அந்த வீட்டிற்கு குடி வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. புதிய வீடு, புதிய இடம், புதிய மனிதர்கள். மெயின் ரோட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். அது தாண்டியும் தெரு நீண்டு செல்கிறது. ஆனால், வீட்டை தாண்டி ஒரு நாளும் அந்த தெரு வழியே சென்றதில்லை.
நினைத்துப் பார்த்தால் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இந்த இரண்டு வார காலங்களில் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. வீடு வந்ததும் சட்டென்று சாலையிலிருந்து விலகி வீட்டிற்குள் நுழைந்து விடுகிறேன். தொடர்ந்து சற்று தூரம் நடந்து பார்க்கலாம் என்று எண்ணியதே இல்லை.
இங்கு மட்டும் அல்ல, எந்த ஒரு இடத்திற்கு முதலில் சென்றாலும், சாலையில் இருந்து பிரிய நேரிட்டாலோ அல்லது சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டாலோ அதற்கு மேல் அந்த சாலை எங்கு செல்கிறது என்று யோசிப்பதுண்டு.
பால்ய வயதில் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் ஒரு விஷயத்தை உணர்திருக்கிறேன். வீடு சென்று சேரும் வரையில் உள்ள பாதை உறவினரின் வீட்டிற்கானது. வீட்டை அடைந்தவுடன் அதற்க்கு மேல் உள்ள சாலை எங்குசெல்கிறது என்ற கேள்வி ஆரம்பமாகிவிடும், தொடர்ந்து சென்று பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் விடமாட்டார்கள். ஓரிரு சமயம் ஆர்வ மிகுதியில் பெரியவர்களிடம் அவ்வழியே அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறேன். எதற்கு என்று கேட்டால் எதுவும் சொல்லத் தெரியாமல் "சும்மா" என்று கூறியிருக்கிறேன். "சும்மா அங்க போய் என்ன பண்ணப் போறே? போய் விளையாடு போ" என்று கூறி விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். தனியே சென்று பார்பதற்கும், ஒரு வேளை திரும்பி வர வழி தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கும். யாரும் பார்க்காத வேளையில் எவ்வளவு தொலைவில் இருந்து வீட்டைப் பார்க்க முடிகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் சென்று சாலை வளைவுகளில் நின்று பார்த்துவிட்டு திரும்ப ஓடி விந்து விடுவேன்.
ஆனாலும் மனதிற்குள் இடைவிடாமல் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே யார் இருப்பார்கள்? அடுத்து வரும் ஊரின் பெயர் என்ன? இதே பாதையில் தொடர்ந்து ஒவ்வொரு ஊராக தாண்டிச் சென்று கொண்டே இருந்தால் கடைசியில்எந்த ஊரில் போய் முடியும்?
பாதைகள் முடிவில்லாமல் நீள்கிறது. பல ஊர்களை தனது கரைகளாகக் கொண்டு சிற்றாறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையும் ஊர் பெயர்களைக் கொண்டு அடையாள படுத்தப் படுகிறது. சிட்டாற்றுச் சாலையிலிருந்து கால்வாயைப்போல் தெருக்கள் பிரிகின்றன.
நாம் தினம்தோறும் சென்று வரும் பாதைகள், புதிய பாதைகளைப் போல் சுவாரஸ்யம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் பழக்கப்பட்ட பாதையின் காரணமாக அந்த சாலையைப் பற்றி நினைவில்லாமல் தன்னிச்சையாகவே நடக்கிறோம். சாலையோர வீடுகளையோ சில வீடுகளின் வித்யாசமான அமைப்புகளையோ கவனிப்பதில்லை. ஆனால் நடந்துகொண்டிருப்பது அறிமுகமில்லாத சாலை மற்றும் இங்கு அடிக்கடி வரமாட்டோம் எனும்போது சுற்றுப் புறங்களை உற்று நோக்கச் சொல்கிறது.
இன்று வீட்டை தாண்டிச் செல்லும் சாலையில் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் நடக்க ஆரம்பித்தேன். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்த சாலை நடந்து செல்லும் பொழுது வேறு மாதிரியாக தெரிந்தது. சிறிது தூரம் நடந்தவுடன் வேறு ஊருக்கு வந்துவிட்டது போல் தோன்றியது. இரு புறங்களிலும் உள்ள வீடுகளை பார்த்தபடியே மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.
பெரிய பெரிய வீடுகள், சில வீடுகளில் சொந்த உபயோகத்திற்காக நான்கு ஐந்து கார்கள் வைத்திருந்தனர். கார் செட்டின் இடத்தில் தாராளமாக இரண்டு குடும்பங்கள் தங்கலாம். சிலருக்கு வாழ்க்கை இப்படியும் அமைகிறது, சிலருக்கோ பிளாட் பார்மிற்கு கூட தகராறு ஏற்படுகிறது. இந்த இரண்டும் அல்லாத இடைப்பட்ட நிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்தபடி நடையை தொடர்ந்தேன்.
சற்று தூரத்தில் சிதிலமடைந்த மிகப் பெரிய வீடு. அதன் எதிரே சிறியதாக ஆனால் நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு அழகான வீடு. வீடு சிரிதா பெரிதா என்பதில் ஒன்றுமே இல்லை, அதில் வசிக்கும் மனிதர்கள் அவர்கள் வீட்டை பராமரிக்கும் விதம் இதைப் பொறுத்தே வீடு உயிரோட்டம் பெறுகிறது.
இலக்கில்லாமல் புதிய பாதையில் நடக்கும் போது ஒரு சிறு பிரச்சனை. பாதை இரு திசையில் பிரிந்து சென்றன. எதை விட்டு எதை தேர்ந்தெடுப்பது, நிச்சயம் இரண்டு பாதையும் வேறுவேறு அனுபவத்தை கொடுக்கும். எந்த அனுபவத்தை தேர்ந்தெடுப்பது. இடது புறமாக சென்ற பாதையை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.
வாழ்க்கையும் இப்படித்தான், நாம் தேர்ந்தெடுக்கும் துறை, அதில் நம் பணியை அமைத்துக் கொள்ளும் விதம் ஆகியவை நம் வாழ்க்கையின் அனுபவத்தை தீர்மானிக்கின்றன.
வழக்கமான பாதையில் நடக்கும் போது யாரும் நம்மை சந்தேகமாக பார்த்தாலும் நாம் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. ஆனால், சம்பந்தம் இல்லாத தெருவில் நடக்கும் போது மற்றவர்கள் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை சந்தேகமாகப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. சந்தடி மிக்க தெருக்களில் யாரும் அதுபோல் கவனிப்பதில்லை. ஆனால் குடியிருப்பு மட்டுமே உள்ள தெருக்களில் புதிதாக யாராவது தென்பட்டால் சற்று உற்றுப் பார்க்கவே செய்கிறார்கள். ஒருவேளை நிறுத்தி யார் நீங்கள், யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வது. சும்மா சுற்றிப் பார்க்க வந்தேன் என்று கூறுவதா, அப்படி கூறினாலும் சுற்றிப் பார்க்க இது என்ன சுற்றுலா தளமா என்று கேட்டால் என்ன சொல்வது.
நமக்கும் பாதைக்கும் உள்ள தொடர்பின் மூலம் எது? ஒரு பாதையில் செல்ல வீடு, பள்ளி, அலுவலகம், உறவினர்கள் இப்படி ஏதாவது ஒன்று தேவைப்படுகிறதோ? இலக்கில்லாமல் ஒரு புதிய பாதையில் நடக்கும் போது ஏன் மனதில் ஒரு சிறு பதைபதைப்பு ஏற்படுகிறது. பாதை மாறி எங்காவது தொலைந்துவிடுவோம் என்ற பயமா? புதிய விஷயத்தை ஏற்க மனதுக்கு சற்று நேரம் பிடிக்கும் போலும்.
புதிய பாதை மட்டும் அல்ல, புதிய பள்ளி, அலுவலகம், உறவு, முயற்சி என்று அனைத்துமே மனதை சற்று பதைபதைக்க வைக்கிறது.
வனாந்தரத்தின் இடையே நடப்பதை விடவும் ஒரு பாதையில் நடப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. பாதை இருப்பதால் நிச்சயம் இங்கு மனிதர்கள் இருப்பார்கள், எதாவது ஆபத்து என்றாலும் சத்தம் போட்டு உதவியாவது கேட்கலாம் என்று மனது சமாதானம் கொள்கிறது. மனதுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப் படுகிறது.
பாதையே இல்லாத ஊர்கள் இருக்குமா? அப்படி இருந்தால் மக்கள் வயல் வரப்புகள் ஊடாக நடந்துதான் செல்ல வேண்டும் என்றால், மனது பாதுகாப்பை பற்றி எண்ணத் துவங்குகிறது. இதுவரை செல்லாத பாதையாக இருந்தாலும், 'பாதை' மனதுக்கு ஒரு வகையில் பாதுகாப்பு உணர்வை தருகிறது.
நடந்தது போதும் என்று தோன்றவே திரும்பிவிட நினைத்தேன். மனதில் சின்ன நெருடல், ஒரு வீட்டின் வாசலில் நின்றபடி ஒருவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்பொழுது எப்படி சட்டென்று திரும்புவது, அப்படி திரும்பினால் அவர் என்ன நினைப்பார். இன்னும் சற்று நடந்து அவர் பார்வையில் இருந்து மறைந்தபின் திரும்பலாமா? ஒரு வேளை சற்று தொலைவில் வேறு யாராவது இதே போல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது. எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
வீட்டை நெருங்கிய போது, இதுவரை சாலையின் அந்தப் பக்கம் இருந்தே வீட்டை பார்த்திருக்கிறேன். இதுதான் முதல் முறை இந்தப் பக்கமாக வீட்டை நெருங்குவது. வீடும் தெருவும் வித்தியாசமான கோணத்தில் தெரிவதாக இருந்தது.
கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் நிறைய நடந்திருக்கிறேன். நான் படித்த கல்லூரி ஒரு கிராமத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலையின் அருகில் இருந்தது. ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். மாலை வேளைகளில் கிராமத்தை நோக்கி செல்லும் பாதையில் நடப்போம். ஒவ்வொரு நாளும் வேறு வேறு பாதையில் நடப்போம்.
அறிமுகம் இல்லாத பாதையில் கும்பலாக நண்பர்களுடன் நடப்பதற்கும் தனியாக நடப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. நண்பர்களுடன் செல்லும் பொழுது உரையாடலின் சுவாரஸ்யத்தில் பல விசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
பள்ளி நாட்களில் நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும். ஆனால் அதுவரை அந்த சாலையில் சென்றதில்லை அதுதான் முதல் முறை. சிறிது நேரம் அவன் வீட்டில் பொழுதை கழித்து விட்டு எங்காவது வெளியில் சென்று வரலாம் என முடிவு செய்தோம்.
அங்கிருந்து சற்று தூரத்தில் ஒரு பனைமரக் காடு இருப்பதாகவும் அங்கு யாருமே வரமாட்டார்கள் என்றும் கூறினான். உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் வா உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றான். எனக்கு தைரியம் இருந்தது, இல்லை என்பதை விட, அவன் வீட்டை தாண்டிச் செல்லும் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எனக்கு ஆர்வத்தை கொடுத்தது.
அதிலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத மண்பாதை. சைக்கிள் பயணம். மீண்டும் ஒரு புதிய, இதுவரை சென்று பார்க்காத சாலையில் செல்ல வேண்டும் என்பதே என்னை அவனுடன் போகத் தூண்டியது.
ஏனோ நகரங்களில் இருக்கும் பரபரப்பான தெருக்கள் என்னை கவர்வதில்லை. அந்த சந்தடியில் இருந்து வெளியில் வந்தால் போதும் என்றாகிவிடும். அதுமட்டுமில்லாமல் சில வேளைகளில் தெருக்களின் அமைப்பு ஒரே மாதிரியாக குழப்பம் விளைவிப்பதாக இருக்கும். புற நகர்ப் பகுதிகளும் கிராமங்களும் தங்களுடைய நீண்ட சாலைகளில் ஒருவித ஈர்ப்பை கொண்டிருக்கின்றன.
நாம் அடிக்கடி சென்று வந்த பாதையில் பயணிப்பது ஒருவித சந்தோசம் என்றால், இதுவரை சென்றிராத பாதையில் பயணிப்பதும் ஒருவித சந்தோசம். முக்கியமாக, சுற்றுலா செல்லும் போது பார்க்காத பல ஊர்களுக்கு பயணிப்போம். முடிவில்லாத நெடுஞ்சாலைகள். இடையிடையே எதிர்ப்படும் ஊர்கள்.
நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து முடிவில்லாமல் ஊர் ஊராக செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்கையில் பயணங்கள் முடிவதே இல்லை. நாம் பயணம் செய்ய வேண்டிய பார்த்தறியாத எத்தனையோ பாதைகளும் அங்கு ஏற்படக்கூடிய அனுபவங்களும் நமக்காக காத்திருக்கின்றன. பயணிப்போம்.
-
இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
ReplyDeleteநன்றி யூத்ஃபுல் விகடன்.
அன்பு பால முருகன் ...
ReplyDeleteஉங்கள் பதிவை வெகுவாக ரசித்து படித்தேன் ...
இன்றைய காலை நடையில் அசை போட்டுக் கொண்டே சென்றேன் ...
கடந்த சில வாரங்களில் நான் படித்த மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று என சொல்லத் துணிவேன் ...
நன்றி தோழர் !
அன்பு நியோ,
ReplyDeleteஎன்னுடைய இந்தப் பதிவை நீங்கள் ரசித்துப் படித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. இது போன்று ஓரிருவரின் பாராட்டுக்களே நமது எழுத்தை மேலும் செம்மைப்படுத்துகிறது.
நன்றி நியோ.
//இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே யார் இருப்பார்கள்? அடுத்து வரும் ஊரின் பெயர் என்ன? இதே பாதையில் தொடர்ந்து ஒவ்வொரு ஊராக தாண்டிச் சென்று கொண்டே இருந்தால் கடைசியில்எந்த ஊரில் போய் முடியும்?//.... உண்மைதான்!
ReplyDeleteவாழ்க்கை தத்துவத்தை மிக தெளிவாக வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கிங்க. மிகவும் சுவாரஸியமாக இருக்கு உங்களின் இந்த பதிவு.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Priya
ReplyDelete