Thursday, December 23, 2010

ஞானோதயம்

ஞானோதயம்

இன்னும் சிலருக்காவது
நல்லது செய்திருக்கலாமோ?
மனதின் ஞானோதயம்
பயனற்றுப் போனது
மரணத் தருவாயில்.

உடைந்த உளி

சிற்பியின் கையில்
உடைந்த உளி...
எனது கவிதை கருவிற்கு
கிடைக்காத வார்த்தைகள்.

சொல்லிச் சென்றது

பிரிந்த காதலியின்
ஒற்றைப் பார்வை
சொல்லிச் சென்றது
காதலின் போலித்தனத்தை

ஒற்றை ரூபாய்க்கு கையேந்தும்
பிச்சைக்காரனின் குரல்
சொல்லிச் சென்றது
மறந்து விட்ட எனது
மனிதாபிமானத்தை

என்னால் நடந்துவிட்ட
தவறுக்காக
நான் கேட்காமல் விட்ட மன்னிப்பு
சொல்லிச் சென்றது
மறந்துவிட்ட அடிப்படை நாகரிகத்தை


மொத்தத்தில்
இவை அனைத்தும் எனக்கு
சொல்லிச் சென்றது
மாறிவிட்ட மனித இயல்பை.


-

Thursday, December 16, 2010

மெளனமும் நட்பும்

மெளனமும் நட்பும்

ஏதேதோ சொல்ல வேண்டும்
என்று தோன்றும் தருணங்களில்
மெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது
எங்கள் நட்பை.

நிலையில்லா மனது

கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து
உருகிய பெண்
அவளின் திருமணச் செய்தி கேட்டு
உறங்காமல் கிடந்த நாட்கள்...
சில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்
அவள் வீடு கடக்கையில் எழுந்த
இனம் புரியாத உணர்வை
கலைத்துச் சென்றாள்
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
தாவணிப் பெண்.

உதிர நினைக்கும் இலை

இலையுதிர் காலத்திற்காய்
ஏங்கும் இலை...
வாழ்ந்து கெட்டவனின்
இறுதிக்கால வாழ்க்கை.


வழி தெரியவில்லை

எவ்வளவு சொல்லியும் மனது
சமாதானமடையவில்லை
என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
அடுத்தவரின் கவிதையில்
படிக்கும் போது.


-