Tuesday, May 25, 2010

பழக்கமில்லாத பாதைகள்

அந்த வீட்டிற்கு குடி வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. புதிய வீடு, புதிய இடம், புதிய மனிதர்கள். மெயின் ரோட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். அது தாண்டியும் தெரு நீண்டு செல்கிறது. ஆனால், வீட்டை தாண்டி ஒரு நாளும் அந்த தெரு வழியே சென்றதில்லை.

நினைத்துப் பார்த்தால் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இந்த இரண்டு வார காலங்களில் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. வீடு வந்ததும் சட்டென்று சாலையிலிருந்து விலகி வீட்டிற்குள் நுழைந்து விடுகிறேன். தொடர்ந்து சற்று தூரம் நடந்து பார்க்கலாம் என்று எண்ணியதே இல்லை.

இங்கு மட்டும் அல்ல, எந்த ஒரு இடத்திற்கு முதலில் சென்றாலும், சாலையில் இருந்து பிரிய நேரிட்டாலோ அல்லது சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டாலோ அதற்கு மேல் அந்த சாலை எங்கு செல்கிறது என்று யோசிப்பதுண்டு.

பால்ய வயதில் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் ஒரு விஷயத்தை உணர்திருக்கிறேன். வீடு சென்று சேரும் வரையில் உள்ள பாதை உறவினரின் வீட்டிற்கானது. வீட்டை அடைந்தவுடன் அதற்க்கு மேல் உள்ள சாலை எங்குசெல்கிறது என்ற கேள்வி ஆரம்பமாகிவிடும், தொடர்ந்து சென்று பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் விடமாட்டார்கள். ஓரிரு சமயம் ஆர்வ மிகுதியில் பெரியவர்களிடம் அவ்வழியே அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறேன். எதற்கு என்று கேட்டால் எதுவும் சொல்லத் தெரியாமல் "சும்மா" என்று கூறியிருக்கிறேன். "சும்மா அங்க போய் என்ன பண்ணப் போறே? போய் விளையாடு போ" என்று கூறி விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். தனியே சென்று பார்பதற்கும், ஒரு வேளை திரும்பி வர வழி தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கும். யாரும் பார்க்காத வேளையில் எவ்வளவு தொலைவில் இருந்து வீட்டைப் பார்க்க முடிகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் சென்று சாலை வளைவுகளில் நின்று பார்த்துவிட்டு திரும்ப ஓடி விந்து விடுவேன்.

ஆனாலும் மனதிற்குள் இடைவிடாமல் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே யார் இருப்பார்கள்? அடுத்து வரும் ஊரின் பெயர் என்ன? இதே பாதையில் தொடர்ந்து ஒவ்வொரு ஊராக தாண்டிச் சென்று கொண்டே இருந்தால் கடைசியில்எந்த ஊரில் போய் முடியும்?

பாதைகள் முடிவில்லாமல் நீள்கிறது. பல ஊர்களை தனது கரைகளாகக் கொண்டு சிற்றாறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையும் ஊர் பெயர்களைக் கொண்டு அடையாள படுத்தப் படுகிறது. சிட்டாற்றுச் சாலையிலிருந்து கால்வாயைப்போல் தெருக்கள் பிரிகின்றன.

நாம் தினம்தோறும் சென்று வரும் பாதைகள், புதிய பாதைகளைப் போல் சுவாரஸ்யம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் பழக்கப்பட்ட பாதையின் காரணமாக அந்த சாலையைப் பற்றி நினைவில்லாமல் தன்னிச்சையாகவே நடக்கிறோம். சாலையோர வீடுகளையோ சில வீடுகளின் வித்யாசமான அமைப்புகளையோ கவனிப்பதில்லை. ஆனால் நடந்துகொண்டிருப்பது அறிமுகமில்லாத சாலை மற்றும் இங்கு அடிக்கடி வரமாட்டோம் எனும்போது சுற்றுப் புறங்களை உற்று நோக்கச் சொல்கிறது.

இன்று வீட்டை தாண்டிச் செல்லும் சாலையில் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் நடக்க ஆரம்பித்தேன். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்த சாலை நடந்து செல்லும் பொழுது வேறு மாதிரியாக தெரிந்தது. சிறிது தூரம் நடந்தவுடன் வேறு ஊருக்கு வந்துவிட்டது போல் தோன்றியது. இரு புறங்களிலும் உள்ள வீடுகளை பார்த்தபடியே மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.

பெரிய பெரிய வீடுகள், சில வீடுகளில் சொந்த உபயோகத்திற்காக நான்கு ஐந்து கார்கள் வைத்திருந்தனர். கார் செட்டின் இடத்தில் தாராளமாக இரண்டு குடும்பங்கள் தங்கலாம். சிலருக்கு வாழ்க்கை இப்படியும் அமைகிறது, சிலருக்கோ பிளாட் பார்மிற்கு கூட தகராறு ஏற்படுகிறது. இந்த இரண்டும் அல்லாத இடைப்பட்ட நிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்தபடி நடையை தொடர்ந்தேன்.

சற்று தூரத்தில் சிதிலமடைந்த மிகப் பெரிய வீடு. அதன் எதிரே சிறியதாக ஆனால் நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு அழகான வீடு. வீடு சிரிதா பெரிதா என்பதில் ஒன்றுமே இல்லை, அதில் வசிக்கும் மனிதர்கள் அவர்கள் வீட்டை பராமரிக்கும் விதம் இதைப் பொறுத்தே வீடு உயிரோட்டம் பெறுகிறது.

இலக்கில்லாமல் புதிய பாதையில் நடக்கும் போது ஒரு சிறு பிரச்சனை. பாதை இரு திசையில் பிரிந்து சென்றன. எதை விட்டு எதை தேர்ந்தெடுப்பது, நிச்சயம் இரண்டு பாதையும் வேறுவேறு அனுபவத்தை கொடுக்கும். எந்த அனுபவத்தை தேர்ந்தெடுப்பது. இடது புறமாக சென்ற பாதையை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையும் இப்படித்தான், நாம் தேர்ந்தெடுக்கும் துறை, அதில் நம் பணியை அமைத்துக் கொள்ளும் விதம் ஆகியவை நம் வாழ்க்கையின் அனுபவத்தை தீர்மானிக்கின்றன.

வழக்கமான பாதையில் நடக்கும் போது யாரும் நம்மை சந்தேகமாக பார்த்தாலும் நாம் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. ஆனால், சம்பந்தம் இல்லாத தெருவில் நடக்கும் போது மற்றவர்கள் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை சந்தேகமாகப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. சந்தடி மிக்க தெருக்களில் யாரும் அதுபோல் கவனிப்பதில்லை. ஆனால் குடியிருப்பு மட்டுமே உள்ள தெருக்களில் புதிதாக யாராவது தென்பட்டால் சற்று உற்றுப் பார்க்கவே செய்கிறார்கள். ஒருவேளை நிறுத்தி யார் நீங்கள், யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வது. சும்மா சுற்றிப் பார்க்க வந்தேன் என்று கூறுவதா, அப்படி கூறினாலும் சுற்றிப் பார்க்க இது என்ன சுற்றுலா தளமா என்று கேட்டால் என்ன சொல்வது.

நமக்கும் பாதைக்கும் உள்ள தொடர்பின் மூலம் எது? ஒரு பாதையில் செல்ல வீடு, பள்ளி, அலுவலகம், உறவினர்கள் இப்படி ஏதாவது ஒன்று தேவைப்படுகிறதோ? இலக்கில்லாமல் ஒரு புதிய பாதையில் நடக்கும் போது ஏன் மனதில் ஒரு சிறு பதைபதைப்பு ஏற்படுகிறது. பாதை மாறி எங்காவது தொலைந்துவிடுவோம் என்ற பயமா? புதிய விஷயத்தை ஏற்க மனதுக்கு சற்று நேரம் பிடிக்கும் போலும்.

புதிய பாதை மட்டும் அல்ல, புதிய பள்ளி, அலுவலகம், உறவு, முயற்சி என்று அனைத்துமே மனதை சற்று பதைபதைக்க வைக்கிறது.

வனாந்தரத்தின் இடையே நடப்பதை விடவும் ஒரு பாதையில் நடப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. பாதை இருப்பதால் நிச்சயம் இங்கு மனிதர்கள் இருப்பார்கள், எதாவது ஆபத்து என்றாலும் சத்தம் போட்டு உதவியாவது கேட்கலாம் என்று மனது சமாதானம் கொள்கிறது. மனதுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப் படுகிறது.

பாதையே இல்லாத ஊர்கள் இருக்குமா? அப்படி இருந்தால் மக்கள் வயல் வரப்புகள் ஊடாக நடந்துதான் செல்ல வேண்டும் என்றால், மனது பாதுகாப்பை பற்றி எண்ணத் துவங்குகிறது. இதுவரை செல்லாத பாதையாக இருந்தாலும், 'பாதை' மனதுக்கு ஒரு வகையில் பாதுகாப்பு உணர்வை தருகிறது.

நடந்தது போதும் என்று தோன்றவே திரும்பிவிட நினைத்தேன். மனதில் சின்ன நெருடல், ஒரு வீட்டின் வாசலில் நின்றபடி ஒருவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்பொழுது எப்படி சட்டென்று திரும்புவது, அப்படி திரும்பினால் அவர் என்ன நினைப்பார். இன்னும் சற்று நடந்து அவர் பார்வையில் இருந்து மறைந்தபின் திரும்பலாமா? ஒரு வேளை சற்று தொலைவில் வேறு யாராவது இதே போல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது. எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன்.

வீட்டை நெருங்கிய போது, இதுவரை சாலையின் அந்தப் பக்கம் இருந்தே வீட்டை பார்த்திருக்கிறேன். இதுதான் முதல் முறை இந்தப் பக்கமாக வீட்டை நெருங்குவது. வீடும் தெருவும் வித்தியாசமான கோணத்தில் தெரிவதாக இருந்தது.

கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் நிறைய நடந்திருக்கிறேன். நான் படித்த கல்லூரி ஒரு கிராமத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலையின் அருகில் இருந்தது. ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். மாலை வேளைகளில் கிராமத்தை நோக்கி செல்லும் பாதையில் நடப்போம். ஒவ்வொரு நாளும் வேறு வேறு பாதையில் நடப்போம்.

அறிமுகம் இல்லாத பாதையில் கும்பலாக நண்பர்களுடன் நடப்பதற்கும் தனியாக நடப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. நண்பர்களுடன் செல்லும் பொழுது உரையாடலின் சுவாரஸ்யத்தில் பல விசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

பள்ளி நாட்களில் நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும். ஆனால் அதுவரை அந்த சாலையில் சென்றதில்லை அதுதான் முதல் முறை. சிறிது நேரம் அவன் வீட்டில் பொழுதை கழித்து விட்டு எங்காவது வெளியில் சென்று வரலாம் என முடிவு செய்தோம்.

அங்கிருந்து சற்று தூரத்தில் ஒரு பனைமரக் காடு இருப்பதாகவும் அங்கு யாருமே வரமாட்டார்கள் என்றும் கூறினான். உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் வா உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றான். எனக்கு தைரியம் இருந்தது, இல்லை என்பதை விட, அவன் வீட்டை தாண்டிச் செல்லும் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எனக்கு ஆர்வத்தை கொடுத்தது.

அதிலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத மண்பாதை. சைக்கிள் பயணம். மீண்டும் ஒரு புதிய, இதுவரை சென்று பார்க்காத சாலையில் செல்ல வேண்டும் என்பதே என்னை அவனுடன் போகத் தூண்டியது.

ஏனோ நகரங்களில் இருக்கும் பரபரப்பான தெருக்கள் என்னை கவர்வதில்லை. அந்த சந்தடியில் இருந்து வெளியில் வந்தால் போதும் என்றாகிவிடும். அதுமட்டுமில்லாமல் சில வேளைகளில் தெருக்களின் அமைப்பு ஒரே மாதிரியாக குழப்பம் விளைவிப்பதாக இருக்கும். புற நகர்ப் பகுதிகளும் கிராமங்களும் தங்களுடைய நீண்ட சாலைகளில் ஒருவித ஈர்ப்பை கொண்டிருக்கின்றன.

நாம் அடிக்கடி சென்று வந்த பாதையில் பயணிப்பது ஒருவித சந்தோசம் என்றால், இதுவரை சென்றிராத பாதையில் பயணிப்பதும் ஒருவித சந்தோசம். முக்கியமாக, சுற்றுலா செல்லும் போது பார்க்காத பல ஊர்களுக்கு பயணிப்போம். முடிவில்லாத நெடுஞ்சாலைகள். இடையிடையே எதிர்ப்படும் ஊர்கள்.

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து முடிவில்லாமல் ஊர் ஊராக செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்கையில் பயணங்கள் முடிவதே இல்லை. நாம் பயணம் செய்ய வேண்டிய பார்த்தறியாத எத்தனையோ பாதைகளும் அங்கு ஏற்படக்கூடிய அனுபவங்களும் நமக்காக காத்திருக்கின்றன. பயணிப்போம்.


-

Friday, May 21, 2010

இல்லாத இயல்பு

மனிதனைப் போல் மற்ற உயிரினங்கள் எதுவும் தன் இயல்பை அடிக்கடி மாற்றிக் கொள்வதில்லை.

இயல்பு மாற்றம் எண்ணங்களின் தோற்றம். எண்ணத்தின் வெளிப்பாடு சூழ்நிலையின் வசம். மனிதனின் இயல்பு நிலை மாற்றக் காரணிகளுள் முக்கியமானது சுயநலம்.

இயல்பாய் இருப்பது மிகவும் கடினம் என்பதை நம்மில் பலர் அனுபவரீதியாக அறிந்திருக்கிறோம்.

இயல்பாய் இருப்பது என்றால் உள்ளூர பயத்தை வைத்துக் கொண்டு வெளியில் தைரியமாய் எப்போதும் போல் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதல்ல. தன் பய உணர்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்துதலே.

மனதில் ஏற்படும் உணர்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதே இயல்புத் தன்மை. ஆனால், அது பெரும்பாலும் சாத்தியப் படுவதில்லை. ஒருவரின் மேல் நட்புணர்ச்சி ஏற்படும் போது அதை எளிதாக வெளிப் படுத்தி விடலாம். அதனால் நன்மை அன்றி தீமைக்கான சாத்தியக் கூறுகள் மிக சொற்பம். அதுவே கோபம் அல்லது காமம் எனும் பொழுது உணர்சிகளை மறைத்து இயல்பு நிலையை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது தன் ஆளுமையை திணித்தால், ஆளுமைக்கு உட்படுபவன் இயல்பு எதிர்ப்பதாகவே இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் பெரும்பான்மை எதிர்க்கும் மனநிலையாகவே இருக்கும்.

அப்படி எதிர்ப்பதும், பணிந்து போவதும் தன்(சூழ்)நிலையைப் பொறுத்ததே. என்ன மாதிரியான பிரச்சனை வந்தாலும் கவலைப்படாது எதிர்த்து நிற்பது இயல்பு நிலையாகிறது. பிரச்சனைக்கு பயந்து எதிர்ப்பை காட்டாமல் அடங்கிச் செல்வது தன் இயல்பு நிலை மீறலாகிறது.

நம்மில் எத்தனை பேர் சுய ஆதாயத்திர்க்காகவும், பயத்தினாலும் ஒவ்வொரு நாளும் இயல்பை மீறாமல் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏதாவதொன்று நம் இயல்பை குலைக்க தயாராக உள்ளது.

தனது சொத்தை பிறர்  அபகரிக்க நினைக்கும் பொழுது இளைத்தவனாய் இருப்பின் எதிர்ப்பதும் வலுதவனாய் இருந்தால் ஒதுங்கிக் கொள்வதும் இயல்பு அல்ல.

சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே  கற்பிக்கப் படுகிறது. சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் பொழுது அங்கே இயல்பு நிலை வெகு தூரம் ஆகிவிடுகிறது. வேண்டுமானால் இப்படிக் கூறலாம், 'சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வதே நம் இயல்பு'.

சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வது, நமது சிந்திக்கும் திறனால் எனபது உண்மை. ஆக, சிந்தித்து பகுத்து அறிந்து கொள்வதும் இயல்பாய் இல்லாமல் போவதற்கு காரணியாகும்.

குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை உள்ளபடியே வெளிப்படுத்துவது இயல்பு. காரணம் கற்பித்து மாற்றிக்கொள்வதோ, சமாதானம் செய்து கொள்வதோ இயல்பில் இருந்து விடுபடுதலே ஆகும்.

இயல்பு மாற்றமும் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. இயல்பு மாறாமல் இருக்க நினைத்தால் வாழ்வாதாரம் நிச்சயம் பிரச்சனைக்கு உள்ளாகிவிடும்.

நம்மிடம் இன்று இல்லாத, தொலைத்துவிட்ட, பிடுங்கப்பட்ட இயல்பை எப்பொழுதும் தேடியவாறே இருக்கிறோம்.

-

Monday, May 17, 2010

காதல் - நினைவுகள் தாங்கி

உன் 
          தலையுதிர் பூ
          வரவுக்கான காத்திருப்பு
          ஒரு புன்னகைக்கான தவம்
          நினைவுகளால் உறங்காத இரவுகள்
          அலைபேசி அழைப்புக்கான எதிர்பார்ப்பு

மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை
நீ தவறவிட்ட கைக்குட்டை
உனக்கு பிடித்த பாடலின் முனுமுனுப்பு

இனி, எதுவும் இல்லை.

உன் திருமண அழைப்பை
எனக்கு அனுப்பாமலாவது இருந்திருக்கலாம்.

-

Friday, May 14, 2010

காணாமல் போன நட்சத்திரம்

அதிகம் மேகங்கள் இல்லாத வானம். ஒளிரும் நட்சத்திரங்கள். மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே வானத்தில் சிதறியிருந்தன நட்சத்திரங்கள்.

பல நாட்களுக்குப் பிறகு இவ்வாறு நட்சத்திரங்களைப் பார்ப்பது மனதை என்னவோ செய்தது. பள்ளி நாட்களில் கிராமத்தில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை இரசித்தது ஞாபகம் வருகிறது. அதில் மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அதே போல் வேறு மூன்று நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதர்க்காக பல இரவுகள் தேடியதுண்டு.

கிராமத்தில் பல நட்சத்திரங்களுக்கு வித்யாசமான பெயர்கள் உண்டு. 'கட்ட குத்துகால் மீன்', 'செட்டிய கெடுத்த ரெட்டி மீன்' இப்படி பல. ஆனால் இந்த இரண்டு மட்டும் தான் இப்போதைக்கு நினைவில் இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் நட்சத்திரங்களை இரசிக்கிறார்கள். பெரும்பாலும் தொலைகாட்சி தற்கால மனிதர்களின் இரவுப் பொழுதுகளை தனதாக்கிக் கொண்டு விட்டது. இரவானால் தொலைகாட்சி முன் அமர்ந்து விடுகிறோம். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் வானத்தை இரசிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை அல்லது நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறோம்.

நகர் புறங்களில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரத்தை இரசிக்க பல வீடுகளில் வாசலோ மொட்டை மாடியோ கிடைப்பதில்லை. நாம் வீட்டிற்க்குள் அடைபட்டுக் கொள்ளும் நேரம் தவிர்த்து மற்ற இரவு நேரங்களில் நாம் பார்க்கா விட்டாலும் நட்சத்திரங்கள் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கவிஞர்களின் கவிதைகளில் கூட நிலவு இடம்பெற்ற அளவுக்கு நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது. நிலவு ஒன்றுதான் இருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதற்கே மதிப்பு அதிகமாக உள்ளது போலும். அதனால்தான் நிலவு இரசிக்கப் பட்ட அளவுக்கு நட்சத்திரங்கள் இரசிக்கப்படவில்லையோ.

இந்த நட்சத்திரம் எத்தனை மனிதர்களை பார்த்திருக்கும். எத்தனை யுகங்களை கடந்திருக்கும். எத்தனை நிகழ்வுகளை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.

இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சில நட்சத்திரங்கள் உண்மையில் இல்லாமல் இருக்கலாம். பல நூறு ஒளி ஆண்டு தொலைவில் இருந்த நட்சத்திரம், பல நூறு வருடங்களுக்கு முன் உமிழ்ந்த ஒளி இன்று நம்மை வந்தடைகிறது. அதைத்தான் நாம் இன்று காண்கிறோம் என்று சில அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவேளை நாம் பார்க்கும் ஒரு சில நட்சத்திரங்கள் வெறும் ஒளி ஏற்படுத்தும் மாயையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

நான் பார்த்த நட்சத்திர வரைபடங்கள் எல்லாம் ஐந்து கோணங்கள் உடையதாகவே இருக்கிறது. ஆனால் நேரில் பார்க்கும் பொழுது அப்படி இருப்பதில்லை. அதன் ஒளிக் கற்றைகள் எல்லா திக்கிலும் சிதறடிக்கப் படுகின்றன.

எத்தனை விதங்கள் சிறிதும் பெரிதுமாய். வெகு சிறு புள்ளியாய், சற்று சிறிதாய், பிரகாசமாய் பழுப்பு நிறம் கலந்ததாய். சில நட்சத்திரங்களின் அமைப்பு கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகளாய்த் தெரிகின்றன. சில நேர் வரிசை, சில இடைப் புள்ளி, சில ஊடு புள்ளி.

பார்த்துக்கொண்டிருந்த நட்சத்திரத்தை ஒரு மேகக் கற்றை சிறிது நேரம் மறைத்து விட்டு விலகியது. மேகங்கள் நகர்கையில் நட்சத்திரங்கள் நகர்வதாகவே தோற்றம் அளிக்கும். மேகங்களுக்கு இடையே அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்ணாம்பூச்சி ஆடும் நட்சத்திரம், அழகோ அழகு.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இதே நட்சத்திரங்கள் தான் இருந்தனவா? சில நட்சதிரங்களாவது அழிந்து காணாமல் போயிருக்கும். அந்த நட்சத்திரங்களைப் பற்றி யாருக்கும் தெரியாமலே இருக்கக் கூடும்.

ஒரு நாள் இரவு திடீரென அனைத்து நட்சத்திரங்களும் காணாமல் போய் விட்டால் இந்த வானம் எப்படி இருக்கும்? விடுமுறை நாள் பள்ளிக் கூடமாய் வெறுமையை போர்த்திக் கொண்டுவிடும் அல்லவா?

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Thursday, May 6, 2010

அதிர்வுகள் - 7 (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு)

லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு

காதலிக்கும் போது இருக்கும் சந்தோஷத்த விட  அந்த பொண்ண மொத மொதல்ல பாத்து, பேசி, மெல்ல மெல்ல லவ்ஸ் ஸ்டார்ட் ஆகும் பாருங்க அதுதா.. அதுதா சந்தோசமே.

வர்ற போற பொண்ணுகள எல்லாம் சும்மா வேடிக்க பாத்துகிட்டு (அட.. அதாங்க சைட் அடிக்கிறது) இருக்கும் போது அதுல ஏதோ ஒன்னு மனசுக்கு ரொம்பவும் புடுச்சு போகும். அப்புறம் என்ன, கொஞ்ச நாளைக்கு அந்த பொண்ணு எங்க போனாலும் அது கண்ணுல படர மாதிரியே திரிய வேண்டியது. அதுவும் போனா போகுதுன்னு அப்பப்போ நம்மள ஒரு பார்வை பாத்து வைக்கும்.

என்னதா சொல்லுங்க, நம்மள ஒரு ஓரப் பார்வை பாக்கும் போது அப்படியே மண்டகுள்ள சுறுங்கும், நெஞ்சு லப் டப்புன்னு அடிக்கிறதுக்கு பதிலா தம் தும்முன்னு அடிச்சுக்கும், பக்கத்துல இருக்கிற நண்பன் 'டேய் தல வலிக்குதுடா' ன்னு சொன்னாக் கூட சம்பந்தம் இல்லாம கேனத்தனமா சிரிக்கத் தோணும்.

எப்பவாவது பாக்கறது மாறி நம்மள அடிக்கடி பாக்க ஆரம்பிக்கும். அப்பவே மனுஷனுக்கு பாதி கிறுக்கு புடுச்சு போயிரும். எந்த நேரமும் அவ நெனப்பாவே இருக்கும். அடுத்து கொஞ்ச நாள்ல நம்மள பாத்து லேசா சிரிக்க ஆரம்பிக்கும்.

இதுக்கபுரந்தா ஒரு சின்ன தயக்கம், யாரு முதல்ல பேசுறதுன்னு.  ஆனாலும் பாருங்க இந்த பசங்கதா மொதல்ல போயி தத்து பித்துன்னு எதையாவது உளறி பேச்சை ஆரம்பிப்பாங்க.

அதுக்கப்புறம் லவ், ஊர்சுத்தறது, பிரச்சனை, முடிஞ்சா கல்யாணம்(?!)  அப்படின்னு போகும். ஆனா, மொத மொதல்ல ஒரு பொண்ண பாக்கறதுல இருந்து ரெண்டு பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகறது வரைக்கும் இருக்கிற ஒரு த்ரில், கிக்கு இதெல்லாம் காதலிச்சதுக்கப்புரம் இல்லைன்னே தோணுது.

ரொம்ப அனுபவிச்சுதா பாட்டு எழுதிருக்காங்க

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

********************************************************
 பார்க்க பார்க்க பிடிக்குமா?

"என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்".

ஆனா எனக்கு எந்த பொண்ண பாத்தாலும் உடனே பிடிக்குது. ஆனா பார்க்க பார்க்க கொஞ்ச நாள்ல பிடிக்காம போயிருது.

ஒரு வேளை அந்த டயலாக்கு பசங்களுக்கு பொருந்தாது போலிருக்கு!

********************************************************

ஒரு சின்ன கவிதை

நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
தாங்கள் சரிவர எழுதப் படவில்லை என்று
என் மீது கோபம் கொண்டன
என்னவளைப் பார்த்த பின்பு.

********************************************************
இவளோ தூரம் வந்துடீங்க, ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க.
********************************************************

-

Wednesday, May 5, 2010

வாழ்க்கை கட்டமைப்பு

வாழ்க்கை எதிர்பார்ப்புகளால், எண்ணங்களால்,  உணர்வுகளால்  கட்டமைக்கப் பட்டுள்ளது.  எதிர்பார்ப்புகள் வாழ்கையை சுவாரஸ்யமாக்குகிறது.  எதிர்பாராத நிகழ்வுகள் வாழ்க்கையோடு சேர்ந்தே பயணிக்கிறது.

வாழ்க்கையும் எதிர்பார்ப்பும் முறையே உடலும் சுவாசமும். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை சுவாசம் இல்லாத உடல். சவம். சுவாசம் போல் எதிர்பார்ப்பும் ஒரு அனிச்சை செயல். மறுத்தாலும். ஆசை இல்லாமல் இருக்க ஆசை கொண்டதைப் போல்.

ஏமாற்றங்கள், அசுவாரஷ்யங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவதன்றி ஓட்டத்தை நிறுத்துவதில்லை. ஏமாற்றங்கள் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் வாழ்கையை வழி நடத்துகின்றன.

சீரான வாழ்க்கை என்று யாருக்கும் நிரந்தரமாய் இருப்பதில்லை நிரந்தரம் அற்ற  வாழ்க்கையில். தெரிந்தும் நிரந்தரம் தேடும் வாழ்க்கை.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது அவரவர் எண்ணங்களையும் தேடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. நிறைவேறிய விருப்பங்களைக் கொண்டு வாழ்க்கை தன்னை அர்த்தப் படுத்திக் கொள்கிறது. 'வரையறுக்கப்பட்ட அர்த்தம்' இல்லா வாழ்க்கை.

ஒரு தேடலில் மற்றொரு தேடல் இடைவெட்டுகிறது. தேடலின் நோக்கம் சிதறடிக்கப் படுகிறது. தேடலின் நோக்கம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கிறது, நோக்கத்தின் எதிர்பார்ப்பு தேடலை துரிதப் படுத்துகிறது. தேடலே வாழ்க்கை.

உணர்வுக் கோர்வை வாழ்க்கையின் இயல்பு. தேவையினால் தேடல், தேடலினால் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பினால் ஏமாற்றம், ஏமாற்றத்தினால் கோபம், கோபத்தினால் இழப்பு, இழப்பினால் தேவை. இப்படி எதாவது ஒன்றினால் மற்றொன்று.

வாழ்க்கையின் ஒப்பனைகள் உணர்வுகளை பூர்த்தி செய்வதில்லை. தரித்துவிட்ட ஒப்பனைகள் அழிக்க முடியா வண்ணம் வாழ்க்கையோடு ஒட்டிக் கொள்கிறது. ஒரு ஒப்பனை களைய மற்றொரு ஒப்பனை தேவைப் படுகிறது. ஒப்பனைக்குள் சிக்கிய உணர்வுகள் நசுக்கப் படுகின்றன.

ஒரு உணர்வை மற்றொரு உணர்வு ஆளுமை செய்யும் பொழுது எண்ணங்கள் அலைகழிக்கப் படுகின்றன. ஆளுமைக்குட்பட்ட உணர்வு எந்நேரமும் கிளர்ந்தெழ தயாராய் இருக்கிறது. ஒரு உணர்வுக்கு மொற்றோன்று வடிகாலாக முடிவதில்லை.

பார்க்கப்படும் விதத்தில் ஒருவரின் வாழ்க்கை மற்றவரால் கற்பனைத் தோற்றம் கொள்கிறது. பார்க்கப்படும் விதமும் உண்மைத் திரிபுக்கு காரணமாகும். தோற்ற மயக்கம்.

மகிழ்ச்சி, அது தன்னை எல்லா இடங்களிலும் மறைத்துக் கொள்கிறது. எண்ணமும், தேவையும் தனக்கு விருப்பமான இடங்களில் அதை தேடி எடுக்கிறது. அதை அடுத்து எண்ணம், மீண்டும் மீண்டும் அதே இடத்தை தேடுகிறது சந்தோசத்தை எதிர்நோக்கி.

பிடிக்காத பிம்பங்களைப் பார்க்காமல் இமைகள் மூடிக்கொள்ளும் வேளைகளில் எண்ணங்கள் திறந்து கொள்கின்றன. எண்ணங்களை மூட மனதுக்கு தெரிவதில்லை.

எதிர்பார்புகளும், எண்ணங்களும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. செல்லும்.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Tuesday, May 4, 2010

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

அவசியம் இல்லா அலைபேசி அழைப்பு
எங்களின் சுவாரஸ்ய உரையாடலை
கத்தரிக்கும்

அழகான பெண்
அவனிடம் மட்டும்
சிரித்து பேசுகையில்
நட்புப் காகிதத்தில்
சிறு கசங்கல் ஏற்படும்

நட்பில் ஒளிவு மறைவு
இல்லை என்றாலும்
சில விஷயங்கள்
மறைக்கப் பட்டே தீரும்

விவாதத்தில் தன்
கருத்து தவறாயினும்
முன்னிறுத்தப்படும்

இவைகளெல்லாம்
திட்டமிட்டு நடப்பதில்லை
ஆகவே நாங்கள்
நண்பர்கள் தான்.

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-