Friday, May 21, 2010

இல்லாத இயல்பு

மனிதனைப் போல் மற்ற உயிரினங்கள் எதுவும் தன் இயல்பை அடிக்கடி மாற்றிக் கொள்வதில்லை.

இயல்பு மாற்றம் எண்ணங்களின் தோற்றம். எண்ணத்தின் வெளிப்பாடு சூழ்நிலையின் வசம். மனிதனின் இயல்பு நிலை மாற்றக் காரணிகளுள் முக்கியமானது சுயநலம்.

இயல்பாய் இருப்பது மிகவும் கடினம் என்பதை நம்மில் பலர் அனுபவரீதியாக அறிந்திருக்கிறோம்.

இயல்பாய் இருப்பது என்றால் உள்ளூர பயத்தை வைத்துக் கொண்டு வெளியில் தைரியமாய் எப்போதும் போல் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதல்ல. தன் பய உணர்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்துதலே.

மனதில் ஏற்படும் உணர்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதே இயல்புத் தன்மை. ஆனால், அது பெரும்பாலும் சாத்தியப் படுவதில்லை. ஒருவரின் மேல் நட்புணர்ச்சி ஏற்படும் போது அதை எளிதாக வெளிப் படுத்தி விடலாம். அதனால் நன்மை அன்றி தீமைக்கான சாத்தியக் கூறுகள் மிக சொற்பம். அதுவே கோபம் அல்லது காமம் எனும் பொழுது உணர்சிகளை மறைத்து இயல்பு நிலையை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது தன் ஆளுமையை திணித்தால், ஆளுமைக்கு உட்படுபவன் இயல்பு எதிர்ப்பதாகவே இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் பெரும்பான்மை எதிர்க்கும் மனநிலையாகவே இருக்கும்.

அப்படி எதிர்ப்பதும், பணிந்து போவதும் தன்(சூழ்)நிலையைப் பொறுத்ததே. என்ன மாதிரியான பிரச்சனை வந்தாலும் கவலைப்படாது எதிர்த்து நிற்பது இயல்பு நிலையாகிறது. பிரச்சனைக்கு பயந்து எதிர்ப்பை காட்டாமல் அடங்கிச் செல்வது தன் இயல்பு நிலை மீறலாகிறது.

நம்மில் எத்தனை பேர் சுய ஆதாயத்திர்க்காகவும், பயத்தினாலும் ஒவ்வொரு நாளும் இயல்பை மீறாமல் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏதாவதொன்று நம் இயல்பை குலைக்க தயாராக உள்ளது.

தனது சொத்தை பிறர்  அபகரிக்க நினைக்கும் பொழுது இளைத்தவனாய் இருப்பின் எதிர்ப்பதும் வலுதவனாய் இருந்தால் ஒதுங்கிக் கொள்வதும் இயல்பு அல்ல.

சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே  கற்பிக்கப் படுகிறது. சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் பொழுது அங்கே இயல்பு நிலை வெகு தூரம் ஆகிவிடுகிறது. வேண்டுமானால் இப்படிக் கூறலாம், 'சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வதே நம் இயல்பு'.

சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வது, நமது சிந்திக்கும் திறனால் எனபது உண்மை. ஆக, சிந்தித்து பகுத்து அறிந்து கொள்வதும் இயல்பாய் இல்லாமல் போவதற்கு காரணியாகும்.

குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை உள்ளபடியே வெளிப்படுத்துவது இயல்பு. காரணம் கற்பித்து மாற்றிக்கொள்வதோ, சமாதானம் செய்து கொள்வதோ இயல்பில் இருந்து விடுபடுதலே ஆகும்.

இயல்பு மாற்றமும் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. இயல்பு மாறாமல் இருக்க நினைத்தால் வாழ்வாதாரம் நிச்சயம் பிரச்சனைக்கு உள்ளாகிவிடும்.

நம்மிடம் இன்று இல்லாத, தொலைத்துவிட்ட, பிடுங்கப்பட்ட இயல்பை எப்பொழுதும் தேடியவாறே இருக்கிறோம்.

-

2 comments:

  1. //நம்மில் எத்தனை பேர் சுய ஆதாயத்திர்க்காகவும், பயத்தினாலும் ஒவ்வொரு நாளும் இயல்பை மீறாமல் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏதாவதொன்று நம் இயல்பை குலைக்க தயாராக உள்ளது.///


    உண்மையான வரிகள் பாலமுருகன்

    ReplyDelete
  2. நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete