எப்போதேனும், ஒரு நாள் முழுவதும் தனிமையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? தனிமை தரும் அனுபவத்தை உணர்ந்ததுண்டா? தனிமையை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை, ஆனால் நாம் விரும்பா விட்டாலும் சில நேரங்களில் அது நம்மை தேடி வந்து விடுகிறது.
ஆள் அரவமற்ற இடத்தில் தான் தனிமை என்றில்லை, இரைச்சலான பேருந்து பயணத்தில் அருகில் இருப்பவர்கள் என்னே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஜன்னல் வழி காட்சிகளை மவுனமாக பார்த்துக்கொண்டு வருவோமே, அதுவும் ஒருவித தனிமைதான்.
நான் எந்த இடத்தில் இருந்தாலும் எனக்கான தனிமை எப்பொழுதும் என்னுடன்தான் இருக்கிறது அதை கவனிக்க பலநேரம் நான்தான் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் நானும் எனது தனிமையும் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக்கொள்வது போல் தனிமை என்னை தன் கரங்களுக்குள் தழுவிக் கொள்கிறது.
தனிமையை பழகி விட்டால் அது ஒரு விதமான மயக்கம், தியானம். நம்மை சுற்றி இருக்கும் காற்று வெளியில் தனிமையும் காற்றோடு கலந்து நம்மை சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.தனிமையில் இருக்கும் பொழுது மனதில் எண்ணங்கள் பலவாறு பீறிட்டுக் கிளம்பும், சில நேரம் எண்ணக் கூடாததும்.
தனிமையின் இருப்பை கண்டுகொள்ள மறுக்கிறோம். சில நேரங்களில் தனிமையை மறுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, நண்பர்களோடு பேசி, தொலைக்காட்சி பார்த்து, வண்டி எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி இப்படி எத்தனையோ.
ஒரு நாள் மதிய வேலை, புறநகர். அலுவலகத்துக்குச் செல்ல பேருந்தை எதிர்நோக்கி ஆட்கள் அற்ற நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தேன். சாலை, வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லாமல் வெயிலும் தனிமையும் மட்டுமே நிறைந்திருந்தது. சாலையோர மரம் ஒன்று யாரோ ஒருவரின் வரவுக்காக காத்திருப்பது போலவே இருந்தது. ஆனால் உண்மையில் அந்த மரம் யார் வந்தாலும் போனாலும் கண்டுகொள்வதே இல்லை போலவும் இருந்தது.
அதன் எதிர்புறம் யாராலோ , எப்பொழுதோ, எதற்காகவோ கொண்டுவந்து போடப்பட்ட கல் ஒன்று, நூற்றாண்டு கடந்த மவுனத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்டு எது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன் அதன் தோற்றம் நிச்சயம் வேறு மாதிரி இருந்திருக்கும். இன்று இருக்கும் அதன் உருவத்தைப் பெற காரணம் என்னவாக இருக்கும்.
கல்லைப் பற்றிய எண்ணத்தைக் கலைத்து எங்கிருந்தோ வந்த பட்டாம்பூச்சி ஒன்று நிழற்குடைக்குள் வந்து சற்று நேரம் அங்கும் இங்கும் வட்டம் போட்டது. பின்பு அங்கிருந்த தடுப்பு கம்பியின் மீது அமர்ந்து சிறகுகளை அசைத்தபடியே இருந்தது. இந்த காட்சிகளை பார்த்து கொண்டே தனிமை கொஞ்சம் கொஞ்சமாக என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.
தூரத்தில் பேருந்து வருவது தெரிந்ததும் தனிமை என்னிடம் இருந்து மெல்ல கையசைத்து விடைபெற்றுக்கொண்டது. சில சமயங்களில் என்னையும் அறியாமல் இதுபோல் தனிமை கிடைப்பதுண்டு, சில வேளைகளில் நானாக தேடிச் செல்வதும் உண்டு.
மழையோ, அதிக காற்றோ அற்ற வெறுமையான இரவு. நிலவும், மேகங்களும் இல்லாத வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும். மாடி முகப்பில் அமர்ந்து இருந்தேன், அந்த பின்னிரவு வேளையில் அமைதியை போர்த்தியபடி மரங்கள் உறங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் செல்போன் டவரின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது சிகப்பு வண்ண நட்சத்திரமாய்.
தனிமை ஒரு காதலியைப் போல் ஓடி வந்து ஒட்டிக் கொண்டு மெல்ல மெல்ல என்னுள் இறங்குவதை உணர முடிந்தது. சில்வண்டுகள் தங்களுக்குள் பேசிக்கொள்வது தனிமையின் ஒரு அங்கமாகவே இருந்தது. அவைகளின் சத்தம் தனிமையை கலைப்பதர்க்குப் பதில் மேலும் மேலும் தனிமைக்குள் ஆழ்த்திக்கொண்டே போனது.
இரவுப் பறவை ஒன்று சத்தம் இல்லாமல் எதோ ஒரு இடத்தை நோக்கி பயணித்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் படுத்து உறகலாம் என்று ஒரு எண்ணம் வந்தாலும், தூங்கிவிட்டால் இது போன்ற ஒரு தனிமையை இழக்க நேரிடும் என்ற உண்மை தூக்கத்தை விரட்டி அடித்தது.
நேரம் செல்லச் செல்ல தனிமை எனும் அந்த அழகான உணர்வுக்குள் நான் மொத்தமாக தொலைந்து விட்டிருப்பது தெரிந்தது. கிழக்கில் சூரியன் வருவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. சாலையில் மனிதர்களின் நடமாட்டம் தெரிய ஆரம்பித்தது. இம்முறை நான் மெல்ல கையசைத்து தனிமையிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.
தனிமை பல வேளைகளில் போதி மரமாகவே இருக்கிறது. அதன் நிழலில் சற்று நேரம் இளைப்பாறிப் பாருங்கள்.
-
This comment has been removed by the author.
ReplyDeleteதனிமையும்/மௌனமும் ஒரு அழகுதான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி வடுவூர் குமார்
ReplyDelete