பல நாட்களுக்குப் பிறகு இவ்வாறு நட்சத்திரங்களைப் பார்ப்பது மனதை என்னவோ செய்தது. பள்ளி நாட்களில் கிராமத்தில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை இரசித்தது ஞாபகம் வருகிறது. அதில் மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அதே போல் வேறு மூன்று நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதர்க்காக பல இரவுகள் தேடியதுண்டு.
கிராமத்தில் பல நட்சத்திரங்களுக்கு வித்யாசமான பெயர்கள் உண்டு. 'கட்ட குத்துகால் மீன்', 'செட்டிய கெடுத்த ரெட்டி மீன்' இப்படி பல. ஆனால் இந்த இரண்டு மட்டும் தான் இப்போதைக்கு நினைவில் இருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் நட்சத்திரங்களை இரசிக்கிறார்கள். பெரும்பாலும் தொலைகாட்சி தற்கால மனிதர்களின் இரவுப் பொழுதுகளை தனதாக்கிக் கொண்டு விட்டது. இரவானால் தொலைகாட்சி முன் அமர்ந்து விடுகிறோம். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் வானத்தை இரசிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை அல்லது நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறோம்.
நகர் புறங்களில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரத்தை இரசிக்க பல வீடுகளில் வாசலோ மொட்டை மாடியோ கிடைப்பதில்லை. நாம் வீட்டிற்க்குள் அடைபட்டுக் கொள்ளும் நேரம் தவிர்த்து மற்ற இரவு நேரங்களில் நாம் பார்க்கா விட்டாலும் நட்சத்திரங்கள் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
கவிஞர்களின் கவிதைகளில் கூட நிலவு இடம்பெற்ற அளவுக்கு நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது. நிலவு ஒன்றுதான் இருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதற்கே மதிப்பு அதிகமாக உள்ளது போலும். அதனால்தான் நிலவு இரசிக்கப் பட்ட அளவுக்கு நட்சத்திரங்கள் இரசிக்கப்படவில்லையோ.
இந்த நட்சத்திரம் எத்தனை மனிதர்களை பார்த்திருக்கும். எத்தனை யுகங்களை கடந்திருக்கும். எத்தனை நிகழ்வுகளை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.
இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சில நட்சத்திரங்கள் உண்மையில் இல்லாமல் இருக்கலாம். பல நூறு ஒளி ஆண்டு தொலைவில் இருந்த நட்சத்திரம், பல நூறு வருடங்களுக்கு முன் உமிழ்ந்த ஒளி இன்று நம்மை வந்தடைகிறது. அதைத்தான் நாம் இன்று காண்கிறோம் என்று சில அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
ஒருவேளை நாம் பார்க்கும் ஒரு சில நட்சத்திரங்கள் வெறும் ஒளி ஏற்படுத்தும் மாயையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
நான் பார்த்த நட்சத்திர வரைபடங்கள் எல்லாம் ஐந்து கோணங்கள் உடையதாகவே இருக்கிறது. ஆனால் நேரில் பார்க்கும் பொழுது அப்படி இருப்பதில்லை. அதன் ஒளிக் கற்றைகள் எல்லா திக்கிலும் சிதறடிக்கப் படுகின்றன.
எத்தனை விதங்கள் சிறிதும் பெரிதுமாய். வெகு சிறு புள்ளியாய், சற்று சிறிதாய், பிரகாசமாய் பழுப்பு நிறம் கலந்ததாய். சில நட்சத்திரங்களின் அமைப்பு கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகளாய்த் தெரிகின்றன. சில நேர் வரிசை, சில இடைப் புள்ளி, சில ஊடு புள்ளி.
பார்த்துக்கொண்டிருந்த நட்சத்திரத்தை ஒரு மேகக் கற்றை சிறிது நேரம் மறைத்து விட்டு விலகியது. மேகங்கள் நகர்கையில் நட்சத்திரங்கள் நகர்வதாகவே தோற்றம் அளிக்கும். மேகங்களுக்கு இடையே அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்ணாம்பூச்சி ஆடும் நட்சத்திரம், அழகோ அழகு.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இதே நட்சத்திரங்கள் தான் இருந்தனவா? சில நட்சதிரங்களாவது அழிந்து காணாமல் போயிருக்கும். அந்த நட்சத்திரங்களைப் பற்றி யாருக்கும் தெரியாமலே இருக்கக் கூடும்.
ஒரு நாள் இரவு திடீரென அனைத்து நட்சத்திரங்களும் காணாமல் போய் விட்டால் இந்த வானம் எப்படி இருக்கும்? விடுமுறை நாள் பள்ளிக் கூடமாய் வெறுமையை போர்த்திக் கொண்டுவிடும் அல்லவா?
-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-
நல்லா ரசனை!இதே அலைவரிசையில் நானும் சிந்தித்ததுண்டு!பூங்கொத்து!
ReplyDelete@அன்புடன் அருணா
ReplyDeleteவருகைக்கும் பூங்கொத்துக்கும் மிக்க நன்றி.
youthful.vikatan.com ல் இந்த பதிவுக்கான சுட்டி முகப்பு பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
ReplyDeleteநன்றி யூத்ஃபுல் விகடன்.