Tuesday, April 20, 2010

பனைமரம் - கடந்த காலம்

வயல் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் ஒரு பனைமரம் தனியே நின்றிருந்தது. ஒரு காலத்தில் அந்த வழி நெடுக பனை மரங்கள் இருந்தன. காலச் சுழற்சியில் மற்ற அனைத்து மரங்களையும் இழந்து ஒற்றை மரத்துடன் நீண்டிருந்தது பாதை.

வயல் காடுகளில் இருக்கும் பனைமரங்கள் பெரும்பாலும் வரப்பு ஓரங்களில் தான் இருக்கிறது. இல்லை, வரப்புகள் பனைமரங்களை ஒட்டியே இருக்கிறது.

அந்த பாதை வழியேதான் நகர்புறச் சாலையை அடைய முடியும். சிறு வயதிலிருந்து பல வருடங்கள் அந்த பாதை வழியே தினமும் பல முறை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கடக்கும் பொழுதும் அந்த பனை மரங்களைப் பார்க்காமல், அதைப் பற்றி நினைக்காமல் சென்றதில்லை.

அப்படியே ஒரு வேளை வேறு ஏதாவது நினைப்பில் சென்று கொண்டிருந்தாலும் அந்த மரங்களின் சலசலப்பு என் நினைவை கலைத்து  தன் இருப்பை சொல்லிவிடும்.

சிறு காற்றுக்கும் ஒலி எழுப்பக் கூடியது பனை ஓலைகள்.பனை ஓலைகளின் சலசலப்பு இரவு வேளைகளில் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

என் வீட்டிற்கு செல்லும் பாதையின் அடையாளமாய் இருந்த மரங்கள் இன்று இல்லை. மரங்கள் அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் கூட இன்று அழிந்து விட்டது. ஆனாலும் அதன் ஞாபகங்களை சுமந்தபடியே இருக்கிறது பாதை.

பனைமரம் என்று கூறினாலே சட்டென்று வறண்ட பூமி ஞாபகம் வருகிறது. எப்படிப் பட்ட வறட்சியையும் தாங்கிக் கொள்ளக் கூடியது பனைமரம். தண்ணீரில்லாமல் பனைமரம் வறண்டு போகிறது என்றால் அந்த ஊறில் நிச்சயம் மனிதர்கள் வாழ முடியாது.

என் பாதையில் இருந்த மரங்களை வறட்சியான காலத்திலும் பார்த்திருக்கிறேன், மழைக்காலங்களிலும் பார்த்திருக்கிறேன். அவை மழைக் காலத்தில் துளிர்விட்டு வறட்சிக் காலத்தில் காய்ந்து விடுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. அவ்வளவு எளிதாக பனை மரங்கள் காய்ந்து விடுவதில்லை.

மற்ற மரங்களைப் போல் கிராமங்களில் பனை மரங்களை யாரும் நட்டு வளர்ப்பதில்லை. தானாகவே வளர்கிறது. என்னுடைய ஆச்சரியம் எல்லாம், பாதை நெடுக எப்படி அந்த பனை மரங்கள் வரிசையாக  முளைத்தன என்பதுதான்.

 சில நேரங்களில் அதன் அருகே சென்று தொட்டு தடவிப் பார்ப்பேன். செதில் செதிலாய் கையை கிளித்துவிடுவது போல் இருக்கும். அந்த பனைமரங்கள் எனக்கு தின்னக் கொடுத்ததுதான் எத்தனை. நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு,  பனம் கோட்டையில் இருக்கும் பூ. அது மட்டுமில்லாமல் பதநீர் மற்றும் விளையாட நுங்கு வண்டி.


வேம்பு, அரச மரங்களைப் போல பனைமரம் நிழலுக்கு அவ்வளவாக உதவாது. ஆனாலும் அதன் மற்ற பயன்பாடுகள் மிக அதிகம். மரத்தின் நுனி முதல் அடிவரை பல விஷயங்களில் பயன்படுகிறது.


பனை ஓலைகள் கூட கத்தி போல கூர்மையாக இருக்கும். சற்று கவனமில்லாமல் கையில் பிடித்தால் அறுத்து விடும்.

பனைமரம் இல்லாத கிராமங்கள் மிக அரிதாகவே இருக்கும். பனைமரம் காலத்தின் சின்னம். வறண்ட பூமியின் அடையாளம். மென்மையின் எதிர்ப்பதம். சலசலப்பின் அங்கீகாரம். தனிமையின் இருப்பிடம்.

கூட்டமாக,  குடும்பம் போல் இருந்த மரங்களில் இன்று இந்த ஒற்றைப் பனைமரம் மட்டும் மிச்சம் இருக்கிறது தனது மிச்ச நாட்களை எதிர் நோக்கி.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

7 comments:

  1. பனை ஓலைகளில் பதநீர் சாப்பிட்ட நினைவு திரும்பவும்

    ReplyDelete
  2. //மங்குனி அமைச்சர் said...

    பனை ஓலைகளில் பதநீர் சாப்பிட்ட நினைவு திரும்பவும்//

    நன்றி.

    பதநீர் சுண்ணாம்பு கலந்ததா, கலக்காததா அமைச்சரே!

    ReplyDelete
  3. //வறண்ட பூமியின் அடையாளம். மென்மையின் எதிர்ப்பதம். சலசலப்பின் அங்கீகாரம். தனிமையின் இருப்பிடம்.//
    நல்ல நடை

    //பதநீர் சுண்ணாம்பு கலந்ததா, கலக்காததா அமைச்சரே!//
    நல்ல கேள்வி :)

    ReplyDelete
  4. அழகான பதிவு.. ஒரு காலத்தில் பனை மரத்திலேறி நொங்கு வெட்டியிருக்கிறேன்.
    பனங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அதற்கு அம்மரத்தையே வெட்டவேண்டும்.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "உழவன்" "Uzhavan"

    சிறு வயதில் பனங்குருத்து சாப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete