Sunday, February 28, 2010

கடல் கொண்ட மனது

பார்க்கப் பார்க்க சலிக்காதது
கடல் அலை
எனக்கு என்னவளைப்போல

--------------------

கடல் எழுதிச்சென்ற கவிதை
கடற்க்கரை

--------------------

இப்பொழுதெல்லாம் காதலியுடன்
கடற்கரை செல்வதில்லை
எதை ரசிக்க
கடலையா? காதலியையா?

--------------------

கடலே தயவு செய்து
என் மனதை திருப்பிக்கொடுத்துவிடு
நான் வீடு திரும்ப வேண்டும்

Thursday, February 25, 2010

எழுத மறந்த கவிதை

எப்பொழுதாவது மனதில் சட்டென்று கவிதை அல்லது கவிதைக்கான கரு தோன்றும். ஆனால் அதை உடனுக்குடன் எழுதிவைக்காமல் போனால் மறந்துவிடும். அவ்வாறு எத்தனையோ கவிதைகள் பதிக்கப்படாமலே மறக்கப்படுகின்றன. மறந்துவிட்ட கவிதைகள் காற்றோடு கலந்து எப்பொழுதும் நம்மை சுற்றிக்கொண்டே இருப்பதோடு அவ்வப்பொழுது மனதிற்குள் வந்து லேசாக தலையை மட்டும் காட்டிவிட்டுப்போகும். ஆனால் எப்பொழுதும் முழுக்கவிதையும் நினைவு திரும்பியதில்லை.

எழுதிக்கொண்டிருக்கும் கவிதை பாதியில் நின்றுபோவதின் வேதனையை காட்டிலும் அதிக வேதனை அளிக்கக்கூடியது முழுமை பெற்ற கவிதை எழுதப்படாமலே மறக்கப்படுவது.

நேற்று மாடி முகப்பில் அமர்ந்து இருட்டை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் கவிதை வரி ஒன்று மனதில் பளிச்சிட்டது. அதை நினைத்துக்கொண்டே அறைக்குள் சென்று நீர் அருந்தும்போது வேறோர் எண்ணம் மனதில் ஓட கவிதை பற்றிய நினைவுச் சரடு அறுந்தது.

சற்று நேரம் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்ல ஆயத்தப்பட்டபோது சற்று முன் யோசித்த கவிதை பற்றிய நினைவு வந்தது. ஆனால் என்ன கவிதை எதைப்பற்றிய கவிதை என்று நினைவிற்கு வரவில்லை. ஒரு வேலை எந்த இடத்தில் அந்த கவிதை தோன்றியதோ அதே இடத்திற்குச் சென்றால் நினைவிற்கு வரக்கூடும் என்று மீண்டும் மாடி முகப்பிற்கு வந்து அமர்ந்த பின்பும்கூட எவ்வளவோ முயன்றும் அந்த கவிதை வரிகளை நினைவுகூர முடியவில்லை.

எழுதப்பட்ட கவிதைகளை விட எழுத மறந்த கவிதைகள் சிறப்பானதாக இருந்திருக்கலாம். அவை யாரையும் சென்றடையாமல் எனை விட்டு பிரிந்து சென்று பழிப்பு காட்டுகிறது. எவ்வளவு மன்றாடியும் என்னிடம் திரும்ப மறுத்து எனது இரவு உறக்கத்தை களவாடிக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆடுகிறது.

என் நினைவுகளில் இருந்து வெளியேறி வான்வெளியில் கலந்துவிட்ட கவிதைகள் மீண்டும் திரும்புமா என்று காத்துக்கொண்டே இருக்கிறேன் வெற்றிடத்தை வெறித்தபடி!

Tuesday, February 23, 2010

ஆளில்லா வீடு

பாதையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஆளில்லா வீட்டை கடந்து செல்கையில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வினால் நிறுத்தப்பட்டேன். அந்த வீட்டை பார்க்கும் போது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ஆரம்பித்தன.

மனிதர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற வீடுகள் எனக்கு எப்பொழுதும் ஒரு சரித்திர குறிப்பாகவே தெரிகிறது. அந்த வீட்டை காலி செய்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சந்தோசமாக வேறு புது வீட்டிற்கு குடி புகுந்திருக்கலாம், பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஓர் நிர்பந்தத்தின் காரணமாகவும் சென்றிருக்கக் கூடும்.

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குடிபெயர்ந்து செல்லும் போது அந்த வீடு என்ன நினைத்திருக்கும். இத்தனை காலம் தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் தன்னை தனியாக விட்டுச் செல்வதை நினைத்து அழுதிருக்குமோ?

அந்த வீட்டு குழந்தை தன்னுள்ளே தவழும்போது எவ்வளவு மகிழ்ந்திருக்கும். அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதை பார்த்திருக்கும். எந்நேரமும் தன்னோடு விளையாடிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டு அது அழுதழுது கிளம்புகையில் வீடும் பிரிய மனமில்லாமல் பிரிந்து மாலை வேலைக்காக ஏங்கியிருக்குமோ?

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அம்மனிதர்களின் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் அதற்கு அத்துபடியாக இருந்திருக்குமல்லவா? தனது சுவர்களில் எத்தனையோ ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கிறது, நாளடைவில் அவையும் மெல்லே மெல்லே அழிந்துவிடக்கூடும் சுவர்களோடு சேர்த்து. வீடுகளைப் பார்க்கும்போது அது தாய் போலவும் வசிப்பவர்கள் அதன் குழந்தைகள் போலவும்தான் தோன்றுகிறது. கோழி தனது குஞ்சுகளை தன் சிறகிர்க்குள் வைத்துக்கொள்வது போல வீடு மனிதர்களை தன்னுள் அணைத்துக்கொள்கிறது. கொட்டும் மலையையும் காயும் வெயிலையும் தான் வாங்கிக்கொண்டு நம்மை காக்கிறது.

ஒரு குடும்பம் என்றாலே மனக்கண்முன் நம்மையும் அறியாமல் வருவது வீட்டின் தோற்றம், அப்படி குடும்பத்தின் அங்கமாய் இருக்கும் வீட்டை யார் இப்படி அனாதையாய் விட்டுச்சென்றது? தன்னை கவனிப்பார் யாரும் இல்லாததால் அங்கம் பழுதுபட்டு பரிதாபமாக காட்சியளித்தாலும் இன்னும் எந்த நம்பிக்கையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒரு காலத்தில் எந்த ஒரு விசேஷ தினத்தன்றும் அவ்வீட்டு மனிதர்களோடு அந்த வீடும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ உறவினர்களின் வருகையை பார்த்து தானும் குதூகலித்திருந்த வீடு இன்று யாரும் இல்லாமல் தன்னந் தனியாய்.

வீடுகள் வெறும் கல் சுவர்கள் என்று யார் சொன்னது? அது எப்பொழுதும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, நாம்தான் அதை கவனிப்பதில்லை.

ஆட்கள் இல்லாமல் சிதைந்த வீடு தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறது கண்ணீர் சிந்தியபடி.

Monday, February 22, 2010

சில நிகழ்வுகள்

உவகை அளிக்கும் நிகழ்வின் சுவையை கடக்கும் மனது நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது விரும்பத்தகா நிகழ்வின் நீட்சியிலும் கூட.

ஒரு சில கணங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும். சில நேரம் வாழ்க்கை நம்மோடு பயணிப்பது போல் இருக்கிறது, சில நேரங்களில் வாழ்கை சுழலில் மாட்டிக்கொண்டது போலவும் இருக்கிறது. நமது சூழ்நிலையும் சுற்றுப்புறமும்தான் பெரும்பாலும் இதை தீர்மானிப்பதோடு நம்மை சூழ்நிலைக்கைதியாகவும் ஆக்குகிறது.

ஓடும் பேருந்தில் ஏற எத்தனிக்கையில் கம்பியை பிடிக்க முடியாமல் போன கையை அருகில் இருப்பவர் பிடிக்கும் தருணம் உயிரின் மதிப்பை உணர்த்துவதோடு நம்மின் அலட்சியத்தையும் கோடிட்டு காட்டும் நிகழ்வு.

கைத்தடியை தட்டித் தட்டி சாலையை கடக்கும் கண்பார்வை அற்றவரின் நிதானம், வாகனப் போக்குவரத்தின் இடையே அவசரமாக ஓடி வாகன ஓட்டியிடம் வசவு வாங்கியதை எண்ணி வெட்கம் கொள்ள வைக்கும் நிகழ்வு.

அக்கறையுடனும் கவனத்துடனும் செய்யப்பட்ட வேலை மேலதிகாரியின் அலட்சியப் புறக்கணிப்பு உழைப்பின் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் நிகழ்வு.

உருகி உருகி காதலித்த பெண் காதலை புறம் தள்ளி பணக்காரனை திருமணம் செய்வது, தன்னின் இயலாமையை இடித்துரைக்கும் நிகழ்வு.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன அதன் முக்கியத்துவம் அறியப்படாமலே!

புத்தகம் எழுதுவது எப்படி?

மு.கு: எழுத்துலகில் எனக்கிருக்கும் 25 வருட அனுபவத்தை எப்படி அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவது என்று யோசித்ததில் உருவானது இந்த பதிவு.

சரி இப்போ "புத்தகம் எழுதுவது எப்படி?" ன்னு பாத்து அத அப்படியே பாலோ பண்ணி நீங்களும் ஒரு புத்தகத்த எழுதிபோடுங்க மக்கா.(என்னது, தொனி மாறுன மாதிரி இருக்குது!?)

முதல்ல என்ன எழுதறதுன்னு முடிவு பண்ணனும். அதுக்கு தனிமையில உக்காந்து யோசிக்கறது ரொம்ம்ம்ப முக்கியம். தனிமையில உக்காந்து என்ன மாதிரியெல்லாம் யோசிக்கலாமுன்னு இன்னொருநாள் சொல்லித்தர்றேன், இப்போ புத்தகத்த பத்தி மட்டும் யோசிப்போம். அப்புறம், தனிமை கிடைக்கிலேன்னா அத நீங்களா ஏற்படுத்திக்கணும்.

அதுக்கு கொசுக்கடிக்காத ஹோட்டல்லா பார்த்து ரூம் போடலாம்.
பக்கத்துல ஆள் நடமாட்டமில்லாத மலை இருந்தால் சரக்கு, சிகரெட் (பழக்கமிருந்தால் மட்டும்) சகிதமாக சென்று அமர்ந்து விடலாம்.
ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நடு கடலுக்கு சென்று விடலாம்.
அல்லது குறைந்த பட்சம் பாத்ரூம் சென்று மணிக்கணக்காக அமர்ந்து விடலாம்.

சரி, எப்படியோ ஒரு வழியாக தனிமையும் கிடைச்சு எழுத ஐடியாவும் கிடைச்சுருச்சா, அப்போ அடுத்து என்ன பண்ணலாமுன்னு பார்ப்போம்.

யோசிச்சத பேப்பரும் பேனாவும் வச்சும் எழுதலாம் அல்லது கணினியிலும் தட்டச்சலாம்.

உங்க கையெழுத்து ஓரளவுக்காவது அடுத்தவங்களால படிக்கிற மாதிரி இருந்தா நீங்களே எழுதலாம்.

அல்லது நீங்க சொல்லச்சொல்ல வேற யாரையாவது வெச்சும் எழுத வைக்கலாம்(அதுக்கு சம்பளம் கேக்காதவரா இருந்தா நல்லது)
கண்டிப்பா பேனாவ வெச்சுத்தா எழுதனுமுன்னு ஒன்னும் கிடையாது, பென்சில வெச்சுக்கூட எழுதலாம்.

தட்டச்சரமாதிரி இருந்தா அதையும் நீங்களே பண்ணலாம் அல்லது அதுக்கும் ஆள் வெச்சுக்கலாம்.

(அம்மாடி எத்தன 'லாம்'!! ராசி பலன் படிக்கிற மாதிரி இருக்குதோ?)

எப்படியோ எழுதியோ, தட்டச்சியோ முடிச்சாச்சா அத அப்படியே ஒரு பதிபகத்துல கொடுத்து சொந்த செலவுல கொறஞ்ச பட்சம் 1000 பிரதியாவது போடுங்க.

புத்தகம் தயாராயிடுச்சா! அப்புறம் என்ன யாராவது ஒரு பிரமுகர வெச்சு புத்தக வெளியீட்டு விழா கொண்டாடவேண்டியதுதானே... எவன் படிச்சா நமக்கு என்ன, படிக்காட்டி நமக்கு என்ன அது அவனவன் தலையெழுத்து விடுங்க பாஸ்.

இன்னும் ஏதாவது ஐடியா தேவைப்பட்டுச்சுன்னா..... (திருந்தவே மாட்டியா??) சரி விடுங்க நல்லது சொன்ன யாரு கேக்கிறாங்க.

பி.கு: 25 வருச அனுபவமுன்னு சொன்னது நா எழுதி பழக ஆரம்பிச்சதில் இருந்து (என்ன்ன்னா வில்லத்தனம்?).

Saturday, February 20, 2010

தவளை தன் வாயால் கெடும்

ஒத்த பதிவ எழுதிட்டு ஊரு முழுக்க தம்பட்டம் அடிச்சதுக்கு வெச்சாருயா ஒருத்தரு ஆப்பு.

மத்தியானத்துல இருந்து நம்ம ஏரியா பக்கம் யார் வந்தாலும் வம்பா பிடிச்சு உக்காரவச்சு ப்ளாக் எழுதுன கதைய சொல்லிகிட்டிருந்தேன். சில பேரு அப்படியான்னு கேட்டுகிட்டாங்க, சில பேரு லிங்க் கொடு படிச்சுப்பார்கிறேன்னு சொன்னாங்க. நிலைமை இப்படி போய்கிட்டு இருக்கும்போது ஒரு நண்பர் வந்தார், வழக்கம்போல அவருகிட்டேயும் நம்ம பராக்கிரமங்களை பற்றி சொன்னேன். அப்போ எனக்கு தெரியலே (தெருஞ்சிருந்தா அடக்கி வாசிச்சிருக்கலாம்) நமக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையிலேயும் குதிச்சு கும்மி அடிச்சுட்டு போய்டுவாருன்னு.
ப்ளாக்க பத்தி சொன்னவுடனே அவரு கேட்ட முதல் கேள்வியிலேயே எனக்கு பேச்சு மூச்செல்லாம் நின்னு போச்சு.

அவரு கேட்ட கேள்வி "நீங்க ஏன் படத்துக்கு பாட்டெழுத கூடாது?".

இதுக்கு மேல நம்ம வாய திறந்தா இவருகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்னு நினைச்சுகிட்டு, பேந்த பேந்த முழிச்சு அவரையே பார்த்தேன். அவரு ஏதோ நா அத பத்திதா யோசிக்கிறதா நினைச்சு அடுத்த கட்டத்துக்கு போனாரு.

"நீங்க வேற என்னவெல்லாம் எழுதி இருக்கீங்க?"

இப்பவாவது நான் சுதாரிசிருக்கக் கூடாதா, மறுபடியும் என் திருவாய் மலர்ந்தேன். "twitter ல அப்பப்போ சின்னச் சின்னதா கவிதை மாதிரி எழுதுவேன்" என்று கூறி அதையும் காண்பித்தேன்.

சற்று நேரம் உற்று பார்த்தவர் "பாரதிராஜா படத்துல ஆரம்பதிலேயும் முடிவிலேயும் கவித மாதிரி கொஞ்சம் பேசுவாரே, அதே மாதிரி நீங்களும் ஏதாவது படத்துக்கு எழுதலாமே" என்றார். சரி இன்னைக்கு இவரு போதைக்கு நம்மதா உறுகா போல இருக்குன்னு நினைச்சுகிட்டு பாவமாக அவரையே பார்த்தேன்.

என்ன நினைத்தாரோ திடீரென்று "ஒன்னு செய்ங்க, முதல்ல சின்ன சின்ன T.V. நாடகத்துக்கு டைட்டில் சாங் எழுதுங்க" என்றார் (வெக்கிற ஆப்பையே எத்த்த்த்த்தனை விதமா வெக்கிறாங்க).

"சொல்லிட்டீங்கல்ல பொலந்து கட்டிபுடுறேன்" மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன்.

நான் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டதைப் பார்த்து அவருக்கும் தான் 'கொஞ்சம் ஓவராத்தா போய்ட்டமோன்னு' தோணி இருக்கும் போல, மெதுவாக இடத்தை காலி செய்துவிட்டார்.

இதில் சிறப்பு என்னவென்றால், இத்தனை யோசனை சொன்ன அவர் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கூட பார்த்திருக்கவில்லை. இதிலிருந்து என்ன புரிஞ்சதுன்ன 'இப்படி பல ஆப்புகள வாங்கித்தா நம்ம பதிவர்களெல்லாம் ஒரு நிலைமைக்கு வந்திருக்காங்கன்னு'.

இது அனைத்தும் கற்பனையே என்று கொள்க (ஹிஹி!!)

என்ன தலைப்பு வைக்கிறது!

வணக்கம் நண்பர்காள்,

இன்னைக்கு காலையில எழுந்தவுடனே முடிவு பண்ணிட்டேன் கண்டிப்பா பதிவு எழுதியே ஆகணும் என்று. ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கறது எதபத்தி எழுதுறதுன்னு ஒன்னும் புரியலே.

புலிய பார்த்து பூனையும் சூடு போட்டுகிட்ட கதையா எல்லோரும் பதிவு எழுதுறத பார்த்து இரண்டு வருசத்துக்கு முன்னாடி நானும் ப்ளாக் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துலியே கற்பனை குதிரை கொஞ்சம் சருக்கிட்டதால நம்ம இலக்கிய பயனத்த தொடரமுடியாம போச்சு. இப்போ திடீர்னு மீண்டும் பயனத்த தொடரலாமுன்னு மறுபடியும் குதிரைய தட்டி எழுப்பி ஏறி உக்காந்தாச்சு. பார்ப்போம், எவ்வளவு தூரம் போகுதுன்னு.

பதிவு எழுத ஆரம்பிச்சவுடனே முதல்ல ஒரு சின்ன பிரச்னை ஆரம்பம் ஆச்சு. என்ன தலைப்பு வெக்கிறது? (ஆரம்பமே அசத்த்த்தலா இருக்கே!!??). அப்புறந்தா தெரிஞ்சுது இது சாதாரண பிரச்சனை இல்ல, பதிவுலகத்துக்கே உள்ள சரியான தலைவலின்னு. அப்பாடா! தலைப்ப பத்தி எழுதியாச்சு.

பேரு வேற 'ஏகாந்த பூமி' ன்னு வெச்சாச்சு அதனால ஏகாந்தத்தை பற்றி மட்டும் தான் எழுதனுமோ, வேற ஏதாவது எழுதினா இவன்கூட யாரும் அன்னம் தண்ணி பொலங்க கூடாதுன்னு ஒதுக்கி வெச்சுருவாங்கலோன்னு ஒரே பயம்! சினிமா விமர்சனம் எழுதலாமுன்னா நேத்து நம்ம பார்த்த படத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது (வசனமே இல்லாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு). அரசியல் பத்தி எழுதலாமுன்னா வீடு தேடி ஆட்டோ வரும்னு பயபடுத்துறாங்க. வேற என்னதா எழுதுறது (இப்பவே கண்ண கட்டுதே). ஆனாலும் அதுக்காக அப்படியே விட்டுவிட முடியுமா, எதுவுமே இல்லாட்டியும் நாங்க வெறும் கையிலயே முலம் போடுவோம்ல.

மீண்டும் சிந்திப்போம்.