Friday, March 5, 2010

கடவுளை சந்தித்தேன்

இன்றைய போலி நாகரீகம் நிறைந்த உலகில் நேரில் யாரும் பார்த்தறியாத கடவுளை சந்தித்தேன் என்று கூறினால் நம்புவதற்கு ஆளில்லை. அப்படியே நம்ப தயாராயிருந்தாலும் அவர்களுக்கும் தக்கதொரு சான்று தேவைப்படுகிறது.

நான் சந்தித்த கடவுள்

அழுக்குப் படிந்த உடையுடன் பேருந்தில் ஏறிய வயதானவரை எல்லோரும் அசூயையுடன் பார்த்தபொழுது அதுபற்றி கவலைப்படாமல் தன் பக்கத்தில் கூப்பிட்டழைத்து அமர்த்திகொண்ட சக பேருந்து பயணி.

உழைக்கும் நேரத்தில் உடற்ச்சோர்வினால் களைப்புற்று தள்ளாடிய உழைப்பாளியை சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள பணிந்த முதலாளி.

கையிலிருந்த தின்பண்டத்தைப் பார்த்து பசியோடு ஓடிவந்த நாய்க்குட்டிக்கு சற்றும் யோசிக்காமல் பாதியை பகிர்ந்து தந்த சிறுவன்.

தள்ளாடும் வயதிலும் உழைத்து உண்ணும் வைராக்கியத்தோடு காய்கறி விற்கும் மூதாட்டி.

தனது கடைப் பொருளேயாயினும் கெட்டுப்போன மிட்டாயை வியாபாரமாக்காமல் கடைக்கு வந்த சிறுமிக்கு வேறு மிட்டாய் கொடுத்த பெட்டிக்கடைக்காரர்.

இப்படி எத்தனையோ கடவுள்கள் நம்மைச்சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனக்கு என்று என்னாது பிறருக்காக கவலைப்படும் யாவரும் கடவுளுக்கு நிகரானவர்களே.


-

Tuesday, March 2, 2010

கவிதை எழுதச்சொல்லிய கவிதை

நானும் நல்லவன்தான்
முகத்தை திருப்பிக்கொண்டிருக்கும்வரை
எதிரே இறுக்கமான உடையணிந்த பெண்.

வலப்புறம் இதயம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது
அரவணைப்பில் பெண்.

காத்திருப்பதின் வலி அறிந்தேன்
என்னவள் எனக்காக காத்திருந்த பொழுது.

ஆட்கள் யாருமற்ற தீவில்
என்னோடு சேர்த்து இறக்கி விடப்பட்ட எதிரி
ஏனோ எதிரியாக தெரியவில்லை.

ஒரு கவிதை பாதியில் நின்று போனது
மகிழ்ச்சி!
அது காதல் தோல்வியால் எழுத ஆரம்பித்த கவிதை.

கவிஞனாகிவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது
இரவின் தனிமையில் அமர்ந்தபடி நான்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
என்னவளே நீ என்னை
காதலித்தாலும் வெறுத்தாலும் எனக்கு
ஆயிரமாயிரம் கவிதைகள்.

என்னைப்பற்றி இன்னும் எத்தனை கவிதைதான் எழுதுவாய்
கூச்சத்துடன் கேட்கிறது கவிதை.

நிலவு தர்மசங்கடப் பட்டது
பசியால் அழும் குழந்தைக்கு
தன்னை காட்டி சமாதானப் படுத்தும் ஏழைத் தாய்.

ஒற்றையடி பாதையில் எதிர்ப்பட்ட பிரிந்த காதலி
என்ன செய்ய வேண்டும் நான் இப்பொழுது!?


இது அனைத்தும் நான் twitter ல் எழுதியவை.

Monday, March 1, 2010

பதிவுக்கு என்னமாதிரி தலைப்பு வெச்சா நிறைய குத்து வாங்கலாம்

என்னென்னமோ தலைப்ப வெச்சும் நம்ம ஏரியா பக்கம் யாருமே வரமாட்டீன்றாங்கன்னு கவலைப்படற ஆளா நீங்க? அப்படீனா கண்டிப்பா இங்க ஒரு பார்வை பார்த்துட்டு போயிடுங்க. ஏதோ என்னாலான உதவி.

நேத்து பெஞ்ச மழைல இன்னிக்கு மொளச்ச காளான் நமக்கு ஐடியா கொடுக்குது பாருடான்னு அடிக்க வந்தாலும் பரவால்ல 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' (வ்வ்விடமாட்டேன்).

கீழ்க்கண்ட தலைப்பை வைத்தும் எழுதலாம் அல்லது ஏதாவது எழுதிவிட்டு அதுக்கு இதுல இருந்து ஒரு தலைப்ப எடுத்து வெச்சுடலாம், உங்க இஷ்ட்டம்.


- உண்மைச் சாமியாரும் உன்மத்த நிலையும்

- நேக்ச்பிளியோபோத்தோ கிளியோபாத்ராவிடம் வாங்கிய அடி

- பன்ச் டயலாக்கும் தமிழ் திரையுலகமும்

- திகில் படம் பார்க்கப் போன திடீர் சுமதி

- காதலிய பார்க்க போறப்ப மனைவிய கூட்டிட்டு போகாதீங்க

- மேங்கோ மரத்துக்கு பக்கத்துல ஒரு மாங்கா மரம்

- பெண்ணாதிக்கம் - ஒரு பேரிடி

- 67 மணிநேரம் செலவழித்து எழுதப்பட்ட கட்டுரை

- அரசியல் நோக்கோடு எழுதப்படாத ஒரு அரசியல் கட்டுரை

- அழகான பனியனும் அவுந்துபோன டவுசரும்


இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நா மொத மொதல்ல எழுதுன பதிவுக்கு என்ன தலைப்பு வெச்சிருக்கேன்னு இங்க போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க. அதுனோட பாதிப்புதா இப்படி எல்லாம்.

இந்த மாதிரி தலைப்பு வெச்சு குத்து உங்க பதிவுக்கு பதிலா உங்களுக்கு விழுந்துச்சுன்னா நான் பொறுப்பு இல்லை.

அப்படியே நம்ம பதிவுக்கும் ஒரு குத்து குத்திட்டு போங்க!!

சிறு வயது ஞாபகம்

சிறு வயதில் அப்பாவுடன் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சாலையின் போக்குவரத்துகளை வேடிக்கை பார்த்தவண்ணம் பள்ளி சென்ற ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் மனதிற்குள் ஒரு சந்தோசம் வருமே அதை என்னெவென்று சொல்வது. விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். காலை உணவு முடிக்கும் வரைதான் வீட்டில் பின்பு மாலைவரை நண்பர்களுடன் எங்காவது விளையாட சென்றுவிடுவேன்.

அனால் இப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்கள்தான் சோம்பலுடன் விடிகிறது!.

கடைவீதிகளில் எதிர்ப்படும் தெரிந்தவர்களைப் பார்த்து அப்பா சிநேகத்துடன் புன்னகைக்கும் பொழுது ஏன் என்று தெரியாமல் நானும் புன்னகைத்திருக்கிறேன்.

மாலைப் பொழுதுகள் எப்பொழுதும் மனதிற்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது ஆனால் அதை அனுபவிக்கத்தான் நேரம் கிடைப்பதில்லை இன்று. அந்த வயதில் மாலைப்பொழுதும் நேரமும் கிடைத்தும் அதுபற்றி கவலைப்படாமல் விளையாடி தீர்த்திருக்கிறேன். அதைப் பற்றி சிந்திக்கக்கூடிய வயதும் அல்ல அது.

அன்று எனது ஊருக்குள் அடிக்கடி பார்த்த பல முகங்கள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவர்களையெல்லாம் இப்பொழுது மீண்டும் பார்க்க வாய்ப்பும் இல்லை அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

ஊருக்குள் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் ஒருவரை தினமும் பார்ப்பேன். அவரைப்பற்றி பள்ளி நண்பர்கள் "அவுரு சாதாரண ஆள் இல்ல! கொலைகாரன பிடிக்கறதுக்காக வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்கிற CID" என்று சொல்லக் கேட்டு பயத்தோடு பார்த்திருக்கிறேன். அதுமட்டுமின்றி வீட்டில் பெரியவர்களிடம் அந்த விஷயத்தைச் சொல்லி அதிசயித்திருக்கிறேன். இதுபோல் பலபேர், இப்பொழுது அவர்கள் எல்லாம் ஊரில்தான் இருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை.

நீச்சல் கற்றுக்கொடுக்க தாத்தா கிணற்றுக்கு அழைத்துச்செல்லும் பொழுது பயந்துகொண்டு பாதி வழியிலேயே ஓடி வந்துவிடுவேன். கடைசியில் எப்படியோ ஒரு வழியாக கற்றுக்கொண்டபின், காலையில் எழுந்தவுடன் சீக்கிரம் நீச்சலடிக்கப் போகலாம் என்று நச்சரிப்பு ஆரம்பமாகிவிடும். நேரம் போவது கூட தெரியாமல் எந்த கவலையும் இல்லாமல் கிணற்றில் குதித்து விளையாடிய அந்த நாட்கள் எவ்வளவு அற்புதமானது.

அன்று நான் பார்த்த பாதைகள் இன்று தார்ச் சாலையாகி முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும் எப்பொழுதாவது அந்த சாலைகளில் செல்லும் பொழுது பழைய பாதையின் தோற்றம் ஒரு நொடியாவது கண்முன் தோன்றி மறைவதை தவிர்க்கமுடியவில்லை.

பால்ய வயதில் இருளைக்கண்டு பயப்படாமல் இருந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பொழுதெல்லாம் எட்டு மணியானால் ஊர் அடங்கிவிடும். அதுவும் என் வீடோ சற்று தள்ளி தோட்டத்திற்குள். வீட்டைவிட்டு வெளியே வரவே பயமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மனதில், வெளியே கொட்டகையில் கட்டியிருக்கும் ஆட்டுக்குட்டி எப்படி பயம் இல்லாமல் இருளில் இருக்கிறது என்று ஒவ்வொரு இரவும் வியப்பு மேலிடும்.

மழை. அந்த வயது மழையை மட்டும் இரசிப்பதில்லை, மழை நின்றபின் வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் விளையாட வைக்கிறது. வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மேல் குதித்து சிதறும் தண்ணீரை பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம். ஆனால் இப்பொழுது ஒதுங்கிச் செல்லச் சொல்கிறது மனசு.

வயது ஏற ஏற எண்ணங்கள் மாறுவதும், காலத்திற்க்கேற்ப ஊர் மாறுவதும் இயற்க்கை. ஆனாலும் மனது சட்டென்று அதை ஏற்றுக்கொள்வதில்லை.

காலத்தின் பிடிக்குள் நாம்.

Sunday, February 28, 2010

கடல் கொண்ட மனது

பார்க்கப் பார்க்க சலிக்காதது
கடல் அலை
எனக்கு என்னவளைப்போல

--------------------

கடல் எழுதிச்சென்ற கவிதை
கடற்க்கரை

--------------------

இப்பொழுதெல்லாம் காதலியுடன்
கடற்கரை செல்வதில்லை
எதை ரசிக்க
கடலையா? காதலியையா?

--------------------

கடலே தயவு செய்து
என் மனதை திருப்பிக்கொடுத்துவிடு
நான் வீடு திரும்ப வேண்டும்

Thursday, February 25, 2010

எழுத மறந்த கவிதை

எப்பொழுதாவது மனதில் சட்டென்று கவிதை அல்லது கவிதைக்கான கரு தோன்றும். ஆனால் அதை உடனுக்குடன் எழுதிவைக்காமல் போனால் மறந்துவிடும். அவ்வாறு எத்தனையோ கவிதைகள் பதிக்கப்படாமலே மறக்கப்படுகின்றன. மறந்துவிட்ட கவிதைகள் காற்றோடு கலந்து எப்பொழுதும் நம்மை சுற்றிக்கொண்டே இருப்பதோடு அவ்வப்பொழுது மனதிற்குள் வந்து லேசாக தலையை மட்டும் காட்டிவிட்டுப்போகும். ஆனால் எப்பொழுதும் முழுக்கவிதையும் நினைவு திரும்பியதில்லை.

எழுதிக்கொண்டிருக்கும் கவிதை பாதியில் நின்றுபோவதின் வேதனையை காட்டிலும் அதிக வேதனை அளிக்கக்கூடியது முழுமை பெற்ற கவிதை எழுதப்படாமலே மறக்கப்படுவது.

நேற்று மாடி முகப்பில் அமர்ந்து இருட்டை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் கவிதை வரி ஒன்று மனதில் பளிச்சிட்டது. அதை நினைத்துக்கொண்டே அறைக்குள் சென்று நீர் அருந்தும்போது வேறோர் எண்ணம் மனதில் ஓட கவிதை பற்றிய நினைவுச் சரடு அறுந்தது.

சற்று நேரம் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்ல ஆயத்தப்பட்டபோது சற்று முன் யோசித்த கவிதை பற்றிய நினைவு வந்தது. ஆனால் என்ன கவிதை எதைப்பற்றிய கவிதை என்று நினைவிற்கு வரவில்லை. ஒரு வேலை எந்த இடத்தில் அந்த கவிதை தோன்றியதோ அதே இடத்திற்குச் சென்றால் நினைவிற்கு வரக்கூடும் என்று மீண்டும் மாடி முகப்பிற்கு வந்து அமர்ந்த பின்பும்கூட எவ்வளவோ முயன்றும் அந்த கவிதை வரிகளை நினைவுகூர முடியவில்லை.

எழுதப்பட்ட கவிதைகளை விட எழுத மறந்த கவிதைகள் சிறப்பானதாக இருந்திருக்கலாம். அவை யாரையும் சென்றடையாமல் எனை விட்டு பிரிந்து சென்று பழிப்பு காட்டுகிறது. எவ்வளவு மன்றாடியும் என்னிடம் திரும்ப மறுத்து எனது இரவு உறக்கத்தை களவாடிக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆடுகிறது.

என் நினைவுகளில் இருந்து வெளியேறி வான்வெளியில் கலந்துவிட்ட கவிதைகள் மீண்டும் திரும்புமா என்று காத்துக்கொண்டே இருக்கிறேன் வெற்றிடத்தை வெறித்தபடி!

Tuesday, February 23, 2010

ஆளில்லா வீடு

பாதையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஆளில்லா வீட்டை கடந்து செல்கையில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வினால் நிறுத்தப்பட்டேன். அந்த வீட்டை பார்க்கும் போது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ஆரம்பித்தன.

மனிதர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற வீடுகள் எனக்கு எப்பொழுதும் ஒரு சரித்திர குறிப்பாகவே தெரிகிறது. அந்த வீட்டை காலி செய்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சந்தோசமாக வேறு புது வீட்டிற்கு குடி புகுந்திருக்கலாம், பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஓர் நிர்பந்தத்தின் காரணமாகவும் சென்றிருக்கக் கூடும்.

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குடிபெயர்ந்து செல்லும் போது அந்த வீடு என்ன நினைத்திருக்கும். இத்தனை காலம் தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் தன்னை தனியாக விட்டுச் செல்வதை நினைத்து அழுதிருக்குமோ?

அந்த வீட்டு குழந்தை தன்னுள்ளே தவழும்போது எவ்வளவு மகிழ்ந்திருக்கும். அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதை பார்த்திருக்கும். எந்நேரமும் தன்னோடு விளையாடிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டு அது அழுதழுது கிளம்புகையில் வீடும் பிரிய மனமில்லாமல் பிரிந்து மாலை வேலைக்காக ஏங்கியிருக்குமோ?

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அம்மனிதர்களின் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் அதற்கு அத்துபடியாக இருந்திருக்குமல்லவா? தனது சுவர்களில் எத்தனையோ ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கிறது, நாளடைவில் அவையும் மெல்லே மெல்லே அழிந்துவிடக்கூடும் சுவர்களோடு சேர்த்து. வீடுகளைப் பார்க்கும்போது அது தாய் போலவும் வசிப்பவர்கள் அதன் குழந்தைகள் போலவும்தான் தோன்றுகிறது. கோழி தனது குஞ்சுகளை தன் சிறகிர்க்குள் வைத்துக்கொள்வது போல வீடு மனிதர்களை தன்னுள் அணைத்துக்கொள்கிறது. கொட்டும் மலையையும் காயும் வெயிலையும் தான் வாங்கிக்கொண்டு நம்மை காக்கிறது.

ஒரு குடும்பம் என்றாலே மனக்கண்முன் நம்மையும் அறியாமல் வருவது வீட்டின் தோற்றம், அப்படி குடும்பத்தின் அங்கமாய் இருக்கும் வீட்டை யார் இப்படி அனாதையாய் விட்டுச்சென்றது? தன்னை கவனிப்பார் யாரும் இல்லாததால் அங்கம் பழுதுபட்டு பரிதாபமாக காட்சியளித்தாலும் இன்னும் எந்த நம்பிக்கையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒரு காலத்தில் எந்த ஒரு விசேஷ தினத்தன்றும் அவ்வீட்டு மனிதர்களோடு அந்த வீடும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ உறவினர்களின் வருகையை பார்த்து தானும் குதூகலித்திருந்த வீடு இன்று யாரும் இல்லாமல் தன்னந் தனியாய்.

வீடுகள் வெறும் கல் சுவர்கள் என்று யார் சொன்னது? அது எப்பொழுதும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, நாம்தான் அதை கவனிப்பதில்லை.

ஆட்கள் இல்லாமல் சிதைந்த வீடு தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறது கண்ணீர் சிந்தியபடி.