Tuesday, April 13, 2010

வாழ்க என் தாயகம்!

பாதி உலர்ந்துவிட்ட இரத்தம் கைகளில் பிசுபிசுத்தது. அதை துடைக்கக் கூட தோன்றாமல் எதிரில் இருந்த காட்சிகளை வெறித்தபடி நின்றுகொண்டிருக்கிறேன். அங்கங்கே சிதறிக் கிடக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்ட முழுமையான, முழுமை அல்லாத உடல்கள். சற்று முன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு எதிராளியை கொல்வதற்கு ஓடிய கைகளும் கால்களும் புற்களின் இடையே சிதறடிக்கப் பட்டு கிடக்கின்றன.

காலையில் இருந்து நிற்காமல் துப்பாக்கியையும் குண்டுகளையும் சுமந்து கொண்டு ஓடியதில் கால்கள் வலிக்க ஆரம்பித்தது. ஓடும் பொழுது மரத்தில் இடித்துக் கொண்டதால் ஏற்பட்ட இடது தோள் சிராய்ப்பு ஏறிய ஆரம்பித்தது. அயர்ச்சியில் அப்படியே கால்கள் மடிய அமர்ந்து விட்டேன்.

"எதற்காக  நான் இங்கு வந்தேன்? எதற்காக இத்தனை பேரை கொன்றேன்? இன்னும் எத்தனை பேரை கொல்ல வேண்டும்? நான் உயிருடன் வீடு திரும்புவேனா? அல்லது கொல்லப்படுவேனா? எப்பொழுது யாரால் கொல்லப்படுவேன்?" மனதில் இடைவிடாமல் கேள்விகள் எழுந்தன.

என்னைப்போல் இத்தனை மரணங்களை மிக அருகில் பார்த்தவர்கள் ரொம்பவும் குறைவாகவே இருப்பார்கள். என்னுடன் ஓடிவந்து கொண்டிருந்த நண்பன் கண்ணெதிரே சீறிவந்த தோட்டாவினால் துளைக்கப் பட்டு இரத்தம் கொப்பளிக்க விழுந்து இறந்தான்.

அதே தோட்டா, இன்னும் சற்று தள்ளி இந்தப் பக்கம் பாய்ந்திருந்தால் இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். இன்னும் எத்தனை முறை இதுபோல் தப்பிக்க நேரிடும் என்று தெரியவில்லை.

இறந்துவிட்ட நண்பனின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் எல்லோரும் இவன் அடுத்த விடுமுறைக்கு மீண்டும் ஊருக்கு வருவான் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மரணச் செய்தி நிச்சயம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்.

தூரத்தில் கூடாரத்தில் யாரோ வலியில் கதறும் சத்தம் கேட்கிறது. தனது உடலின் எந்த உறுப்பை இழந்ததற்காக இந்த கதறல் என்று தெரியவில்லை. என்னால் அதற்க்கு மேல் அங்கு அமர்ந்திருக்கப் பிடிக்கவில்லை.

சற்று தூரம் நடக்க வேண்டும் போல் இருந்தது. கால் வலியை பொறுத்துக் கொண்டு மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

இதுவே ஊரில் இருந்தால் சிறு காயத்திற்கும் மருத்துவமனை சென்று கட்டுப் போட்டு குடும்பமே நாளெல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும். இங்கு மருந்தும் அரவணைப்பும் பகிர்ந்து தான் அளிக்கப் படும்.

நான் எனது நாட்டுக்காக போரிடுகிறேன் என்ற உணர்வு என்னை இயங்கச் செய்கிறது. நாட்டிற்காக என் உயிர் கொடுக்கவும் தயங்கவில்லை.

ஆனால்....

எதிரி நாடாக இருந்தாலும் என் முன் துப்பாக்கி தூக்கி நிற்பவனும் சக மனிதன். இரத்தமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு மனிதன். இறந்துவிட்ட என் நண்பனைப் போலவே அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவனது குழந்தைகள் 'தன் அப்பா திரும்பி  வருவார்' என்று காத்திருக்கும். தன் மகனை காண்பதற்காக அவனது பெற்றோர்கள் வழிமேல் விழி வைத்திருப்பார்கள். பட்டாளத்தானின் மனைவி என்ற பெருமையையும், மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தையும் சுமந்துகொண்டு நாட்களை தள்ளிக் கொண்டிருக்கும் மனைவி இருப்பாள்.

நான் இயக்கப் போகும் துப்பாக்கியின் ஒரு குண்டு அவன் குடும்பத்தின் அத்தனை பேரின் கனவுகளையும் அழித்து விடும் என்ற நினைவு விரல்களை நடுங்கச் செய்கிறது.ஆனால் அவன் துப்பாக்கி குண்டுதான் என் நண்பனை கொன்றது என்பதே என் தயக்கங்களை போக்க போதுமானதாக இருந்தது.

ஆம், பெரும்பாலும் நாட்டுப் பற்று இந்த இடத்தில் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. சற்று முன் என்னுடன் உரையாடிய நண்பன் இப்பொழுது உயிருடன் இல்லாமல் போனதற்கு என் எதிரில் இருப்பவனே காரணம் என்ற உண்மையே உயிரை துச்சமாக மதித்து முன்னேற வைக்கும் முதல் காரணம்.

எனக்கும் அவர்களுக்கும் எந்த முன் பகையும் கிடையாது. அவர்களை எனக்கு யார் என்று கூட தெரியாது. இதற்க்கு முன்னாள் நான் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனாலும் கண்டவுடன் சுட்டுக் கொல்லும் அளவுக்கு வெறியேற்றி அனுப்பி வைக்கப் பட்டுள்ளேன். அப்படி வெறியேற்றியது இந்த நாட்டின் தவறா? அல்லது என்னுள் அதை அனுமதித்தது என் தவறா?

போர்க்களம் அல்லாது வேறு இடத்தில் அவர்களைப் பார்த்திருப்பின், என் தாயகம் வந்திருக்கும் விருந்தினர்கள் என்று ஒரு புன்னகை சிந்தி வரவேற்றிருப்பேன். இங்கு இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.

எதற்காக இந்தப் போர்? நாட்டின் மக்களை காப்பாற்றுவதர்க்காகவா? என்னுடன் பணி புரிபவன் என் நண்பன். நாட்டிற்குள் நான் சாப்பிடும் சோற்றுக்காக உழைத்துக் கொண்டிருப்பவன் என் நண்பன். ஒரு நண்பனை பலி கொடுத்து இன்னொரு நண்பனை காப்பாற்றவா?

இப்பொழுது எனக்கு கால் வழி மறந்து போனது. மனது வலிக்கிறது.

மனதில் ஏறிய வலி கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டு பார்வையை மறைக்கிறது.

தினமும் எனக்கு உணவு கொடுத்து உடற்பயிச்சி ஆயுதப் பயிற்சி கொடுத்து "போய் அந்த நாட்டு ராணுவ வீரர்களை கொன்று வா" என்று இந்த அரசாங்கம் என்னை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தப் போரில் நான் இறந்து விட்டால் அடுத்து வரும் அரசு நிகழ்ச்சியில் என் மனைவியிடம் பதக்கம் கொடுப்பார்கள். என் கணவன் நாட்டுக்காக உயிர் கொடுத்தான் என்று பெருமைப் பட்டுக் கொள்வால்தான். ஆனால், "அப்பாவை பாக்கணும் போல இருக்கு" என்று சொல்லும் குழந்தைக்கு என்ன கூறி அறுதல் படுத்துவாள்.

போர் நின்ற பின் இந்த இடத்தில் வந்து தேடித் பாருங்கள். யாரோ ஒரு ராணுவ வீரன் தன் மனைவியின், குழந்தையின், பெற்றோரின் ஞாபகமாக வைத்திருந்த பொருட்கள் கிடைக்கலாம். அது அவன் உயிர் துறந்த பொழுது சிதறி விழுந்ததாக இருக்கும். முடிந்தால் அதை அவன் குடும்பத்திடம் சேர்த்து விடுங்கள்.

அதோ, குண்டு வெடித்த வெளிச்சத்தில் எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் முன்னேறி வருவது தெரிகிறது. என் உடம்பு மீண்டும் முறுக்கேறுகிறது, இப்பொழுது என் கண்களைப் பார்க்காதீர்கள்,அதில் தெரியும் கொலை வெறி உங்களைப் பயம் கொள்ளச் செய்யும். என் தாயகம் காக்க மீண்டும் முன்னேறுகிறேன்.

ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் சந்திப்போம்.
வாழ்க என் தாயகம்!
-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

1 comment:

  1. வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete