Wednesday, August 17, 2011

இயலாமை


இயலாமை

எனது இயலாமைகளை
மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள
மனது அனுமதிபப்தே இல்லை
ச்சே! என்ன ஒரு இயலாமை!?

காதல்

இறந்துபோன கவிஞனின்
முழுமை அடையாத கவிதையாய்...
உன்னிடம் சொல்லாமலே விட்டுவிட்ட
என் காதல்!

கவலை

அடுத்த நாளுக்கான
கவலைகளை மீதம் வைத்தே
ஒவ்வொரு நாளும்
உறங்கச் செல்கிறோம்

நமக்கான விடியல்
தீர்மானமில்லாத போதும்...!

-

Wednesday, May 25, 2011

நிதர்சனம்


காலையில் கண் விழித்தவுடன்
கனவுகளின் படிமங்களாய்
உந்தன் நினைவுகள்

அவசர அவசரமாய்
என்னை தயார் படுத்திக்கொள்கிறேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னுடனான
கன நேர சந்திப்பிற்காக

யாரும் பார்த்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பில்
தீண்டிச் செல்லும்
நமது பார்வைகள்

காலம் தாழ்த்தி வந்தாலும்
சீக்கிரம் வந்து விட்டதாக
வாங்கிக் கொள்ளும் சாபத்தைப் பொருட்படுத்தாத
பேருந்து

இப்படியான,
காதல் மலரத் துவங்கிய
காலத்தின் நிகழ்வுகளை
ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் உரையாடல்களில்

என் முதல் காதல் கடிதங்களை
பிறர் அறியாமல் கிழித்தெறிந்தது
தவிர்த்து!

-

Thursday, December 23, 2010

ஞானோதயம்

ஞானோதயம்

இன்னும் சிலருக்காவது
நல்லது செய்திருக்கலாமோ?
மனதின் ஞானோதயம்
பயனற்றுப் போனது
மரணத் தருவாயில்.

உடைந்த உளி

சிற்பியின் கையில்
உடைந்த உளி...
எனது கவிதை கருவிற்கு
கிடைக்காத வார்த்தைகள்.

சொல்லிச் சென்றது

பிரிந்த காதலியின்
ஒற்றைப் பார்வை
சொல்லிச் சென்றது
காதலின் போலித்தனத்தை

ஒற்றை ரூபாய்க்கு கையேந்தும்
பிச்சைக்காரனின் குரல்
சொல்லிச் சென்றது
மறந்து விட்ட எனது
மனிதாபிமானத்தை

என்னால் நடந்துவிட்ட
தவறுக்காக
நான் கேட்காமல் விட்ட மன்னிப்பு
சொல்லிச் சென்றது
மறந்துவிட்ட அடிப்படை நாகரிகத்தை


மொத்தத்தில்
இவை அனைத்தும் எனக்கு
சொல்லிச் சென்றது
மாறிவிட்ட மனித இயல்பை.


-

Thursday, December 16, 2010

மெளனமும் நட்பும்

மெளனமும் நட்பும்

ஏதேதோ சொல்ல வேண்டும்
என்று தோன்றும் தருணங்களில்
மெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது
எங்கள் நட்பை.

நிலையில்லா மனது

கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து
உருகிய பெண்
அவளின் திருமணச் செய்தி கேட்டு
உறங்காமல் கிடந்த நாட்கள்...
சில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்
அவள் வீடு கடக்கையில் எழுந்த
இனம் புரியாத உணர்வை
கலைத்துச் சென்றாள்
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
தாவணிப் பெண்.

உதிர நினைக்கும் இலை

இலையுதிர் காலத்திற்காய்
ஏங்கும் இலை...
வாழ்ந்து கெட்டவனின்
இறுதிக்கால வாழ்க்கை.


வழி தெரியவில்லை

எவ்வளவு சொல்லியும் மனது
சமாதானமடையவில்லை
என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
அடுத்தவரின் கவிதையில்
படிக்கும் போது.


-

Tuesday, November 23, 2010

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ஒற்றைப் பூ
நீ கடித்துத் துப்பிய
விரல் நகம்
பதித்துச் சென்ற 
உன் பாதச் சுவடுகள்
என வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
கவிதைகள்
உறுதிப்படுத்துகின்றன
நீ வந்து சென்றதை.

கருப்பொருள்

ஒரு கவிதை எழுத நினைத்து
ஆரம்ப வரி தேடி அலுத்துவிட்டது
வேறு வழியில்லை
மீண்டும் உன்னிடமே தஞ்சம்.

என்னென்று சொல்ல

வார்த்தைகள் மாறி மாறி நின்று 
களைப்படைந்தன
உன் அழகை
வரையறுக்க முயன்று
காலம் முன்பின்னாக நகர்ந்து
சோர்ந்து போனது
உனக்கு இணையான அழகைத் தேடி
இப்படி இருக்க
உன்னவள் அழகா என்று கேட்பவரிடம்
ஒரு வார்த்தை பதிலாய்
என்னென்று சொல்ல!


-

Tuesday, July 27, 2010

பிரிவு

பிரிவு


'ஏக்கம்'
'எதிர்பார்ப்பு'
'மகிழ்ச்சி '
'துக்கம்'
உன்னால் மட்டுமே
இவ்வார்த்தைகளின்
முழுமையான பொருளுணர்ந்தேன்
இன்னும் ஒரு வார்த்தை
மிச்சம் இருக்கிறது
'மரணம்'

************************************

ஒரு துளி

உதிர்ந்த தண்ணீர்
தனக்குள் ஏற்றுக் கொண்ட பிம்பத்தை
உண்ண முடியாமல் துப்பிய மிச்சமாய்
மீண்டும் ஒரு துளி.

************************************

அது போதும்...

காற்றாக உன் இதையத்தில் நிறைய வேண்டும்
கண்ணோடு கண் பார்த்து கரைய வேண்டும்
காலம் அத்தோடு உறைய வேண்டும் 
அது போதும்... அது போதும்...

உன்னால் என் வாழ்க்கை மலர வேண்டும்
அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்
அது போதும்... அது போதும்...


-

Thursday, July 1, 2010

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை

நிற்கும் மதில் தாண்ட விரும்பி
இடமா வலமா குழம்பி
ஏதோ ஒரு பக்கம்
குதித்த பின்புதான் தெரிந்தது
குதித்த இடம்
ஒரு மதில் என்று .


தீதும் நன்றும்

என் விரல் வளர்த்த நகங்கள்
என் உடல் கிழிப்பது கண்டு
கை கொட்டும் விரல்கள்
தங்கள் நகம் மறந்து.

பழக்கமில்லாத கனவு

வண்ணம் தீட்டிய கம்பிகளுக்கிடையில்
சுருண்டிருந்த புலி ஒன்று
கனவு கண்டு திடுக்கிட்டது
தான் காட்டிற்குள் வேட்டையாடுவதாய்.

-