருக்கு வருவான் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மரணச் செய்தி நிச்சயம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்.

தூரத்தில் கூடாரத்தில் யாரோ வலியில் கதறும் சத்தம் கேட்கிறது. தனது உடலின் எந்த உறுப்பை இழந்ததற்காக இந்த கதறல் என்று தெரியவில்லை. என்னால் அதற்க்கு மேல் அங்கு அமர்ந்திருக்கப் பிடிக்கவில்லை.

சற்று தூரம் நடக்க வேண்டும் போல் இருந்தது. கால் வலியை பொறுத்துக் கொண்டு மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

இதுவே ஊரில் இருந்தால் சிறு காயத்திற்கும் மருத்துவமனை சென்று கட்டுப் போட்டு குடும்பமே நாளெல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும். இங்கு மருந்தும் அரவணைப்பும் பகிர்ந்து தான் அளிக்கப் படும்.

நான் எனது நாட்டுக்காக போரிடுகிறேன் என்ற உணர்வு என்னை இயங்கச் செய்கிறது. நாட்டிற்காக என் உயிர் கொடுக்கவும் தயங்கவில்லை.

ஆனால்....

எதிரி நாடாக இருந்தாலும் என் முன் துப்பாக்கி தூக்கி நிற்பவனும் சக மனிதன். இரத்தமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு மனிதன். இறந்துவிட்ட என் நண்பனைப் போலவே அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவனது குழந்தைகள் 'தன் அப்பா திரும்பி  வருவார்' என்று காத்திருக்கும். தன் மகனை காண்பதற்காக அவனது பெற்றோர்கள் வழிமேல் விழி வைத்திருப்பார்கள். பட்டாளத்தானின் மனைவி என்ற பெருமையையும், மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தையும் சுமந்துகொண்டு நாட்களை தள்ளிக் கொண்டிருக்கும் மனைவி இருப்பாள்.

நான் இயக்கப் போகும் துப்பாக்கியின் ஒரு குண்டு அவன் குடும்பத்தின் அத்தனை பேரின் கனவுகளையும் அழித்து விடும் என்ற நினைவு விரல்களை நடுங்கச் செய்கிறது.ஆனால் அவன் துப்பாக்கி குண்டுதான் என் நண்பனை கொன்றது என்பதே என் தயக்கங்களை போக்க போதுமானதாக இருந்தது.

ஆம், பெரும்பாலும் நாட்டுப் பற்று இந்த இடத்தில் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. சற்று முன் என்னுடன் உரையாடிய நண்பன் இப்பொழுது உயிருடன் இல்லாமல் போனதற்கு என் எதிரில் இருப்பவனே காரணம் என்ற உண்மையே உயிரை துச்சமாக மதித்து முன்னேற வைக்கும் முதல் காரணம்.

எனக்கும் அவர்களுக்கும் எந்த முன் பகையும் கிடையாது. அவர்களை எனக்கு யார் என்று கூட தெரியாது. இதற்க்கு முன்னாள் நான் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனாலும் கண்டவுடன் சுட்டுக் கொல்லும் அளவுக்கு வெறியேற்றி அனுப்பி வைக்கப் பட்டுள்ளேன். அப்படி வெறியேற்றியது இந்த நாட்டின் தவறா? அல்லது என்னுள் அதை அனுமதித்தது என் தவறா?

போர்க்களம் அல்லாது வேறு இடத்தில் அவர்களைப் பார்த்திருப்பின், என் தாயகம் வந்திருக்கும் விருந்தினர்கள் என்று ஒரு புன்னகை சிந்தி வரவேற்றிருப்பேன். இங்கு இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.

எதற்காக இந்தப் போர்? நாட்டின் மக்களை காப்பாற்றுவதர்க்காகவா? என்னுடன் பணி புரிபவன் என் நண்பன். நாட்டிற்குள் நான் சாப்பிடும் சோற்றுக்காக உழைத்துக் கொண்டிருப்பவன் என் நண்பன். ஒரு நண்பனை பலி கொடுத்து இன்னொரு நண்பனை காப்பாற்றவா?

இப்பொழுது எனக்கு கால் வழி மறந்து போனது. மனது வலிக்கிறது.

மனதில் ஏறிய வலி கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டு பார்வையை மறைக்கிறது.

தினமும் எனக்கு உணவு கொடுத்து உடற்பயிச்சி ஆயுதப் பயிற்சி கொடுத்து "போய் அந்த நாட்டு ராணுவ வீரர்களை கொன்று வா" என்று இந்த அரசாங்கம் என்னை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தப் போரில் நான் இறந்து விட்டால் அடுத்து வரும் அரசு நிகழ்ச்சியில் என் மனைவியிடம் பதக்கம் கொடுப்பார்கள். என் கணவன் நாட்டுக்காக உயிர் கொடுத்தான் என்று பெருமைப் பட்டுக் கொள்வால்தான். ஆனால், "அப்பாவை பாக்கணும் போல இருக்கு" என்று சொல்லும் குழந்தைக்கு என்ன கூறி அறுதல் படுத்துவாள்.

போர் நின்ற பின் இந்த இடத்தில் வந்து தேடித் பாருங்கள். யாரோ ஒரு ராணுவ வீரன் தன் மனைவியின், குழந்தையின், பெற்றோரின் ஞாபகமாக வைத்திருந்த பொருட்கள் கிடைக்கலாம். அது அவன் உயிர் துறந்த பொழுது சிதறி விழுந்ததாக இருக்கும். முடிந்தால் அதை அவன் குடும்பத்திடம் சேர்த்து விடுங்கள்.

அதோ, குண்டு வெடித்த வெளிச்சத்தில் எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் முன்னேறி வருவது தெரிகிறது. என் உடம்பு மீண்டும் முறுக்கேறுகிறது, இப்பொழுது என் கண்களைப் பார்க்காதீர்கள்,அதில் தெரியும் கொலை வெறி உங்களைப் பயம் கொள்ளச் செய்யும். என் தாயகம் காக்க மீண்டும் முன்னேறுகிறேன்.

ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் சந்திப்போம்.
வாழ்க என் தாயகம்!
-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Monday, April 12, 2010

அதிர்வுகள் - 5 (பிகரு மக்கா பிகரு)

என்னத்த சொல்றது, நம்ம தலை எழுத்தோ என்னவோ எந்த பிகர பாக்க ஆரம்பிச்சாலும் அடுத்த சில மாசத்துல அதுக்கு கல்யாணம் ஆயிடுது. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்த பொண்ணுக்கு போன மாசம் கல்யாணம், போன மாசம் பாத்தா பொண்ணுக்கு இந்தமாசம் கல்யாணம்.

இப்படியே போய்கிட்டு இருந்தா கல்யாணம் ஆகாத பொண்ணுகளை எல்லாம் கூட்டி வந்து கொஞ்ச நாளைக்கு சைட் அடரா மக்கா, அவளுக்கு கல்யாணம் ஆகட்டுமுன்னு சொல்லுவாங்க போல.

ஏங்க, எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா இல்ல உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்குதா. இருந்தா சொல்லுங்களே அத கேட்டாவது கொஞ்சம் மனச ஆத்திக்கறேன்.

***********************************************

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தான் சும்மா இருக்காம ஏ மூக்க நானே ஓடசுகிட்டேன். நம்ம நண்பர் அனுப்பிய பாட்டு ரொம்ப நல்லாருந்துது. ஒரு நாப்பது தடவையாவது கேட்டிருப்பேன்.

கேட்டு ரசிசுபுட்டு பேசாம இருக்காம நமக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட போயி ஒரு நல்ல பாட்டு இருக்குது கேக்கரையான்னு ரொம்ம்ம்ப பாசமா கேட்டேன்.

அதுக்கு அது சொல்லுச்சு "இப்போ நா ரொம்ப பிசியா இருக்கேன் அப்புறம் கேக்கிறேன்".

அட இதே ஒரு பையன் சொல்லிருந்தா சரிடா மச்சான்னு வந்திருப்பேன். ஆனா நம்ம கேட்டும் ஒரு பொண்ணு இப்படி சொல்லிடுச்சேன்னு வந்தது பாருங்க ஒரு கோவம்!

அதுக்கப்புறம் எத்தனையோ தடவை அந்த பொண்ணு கேட்டும் அந்த பாட்ட கேக்கறதுக்கு  தரவே இல்லையே. நம்ம தன்மானத்த எப்படிங்க விட்டு கொடுக்கறது. ஏங்க நா செஞ்சது சரிதானுங்களே?

அதே பாட்ட நம்ப நண்பர்கள் கிட்டயும் கேளுங்கன்னு கொடுத்தேன். 'ம்' னு சொன்னதோட சரி. அப்புறம் திரும்பிக்கூட பாக்கல.

இதுல யாருங்க பரவால்ல ரகம்? நீங்களே சொல்லுங்க.

***********************************************

ஒரு சின்ன கவுத மாதிரி


நாம்நோக்கிய பிகர் பிறரை நோக்கின்
அப்பிறரை தூக்கி விடு.

***********************************************

 ரைட்டு.
கொல வெறி உங்க கண்ணுல தெரியுது.
அபீட்டு.....

 ***********************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Friday, April 9, 2010

அடியே சிறுக்கி..! - என் கிராமத்து காதல்

அடியே சிறுக்கி..!

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

இழந்த பழம் பறிக்க நீ எடுத்து எரிஞ்ச கல்லு
எம்மேலபட்டு மனசு ஆயிடுச்சு நூறு சில்லு

குட்டி குட்டி மேகம் போல வெடுசிருக்கு காடெல்லாம் பருத்தி
அத பறிக்க வரும்போது நானும் வந்தேனே நிதம் உன்ன துரத்தி

ஏ மனசு பூரா நெரஞ்சுபுட்டே கண்ணான கண்ணாட்டி
அப்பவே முடிவாச்சு நீதா எம் பொண்டாட்டி

மெல்ல மெல்ல ஏத்துகிட்ட நீயும் என் காதல
அதனால கேட்டுப்புட்டேன் உயரின் இசை என் காதால

மச்சான்னு ஒருதடவ கூப்பிட்டுட்டு மறஞ்சுகிட்ட
திரும்பி பாத்து காணாம  நா ஒரு நிமிஷம் மாஞ்சுபுட்ட

புளிய தோப்புக்குள்ள குடுத்தியே ஆசையா ஒரு முத்தம்
அத நெனைச்சு மனசுக்குள்ள பாட்டுதா நித்தம்

வரப்பு மேல கால வெச்சு  ஏறும் போது உன் பாதம்
பணித்தண்ணி வழுக்கிவிட போகுதடி இது மார்கழி மாதம்

கம்மா தண்ணி எல்லாம் கர புரண்டு ஓடுதடி
சிறுக்கி உன் நினைப்பால எம் மனசு வாடுதடி

அழகான பொண்ணப் பார்த்தா யாருக்கும் ஆச வரும்
என்னோட காதலுக்கு இப்படியா மோசம் வரும் 

சுண்டி இழுக்குதடி உன் கண்டாங்கி புடவ கட்டு
மொத்த ஊரும் கெலம்புதடி உன்னைத்தா பொண்ணு கேட்டு

எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
இதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான்

மத்தவங்க சொல்லக்கேட்டு என்ன மறந்திடாத சின்னப்பொண்ணு
மறந்திட்டா ஏ ஒடம்ப திங்கத்தா காத்திருக்கு இந்த மண்ணு

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

----------------------------------------

இந்த கிராமத்து காதல பல பேரு படிச்சு பாக்க
மனசு வெச்சு பதியுங்க உங்க வாக்க

-

Tuesday, April 6, 2010

வாழ்க்கை சவாரி !

கண் விழித்த போது
நீல நிற குதிரை ஒன்று
அழகு காட்டி நின்றது

என் விருப்பம் கேட்காமலே
என்னை ஏற்றிக் கொண்டு
நடக்கத் தொடங்கியது

ஏறியது குதிரை என்று தெரியாமலே
துவங்கியதென் பயணம்

 ஏறிய குதிரையின் சூட்சுமம் புரிவதர்க்குள்
பயண தூரத்தின்
கால் பங்கை கடந்திருதேன்

அப்போதும் சூட்சமம் மட்டுமே புரிந்திருந்தது
 பிரயாணத்தின் பாதை புரியவில்லை

எனது பாதையில் குறுக்கும்
நெடுக்குமாக பல குதிரைகள்
அலைந்து  கொண்டிருந்தன

சில குதிரைகள்
என்னை இடறிச் சென்றன
சில என்னை
உடன் அழைத்துச் சென்றன

எனக்கு என் குதிரையில்
பயணிக்க பிடிக்கவேயில்லை

மற்ற குதிரைகள் என்னை வசீகரித்தன
இருந்தபோதும் நான் பயணிப்பதை
நிறுத்தவே இல்லை

ஒரு கட்டத்தில் எனது குதிரை
துள்ளலுடன் பயணிக்க ஆரம்பித்தது
எனது பாதை மறந்து

குதிரை சில நேரம்
சிலிர்த்துக் கொன்டது
தாகத்தில் அலைந்தது
வெறி கொண்டு ஓடியது

மாறிய பாதையை
மாற்ற முடியவில்லை
நிதானித்த பின்பு

கிடைத்த பாதையில்
தொற்றிக் கொண்டன
சுமைகளும்

சுகமாய் இருந்த சுமைகள்
நடக்க நடக்க
எரிச்சலூட்டின

உதற நினைத்தாலும்
சுமைகள் குதிரையை
விடுவதாய் இல்லை

சுமைகளாலும்
நெடுந்தூர பயனத்தாலும்
இதோ எனது குதிரை
 களைத்து விட்டது

தனது பயணத்தை
முடித்துக் கொள்ள
விரும்புகிறது

நானும் இறங்கிக் கொள்கிறேன்
அடுத்த குதிரையில் எனது
பயணத்தை எதிர்நோக்கி!


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.


-

Saturday, April 3, 2010

நான் வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்!

நான் நானாய் பிறந்ததற்குப் பதில்
வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்.

ஒரு பறவையாய்
கல்லாய்
மரமாய்
காகிதமாய்

ஆனால்...

பறவையாய் இருப்பின்
மாமிச பட்சிணிகளால்
அகோரமாய் அடித்து உண்ணப்படலாம்

கல்லாய் இருப்பின்
கலவரத்தில் யாரோ ஒருவரின்
மண்டையப் பிளக்க
உபயோகப் படுத்தப் படலாம்

மரமாய் இருப்பின்
பற்றி எறியும் தீ நாக்குகள்
சிறு குழந்தைகளின்
தசையை தீண்ட
காரணமாய் இருந்து விடலாம்

காகிதமாய் இருப்பின்
ஏதோ ஒரு ஊரின், நாட்டின்
நாட்டு மக்களின்
கருப்பு பக்கங்களைப் பற்றி
எழுத பயன்படுத்தப் படலாம்

இப்படி வேறு எதுவாக பிறப்பினும்
அதிலும் சில சங்கடங்கள்
இருப்பது கண்டு
நான் நானாக பிறந்ததர்க்கே
மகிழ்வுறுகிறேன்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Thursday, April 1, 2010

அதிர்வுகள் - 4 (பச்சோந்தி மனசு)

நேற்று முன்தினம் ஈரோடு பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன், ரயில்வே ஸ்டேசன் செல்வதற்காக.அப்பொழுது இரவு ஒன்பது மணி.மழை பெய்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் நின்றிருப்பேன். மழையும் நின்று விட்டது. மூன்று பஸ்கள் கடந்து சென்றன, எதுவுமே நிற்கவில்லை. மனதிற்குள் அந்த பஸ் டிரைவர்களை திட்டிக் கொண்டே நின்றிருந்தேன். ஒரு பஸ் என்னையும் மதித்து நின்று ஏற்றிக் கொண்டது. மகிழ்ச்சி.

"ட்ரைவர்னா இப்படி இருக்கணும். பயணிகளின் அவசரம் புரிந்து நடந்து கொள்ளும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்" நினைத்துக் கொண்டேன்.

மேலும் "ஏன் இந்த டிரைவரைப் போல் எல்லோரும் இருப்பதில்லை" என்று நினைத்துக்கொண்டே வந்தேன். அந்த டிரைவரின் மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருந்தது.

இறங்கும் இடம் வந்தது. பேருந்து நின்றது. இறங்க முயன்ற பொழுது, படியின் கீழ் கால் நனையும் அளவிற்கு மழைத் தண்ணீர். இறங்கினால் செருப்பு நனைந்துவிடும்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டே இறங்கினேன்.

"டிரைவர் சுத்த கிறுக்கனா இருப்பான் போல, நிருத்தரதுக்கு வேற இடமா இல்ல! எங்கிருந்துதான் வர்றானுகளோ!"


*******************************************

ரயில்வே ஸ்டேஷன் வந்தாயிற்று. ட்ரெயின் வர இன்னும் சற்று நேரம் இருந்தது,

பிளாட்போர்ம்மில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரினை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எதேட்சியாக எதிரில் இருந்த பெயர்ப் பலகையை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த வாசகம்

"மாமிச சிற்றுண்டி சாலை"

அசைவ உணவு பழக்கம் உள்ள எனக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அசைவம் சாப்பிட நினைப்பவர்கள் கூட சற்று தங்குவார்கள். அந்த பெயர்ப் பலகையை வேறு மாதிரி வைத்திருக்கலாம், "அசைவ உணவகம்" என்று.

 இப்படிப் பட்ட பெயரை வைக்க யோசித்தவர் யார் என்று தெரியவில்லை!.

*******************************************

ஒரு  சின்ன கவிதை

கை விசிறி
மின் விசிறியை ஏளனமாகப் பார்த்தது
மின்சாரம் இல்லாத போது.

*******************************************

ஒரு  சின்ன ஆசை

கூட்ஸ் வண்டியின் கடைசியில் இணைக்கப் பட்டிருக்கும் பெட்டியில், இரவில், முழு நிலவன்று தனிமையில் அமர்ந்து பிரயாணிக்க வேண்டும்.

*******************************************

(அதிரும்...)

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-