Thursday, February 25, 2010

எழுத மறந்த கவிதை

எப்பொழுதாவது மனதில் சட்டென்று கவிதை அல்லது கவிதைக்கான கரு தோன்றும். ஆனால் அதை உடனுக்குடன் எழுதிவைக்காமல் போனால் மறந்துவிடும். அவ்வாறு எத்தனையோ கவிதைகள் பதிக்கப்படாமலே மறக்கப்படுகின்றன. மறந்துவிட்ட கவிதைகள் காற்றோடு கலந்து எப்பொழுதும் நம்மை சுற்றிக்கொண்டே இருப்பதோடு அவ்வப்பொழுது மனதிற்குள் வந்து லேசாக தலையை மட்டும் காட்டிவிட்டுப்போகும். ஆனால் எப்பொழுதும் முழுக்கவிதையும் நினைவு திரும்பியதில்லை.

எழுதிக்கொண்டிருக்கும் கவிதை பாதியில் நின்றுபோவதின் வேதனையை காட்டிலும் அதிக வேதனை அளிக்கக்கூடியது முழுமை பெற்ற கவிதை எழுதப்படாமலே மறக்கப்படுவது.

நேற்று மாடி முகப்பில் அமர்ந்து இருட்டை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் கவிதை வரி ஒன்று மனதில் பளிச்சிட்டது. அதை நினைத்துக்கொண்டே அறைக்குள் சென்று நீர் அருந்தும்போது வேறோர் எண்ணம் மனதில் ஓட கவிதை பற்றிய நினைவுச் சரடு அறுந்தது.

சற்று நேரம் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்ல ஆயத்தப்பட்டபோது சற்று முன் யோசித்த கவிதை பற்றிய நினைவு வந்தது. ஆனால் என்ன கவிதை எதைப்பற்றிய கவிதை என்று நினைவிற்கு வரவில்லை. ஒரு வேலை எந்த இடத்தில் அந்த கவிதை தோன்றியதோ அதே இடத்திற்குச் சென்றால் நினைவிற்கு வரக்கூடும் என்று மீண்டும் மாடி முகப்பிற்கு வந்து அமர்ந்த பின்பும்கூட எவ்வளவோ முயன்றும் அந்த கவிதை வரிகளை நினைவுகூர முடியவில்லை.

எழுதப்பட்ட கவிதைகளை விட எழுத மறந்த கவிதைகள் சிறப்பானதாக இருந்திருக்கலாம். அவை யாரையும் சென்றடையாமல் எனை விட்டு பிரிந்து சென்று பழிப்பு காட்டுகிறது. எவ்வளவு மன்றாடியும் என்னிடம் திரும்ப மறுத்து எனது இரவு உறக்கத்தை களவாடிக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆடுகிறது.

என் நினைவுகளில் இருந்து வெளியேறி வான்வெளியில் கலந்துவிட்ட கவிதைகள் மீண்டும் திரும்புமா என்று காத்துக்கொண்டே இருக்கிறேன் வெற்றிடத்தை வெறித்தபடி!

5 comments:

  1. கவிதை தானே வராது.... நீங்களும் யோசிக்கனும்..... ஒரு கரு தென்படும் போது அதை மனதில் நிறுத்தி அதை சார்ந்து சில வடிவங்களை கோர்க்க நீங்கதான்.... முற்படனும்.... பிறகு அதை கவிதைக்கான அழகு படுத்த வேண்டும்.

    நீங்க விரைவில் கவிதை எழுத எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Vidhoosh, சி. கருணாகரசு

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. முற்றுப் பெறாதா கவிதைகள் தான் அனைவர் வாழ்விலும் அதிகம். நல்ல பகிர்வு. எழுத்து அருமையாக வருகிற்து . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி Madurai Saravanan

    ReplyDelete