Monday, March 22, 2010

கிராமத்து பேருந்து

கிராமங்களில் உள்ள பேருந்துகளில் பிரயாணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம். நகரத்தில் உள்ள டவுன் பஸ் போல் பரபரப்போ ஏறி இறங்க அடிதடியோ இருக்காது. எந்தெந்த கிராமங்களின் வழியாக செல்கிறதோ அந்த ஊர்களில் எல்லாம் அந்த பஸ் ஒரு நீண்ட நாள் நண்பனைப் போலவே நடத்தப்படும்.

சிறிது  நாட்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுடைய ஊருக்கு அதிகம் பஸ் வசதி கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டோ அல்லது மூன்று முறையோதான் பஸ் சென்று வருகிறது.

அந்த கிராமத்து மனிதர்களைப் போலவே பேருந்துகளும் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது. புஷ் பாக் சீட்டுகள் கிடையாது, காதுகள் அதிரும் D.T.S. ஒலி கிடையாது. ஆனால் திறந்த ஜன்னல் வழியே நம் கேசம் கலைக்க ஓடி வரும் தூய்மையான காற்று உண்டு.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் உறவினர்களைப் போல் குடும்ப நலன் விசாரிக்கின்றனர். அவர்களுக்குள் பயணி என்ற உறவை தாண்டி ஒரு நட்பு எப்பொழுதும் இழையோடுகிறது.

பயணிகளை ஏற்றி இறக்குவதில் அவசரம் காட்டுவதில்லை. நிறுத்தி நிதானமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர், அதனால் ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ தேவை இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வர நடத்துனர் அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு கூட்டமும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பயணி பஸ்ஸில் ஏறிய பிறகு பயணச்  சீட்டிற்கு காசு குறைவாக இருக்கிறது என்றார். அதற்க்கு நடத்துனர் சரி அடுத்த முறை  வரும் பொழுது கொடுங்கள் என்று கூறினார். அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை அது.

பயணிகளோடு ஆடு கோழிகளும் பயணிப்பதை பார்க்க முடிகிறது. நடத்துனருக்கு தெரியாமல் பைக்குள் வைத்து கோழியை கொண்டு செல்வது ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால் ஒருவர் ஒரு ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார். அது பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை, அசூயை கொள்ளவும் இல்லை. சாதாரண விஷயமாகவே எடுத்துக்கொள்ளப் படுகிறது.

சாலையின் குறுக்கே ஆடு மாடுகளை ஒட்டி வந்தாலும் ஓட்டுனர் ஏக வசனத்தில் திட்டுவதில்லை. சில சமயங்களில் நடத்துனர் இறங்கிச் சென்று ஓரமாக விரட்டுவதும் உண்டாம்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, நகரத்து பேருந்துகளில் நடக்கும் இடிபாடுகளும், வசவு மொழிகளும் எண்ணத்தில் உரசிச் செல்கிறது.

கிராமத்துப் பேருந்துகளில் என்ன  ஒரு பிரச்சனை, சில சமயங்களில் வெற்றிலை எச்சிலை கொஞ்சமும் யோசிக்காமல் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி துப்புகிறார்கள். காற்றில் நம் மேல் படாமல் உஷாராக இருக்க வேண்டி இருக்கிறது.

உண்மையில் பல கிராமங்களில், பக்கத்து நகரத்திற்கு செல்லும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பஸ் ஒரு காதல் வாகனம். அவர்களுக்கு சந்தித்துக்கொள்ள  வேறு பாதுகாப்பான இடம் கிடைப்பது பெரும் கடினம். வேறு எங்கேயாவது தனித்து நின்று பேசினால் அவர்கள் வீடு சென்று சேர்வதற்கு முன் அவர்களின் விஷயம் வீட்டிற்கு சென்றுவிடும். கல்லூரியிலும் இதற்க்கு வாய்புகள் குறைவு. பஸ்ஸிலும் இந்தப் பிரச்சனை இருந்தாலும் அவர்களுக்குள்ளான தகவல் பரிமாற்றம் சற்று எளிது.

இடம்  பிடிப்பதற்காக யாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுவதில்லை. நிதானமாகவே ஏறுகிறார்கள், முண்டியடித்துக் கொண்டு உட்காராமல் அடுத்தவர்களுக்கு உட்கார வழி விடுவதை காண முடிகிறது.

பல பஸ்களில் இரண்டு மூன்று சீட்டுகள் அகற்றப் பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் சந்தைக்கு காய்கறி மூட்டையை அடுக்கி எடுத்துச் செல்கிறார்கள்.

நகரத்தைப் போன்று சாலைகளில் செல்வோரை பீதியடைய வைக்கும் வகையில் வேகமாக செல்வதில்லை. பஸ்ஸை ஓட்டுவதில் ஒரு நிதானம் இருக்கிறது.


குண்டும்  குழியுமான சாலைகளில் பேருந்து ஆடி ஆடி செல்வது தேர் ஊர்வலம் செல்வது போலத்தான் இருக்கிறது. பல கிராமங்களின் நகரத் தொடர்புக்கு இது போன்ற சாலைகளும் அதில் அவ்வப்பொழுது வந்து செல்லும் பஸ்களும் மட்டுமே இருக்கிறது.

நண்பர்களே, உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

4 comments:

 1. நானும் கிராமத்தான் தான்... அங்கு அனுபவித்து வாழ்ந்தேன்... நகரம் என் அனுபவங்களை வித்து வாழச் சொல்கிறது. :-)

  ReplyDelete
 2. why dont you cost your vote in Tamil Manam?

  ReplyDelete
 3. ரோஸ்விக்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  I already did cost my vote on Tamil Manam. But it populates only if the post is viewed in separate page. Some code issue in my template.

  I'll try to solve it.

  Thanks a lot for your suggestion.

  ReplyDelete
 4. ஆமாங்க. .எல்லாமே உண்மைதான். நல்ல அனுபவப் பகிர்வு

  ReplyDelete