Tuesday, February 23, 2010

ஆளில்லா வீடு

பாதையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஆளில்லா வீட்டை கடந்து செல்கையில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வினால் நிறுத்தப்பட்டேன். அந்த வீட்டை பார்க்கும் போது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ஆரம்பித்தன.

மனிதர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற வீடுகள் எனக்கு எப்பொழுதும் ஒரு சரித்திர குறிப்பாகவே தெரிகிறது. அந்த வீட்டை காலி செய்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சந்தோசமாக வேறு புது வீட்டிற்கு குடி புகுந்திருக்கலாம், பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஓர் நிர்பந்தத்தின் காரணமாகவும் சென்றிருக்கக் கூடும்.

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குடிபெயர்ந்து செல்லும் போது அந்த வீடு என்ன நினைத்திருக்கும். இத்தனை காலம் தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் தன்னை தனியாக விட்டுச் செல்வதை நினைத்து அழுதிருக்குமோ?

அந்த வீட்டு குழந்தை தன்னுள்ளே தவழும்போது எவ்வளவு மகிழ்ந்திருக்கும். அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதை பார்த்திருக்கும். எந்நேரமும் தன்னோடு விளையாடிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டு அது அழுதழுது கிளம்புகையில் வீடும் பிரிய மனமில்லாமல் பிரிந்து மாலை வேலைக்காக ஏங்கியிருக்குமோ?

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அம்மனிதர்களின் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் அதற்கு அத்துபடியாக இருந்திருக்குமல்லவா? தனது சுவர்களில் எத்தனையோ ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கிறது, நாளடைவில் அவையும் மெல்லே மெல்லே அழிந்துவிடக்கூடும் சுவர்களோடு சேர்த்து. வீடுகளைப் பார்க்கும்போது அது தாய் போலவும் வசிப்பவர்கள் அதன் குழந்தைகள் போலவும்தான் தோன்றுகிறது. கோழி தனது குஞ்சுகளை தன் சிறகிர்க்குள் வைத்துக்கொள்வது போல வீடு மனிதர்களை தன்னுள் அணைத்துக்கொள்கிறது. கொட்டும் மலையையும் காயும் வெயிலையும் தான் வாங்கிக்கொண்டு நம்மை காக்கிறது.

ஒரு குடும்பம் என்றாலே மனக்கண்முன் நம்மையும் அறியாமல் வருவது வீட்டின் தோற்றம், அப்படி குடும்பத்தின் அங்கமாய் இருக்கும் வீட்டை யார் இப்படி அனாதையாய் விட்டுச்சென்றது? தன்னை கவனிப்பார் யாரும் இல்லாததால் அங்கம் பழுதுபட்டு பரிதாபமாக காட்சியளித்தாலும் இன்னும் எந்த நம்பிக்கையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒரு காலத்தில் எந்த ஒரு விசேஷ தினத்தன்றும் அவ்வீட்டு மனிதர்களோடு அந்த வீடும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ உறவினர்களின் வருகையை பார்த்து தானும் குதூகலித்திருந்த வீடு இன்று யாரும் இல்லாமல் தன்னந் தனியாய்.

வீடுகள் வெறும் கல் சுவர்கள் என்று யார் சொன்னது? அது எப்பொழுதும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, நாம்தான் அதை கவனிப்பதில்லை.

ஆட்கள் இல்லாமல் சிதைந்த வீடு தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறது கண்ணீர் சிந்தியபடி.

5 comments:

  1. நல்ல பதிவு..!!
    வீட்டை காலி செய்து போகும்போதெல்லாம் மனதில் ஏற்படும் வெறுமை மிக கொடுமை.
    ஆனால் வெகு சீக்கிரமே அது மறந்து போகும். காரணம் புதிதாய் குடியேறிய வீடு நம் கனவுகளை
    சுமக்க தயாராகிவிடும்

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவன்சிவம்

    ReplyDelete
  3. நல்ல எழுத்து நடை,

    தங்களது வர்ணனைகளை படிக்கும் போது கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்திலுள்ள சில பெற்றோர்கள் ஞாபகம் வருகின்றனர்.

    ஆளில்லாத சிதைந்த வீடும் ஒருவகையில் பெற்றோர்களுக்கு இணையானது தான்.

    ReplyDelete