Saturday, March 13, 2010

வலைப் பதிவரும் ஒரு பத்திரிகையாளரே

பதிவர்கள் எல்லோருக்கும் வணக்கம்.

நாட்டில் நடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய ஒரு ஊடகம் பத்திரிகை. ஆனால் அந்த பத்திரிகையில் எழுதும் வாய்ப்புகள் எழுத நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிலரது எழுத்துக்களும் அது எந்தப் பத்திரிகையில் வெளிவருகிறது என்பதைப் பொறுத்தே அச்செய்தி எத்தனை மக்களை சென்றடைய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இன்று தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் சட்டசபை வளாகம் கட்டி முடிக்கப் படாத நிலையில் பகுதி வேலை செட் என்று தமிழ் மக்கள் எத்தனை பேர்களுக்கு தெரியும். இதை நான் எந்த ஒரு பத்திரிகையில் படிப்பதற்கு முன் நம் சக வலைப் பதிவர் மர்மயோகி அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இரண்டு கோடி செலவில் செட் என்பது தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு வேண்டுமானால் சாதாரண விசயமாக இருக்கலாம். அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கோடியில் புரளுபவர்கள் அல்லவா? ஆனால் ஒரு கடைக்கோடி தமிழனுக்கு இரண்டு கோடி என்பது தன் வாழ்நாளிலும் எட்ட முடியாத ஒரு இலக்கு.

ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதையாக, சற்று நேரம் வந்து போகும் மேலிடத்துக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அவ்வாறு செலவிடப்படும் பணம் நிரந்திர தீர்வுக்காகவும் அல்ல என்பதுதான் மன வேதனைக்குரியது.

இப்படி ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, நாம் படித்தறியாத எத்தனையோ விஷயங்கள் பதிவுகளில் படிக்கப் படாமலே தூங்கிக் கொண்டிருக்கின்றன. பதிவுகளை தேடும் பொழுது எது நமக்கு விருப்பமான ஒன்றோ அதை மட்டுமே தேர்வு செய்து படிப்பது அனைவருக்கும் இயற்கையானதே. ஆனாலும் நம் பதிவர்கள் மறைந்து கிடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கையின் செய்திகள் சென்றடையும் மக்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால் அப்பத்திரிக்கையில் வரும் செய்திகளுக்கு எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்பதை இன்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த , குடும்பத்தில் அனைவரும் படிக்க ஏற்றத்தக்கதாய் இருந்த பத்திரிக்கைகள் இன்று மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு இணையாக வளம் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் காலத்தின் கொடுமை இன்னும் அதை குடும்பம் சகிதமாக படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது மக்களின் அறிவுடைமை என்று முழுமையாக கூறிவிட முடியாது, அவர்களின் அறிவு அவ்வாறு மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது.

பத்திரிகைக்கும் பதிவருக்கும் மிகப்பெரிய வித்யாசம் என்னவென்றால், பத்திரிகையாளரின் செய்தி மக்களால் படிக்கப் பட்டே ஆக வேண்டும். இல்லையெனின் அந்த பத்திரிகையின் வருமானம் குறையும். அது நீடித்தால் அந்த செய்தியாளரின் வேலை பறிபோகும். அதனால், செய்தியில் உண்மையை விடவும் சுவாரஸ்யமே முக்கியமாகிப் போகின்றது. செய்தியின் நம்பகத்தன்மையும் குறைகிறது. ஆனால் பதிவாளருக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, அவர்கள் பெரும்பாலும் ஆதாய நோக்கோடு எழுதுவதில்லை. தங்கள் கருத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தவே தம் எழுத்தின் மூலம் முயற்சிக்கிறார்கள்.

பதிவு என்பது வெறும் கேளிக்கைகளுக்கும் சுய விமர்சனங்களுக்கும் என்பது மாறி இன்று வெகு ஜன உடகங்களும் திரும்பிப் பார்க்கும் வலிமையை பெற்றிருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் பதிவர்களுக்குள்ளும் இருக்கும் போட்டி பொறாமைகள் அதற்கொரு தடைக்கலாகவே இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. அவர்களது பெரும்பாலான நேரம் தங்களுக்குள் மாற்றி மாற்றி திட்டி எழுதிக்கொள்ளவே செலவிடப்படுகிறது. இது கவலைக்குரிய விசயமாகும்.

பதிவராய் இருப்பதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு செய்தியாலருக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கலாம். ஒரு கவிஞன் செய்தி கூற விரும்பலாம். இப்படிப்பட்ட வாய்ப்புகள் பதிவாலனுக்கே உள்ள ஒரு வரப்பிரசாதம்.

அதுவே ஒரு பத்திரிகையில் வேலை செய்யும் செய்தியாளர் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும். சினிமா பற்றி செய்தி எழுதும் ஒருவர் தனக்கு கிடைத்த அரசியல் விஷையத்தைப் பற்றி அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. அரசியல் பற்றி எழுதுபவர் தனக்கு தெரிந்த சினிமா விசயங்களை சுலபமாக பதிவேற்றிவிட முடியாது.

இன்னும் சொல்லப் போனால், ஒரு விதத்தில் பதிவாளர்களின் வேலை அவர்களின் முழு நேரப் பனி அல்ல. இருந்தும் தன்னாலான செய்திகளைத் திரட்டி வெளியிடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களை விட பதிவர்களுக்கு அதிக சுதந்திரம் என்றே சொல்லலாம். தனக்கு கிடைக்கும் செய்திகளை வெளியிட யாரிடமும் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. தான் அளித்த செய்திகள் முழுதும் பதிவேருமா அல்லது பதிப்பாளரின் விருப்பத்திற்க்கேற்ப மாற்றியமைக்கப்படுமா என்று கவலை கொள்ள தேவையில்லை.

ஒரு குறை என்னவெனில், தவறான செய்திகளும் பதிவேற்றப்படும் வாய்ப்புகள் பதிவர்களின் பதிப்புகளில் அதிகம் என்பதை மறுக்க இயலாது. அது பதிவாலரைப் பொறுத்தே அமைக்கிறது.

எழுத்து சுதந்திரம் என்பதை பதிவுகள் எழுத ஆரம்பித்த பின்புதான் உணர்ந்தேன். தனது எண்ணங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஒருவர் அதிக பட்சம் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். அதுவே ஒரு பதிவாக இருப்பின் முகம் அறியா எத்தனையோ நபர்களிடம் சென்றடைகிறது. அவர்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

செய்திகள் மட்டுமன்றி, கதைகள் கவிதைகள் புனைவுகள் என்று ஏராளமான விஷயங்கள் பதிவுலகில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பத்திரிகை தவறான செய்தியை வெளியிடுகிறது என்றால் அது பொது மக்களிடையே என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதே மாதிரியான விளைவுகள் தான் பதிவுகளில் தவறான செய்தி வெளிவரும் போதும் ஏற்ப்படுகிறது.

ஆக, ஒரு பதிவாளர் எந்த விதத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகரானவர்கள் என்பது உண்மை.

பதிவுகளை எழுதும், படிக்கும் நண்பர்களே, இன்னும் பல விஷயங்கள் இது போன்று உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது தங்களின் பின்னூட்டத்தைப் பொறுத்தே அமையும்.

எனது எழுத்துக்களில், கருத்துக்களில் ஏதேனும் நிறை, பிழை இருப்பின் பின்னூட்டம் இட்டுச் செல்லுங்கள். அது எனது குறைகளை திருத்திக்கொள்ள, நிறைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பேருதவியாய் இருக்கும்.


-

7 comments:

 1. மிக சரியாக சொன்னீர்கள்..பதிவர்கள் தங்களுக்குள் குறை கூறிக் கொண்டிருக்காமல், இது போன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளைபதிந்தால் நாம் நமது இலக்கை சிறப்பானதாக செயல்படலாம்

  ReplyDelete
 2. சிறப்பான ஒரு திறனாய்வு. பெரும்பாலான பதிவர்கள் நல்ல முறையிலேயே செயல்படுகின்றனர்.
  ஒருவரை ஒருவர் திட்டி கொள்வதற்கு என்றே சில பதிவர்கள் குழுமங்களாக செயல் படுகின்றனர்.
  அது பற்றி கவலை பட தேவை இல்லை

  நல்ல ஒரு பதிவு தொடருங்கள்.
  .

  ReplyDelete
 3. சமூகத்தை விமர்சித்து பிரபல பதிவராகிய நண்பர் பாலா வாழ்க.

  பார்த்து... பார்த்து... ஆட்டோ :)

  ReplyDelete
 4. மர்மயோகி
  கக்கு - மாணிக்கம்
  சபரி

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  எழுதும் பொது ஆடோ வரும்னு நினைக்கவே இல்லையே....... ம்ம்ம்ம்!?

  ReplyDelete
 5. வணக்கம் சார்...ரொம்ப நாளைக்கு பிறகு யதார்த்தமான உண்மையான ஒரு பதிவை படித்தேன். ஒரு தொழில் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. பதிவுலகமும் கூடிய விரைவில் ஒரு சிலருக்கு தொழிலாகவும் ஒரு சிலருக்கு போட்டி போட்டு ஒருவரையொருவர் நசுக்க முனையும் களமாகவும் மாறக்கூடும் என்பது எனது கணிப்பு...

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி ஜீவன்சிவம்,

  //பதிவுலகமும் கூடிய விரைவில் ஒரு சிலருக்கு தொழிலாகவும் ஒரு சிலருக்கு போட்டி போட்டு ஒருவரையொருவர் நசுக்க முனையும் களமாகவும் மாறக்கூடும் என்பது எனது கணிப்பு...//

  நீங்கள் கூறுவது உண்மைதான். ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் எந்த ஒரு தொழில்நுட்பமும் வெகு விரைவிலேயே தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றன.

  ReplyDelete
 7. Hi,

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

  ReplyDelete