Wednesday, May 5, 2010

வாழ்க்கை கட்டமைப்பு

வாழ்க்கை எதிர்பார்ப்புகளால், எண்ணங்களால்,  உணர்வுகளால்  கட்டமைக்கப் பட்டுள்ளது.  எதிர்பார்ப்புகள் வாழ்கையை சுவாரஸ்யமாக்குகிறது.  எதிர்பாராத நிகழ்வுகள் வாழ்க்கையோடு சேர்ந்தே பயணிக்கிறது.

வாழ்க்கையும் எதிர்பார்ப்பும் முறையே உடலும் சுவாசமும். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை சுவாசம் இல்லாத உடல். சவம். சுவாசம் போல் எதிர்பார்ப்பும் ஒரு அனிச்சை செயல். மறுத்தாலும். ஆசை இல்லாமல் இருக்க ஆசை கொண்டதைப் போல்.

ஏமாற்றங்கள், அசுவாரஷ்யங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவதன்றி ஓட்டத்தை நிறுத்துவதில்லை. ஏமாற்றங்கள் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் வாழ்கையை வழி நடத்துகின்றன.

சீரான வாழ்க்கை என்று யாருக்கும் நிரந்தரமாய் இருப்பதில்லை நிரந்தரம் அற்ற  வாழ்க்கையில். தெரிந்தும் நிரந்தரம் தேடும் வாழ்க்கை.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது அவரவர் எண்ணங்களையும் தேடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. நிறைவேறிய விருப்பங்களைக் கொண்டு வாழ்க்கை தன்னை அர்த்தப் படுத்திக் கொள்கிறது. 'வரையறுக்கப்பட்ட அர்த்தம்' இல்லா வாழ்க்கை.

ஒரு தேடலில் மற்றொரு தேடல் இடைவெட்டுகிறது. தேடலின் நோக்கம் சிதறடிக்கப் படுகிறது. தேடலின் நோக்கம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கிறது, நோக்கத்தின் எதிர்பார்ப்பு தேடலை துரிதப் படுத்துகிறது. தேடலே வாழ்க்கை.

உணர்வுக் கோர்வை வாழ்க்கையின் இயல்பு. தேவையினால் தேடல், தேடலினால் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பினால் ஏமாற்றம், ஏமாற்றத்தினால் கோபம், கோபத்தினால் இழப்பு, இழப்பினால் தேவை. இப்படி எதாவது ஒன்றினால் மற்றொன்று.

வாழ்க்கையின் ஒப்பனைகள் உணர்வுகளை பூர்த்தி செய்வதில்லை. தரித்துவிட்ட ஒப்பனைகள் அழிக்க முடியா வண்ணம் வாழ்க்கையோடு ஒட்டிக் கொள்கிறது. ஒரு ஒப்பனை களைய மற்றொரு ஒப்பனை தேவைப் படுகிறது. ஒப்பனைக்குள் சிக்கிய உணர்வுகள் நசுக்கப் படுகின்றன.

ஒரு உணர்வை மற்றொரு உணர்வு ஆளுமை செய்யும் பொழுது எண்ணங்கள் அலைகழிக்கப் படுகின்றன. ஆளுமைக்குட்பட்ட உணர்வு எந்நேரமும் கிளர்ந்தெழ தயாராய் இருக்கிறது. ஒரு உணர்வுக்கு மொற்றோன்று வடிகாலாக முடிவதில்லை.

பார்க்கப்படும் விதத்தில் ஒருவரின் வாழ்க்கை மற்றவரால் கற்பனைத் தோற்றம் கொள்கிறது. பார்க்கப்படும் விதமும் உண்மைத் திரிபுக்கு காரணமாகும். தோற்ற மயக்கம்.

மகிழ்ச்சி, அது தன்னை எல்லா இடங்களிலும் மறைத்துக் கொள்கிறது. எண்ணமும், தேவையும் தனக்கு விருப்பமான இடங்களில் அதை தேடி எடுக்கிறது. அதை அடுத்து எண்ணம், மீண்டும் மீண்டும் அதே இடத்தை தேடுகிறது சந்தோசத்தை எதிர்நோக்கி.

பிடிக்காத பிம்பங்களைப் பார்க்காமல் இமைகள் மூடிக்கொள்ளும் வேளைகளில் எண்ணங்கள் திறந்து கொள்கின்றன. எண்ணங்களை மூட மனதுக்கு தெரிவதில்லை.

எதிர்பார்புகளும், எண்ணங்களும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. செல்லும்.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

4 comments:

  1. //பிடிக்காத பிம்பங்களைப் பார்க்காமல் இமைகள் மூடிக்கொள்ளும் வேளைகளில் எண்ணங்கள் திறந்து கொள்கின்றன//

    நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. அருமையான படைப்பு .வாழ்க்கையை அற்புதமாக உணர்ந்து வடித்த படைப்பாக தெரிகிறது. ....பார்க்கப்படும் விதத்தில் ஒருவரின் வாழ்க்கை மற்றவரால் கற்பனைத் தோற்றம் கொள்கிறது. பார்க்கப்படும் விதமும் உண்மைத் திரிபுக்கு காரணமாகும். .......

    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. @மனோகரன் கிருட்ணன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete