Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, August 17, 2011

இயலாமை


இயலாமை

எனது இயலாமைகளை
மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள
மனது அனுமதிபப்தே இல்லை
ச்சே! என்ன ஒரு இயலாமை!?

காதல்

இறந்துபோன கவிஞனின்
முழுமை அடையாத கவிதையாய்...
உன்னிடம் சொல்லாமலே விட்டுவிட்ட
என் காதல்!

கவலை

அடுத்த நாளுக்கான
கவலைகளை மீதம் வைத்தே
ஒவ்வொரு நாளும்
உறங்கச் செல்கிறோம்

நமக்கான விடியல்
தீர்மானமில்லாத போதும்...!

-

Wednesday, May 25, 2011

நிதர்சனம்


காலையில் கண் விழித்தவுடன்
கனவுகளின் படிமங்களாய்
உந்தன் நினைவுகள்

அவசர அவசரமாய்
என்னை தயார் படுத்திக்கொள்கிறேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னுடனான
கன நேர சந்திப்பிற்காக

யாரும் பார்த்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பில்
தீண்டிச் செல்லும்
நமது பார்வைகள்

காலம் தாழ்த்தி வந்தாலும்
சீக்கிரம் வந்து விட்டதாக
வாங்கிக் கொள்ளும் சாபத்தைப் பொருட்படுத்தாத
பேருந்து

இப்படியான,
காதல் மலரத் துவங்கிய
காலத்தின் நிகழ்வுகளை
ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் உரையாடல்களில்

என் முதல் காதல் கடிதங்களை
பிறர் அறியாமல் கிழித்தெறிந்தது
தவிர்த்து!

-

Thursday, December 23, 2010

ஞானோதயம்

ஞானோதயம்

இன்னும் சிலருக்காவது
நல்லது செய்திருக்கலாமோ?
மனதின் ஞானோதயம்
பயனற்றுப் போனது
மரணத் தருவாயில்.

உடைந்த உளி

சிற்பியின் கையில்
உடைந்த உளி...
எனது கவிதை கருவிற்கு
கிடைக்காத வார்த்தைகள்.

சொல்லிச் சென்றது

பிரிந்த காதலியின்
ஒற்றைப் பார்வை
சொல்லிச் சென்றது
காதலின் போலித்தனத்தை

ஒற்றை ரூபாய்க்கு கையேந்தும்
பிச்சைக்காரனின் குரல்
சொல்லிச் சென்றது
மறந்து விட்ட எனது
மனிதாபிமானத்தை

என்னால் நடந்துவிட்ட
தவறுக்காக
நான் கேட்காமல் விட்ட மன்னிப்பு
சொல்லிச் சென்றது
மறந்துவிட்ட அடிப்படை நாகரிகத்தை


மொத்தத்தில்
இவை அனைத்தும் எனக்கு
சொல்லிச் சென்றது
மாறிவிட்ட மனித இயல்பை.


-

Thursday, December 16, 2010

மெளனமும் நட்பும்

மெளனமும் நட்பும்

ஏதேதோ சொல்ல வேண்டும்
என்று தோன்றும் தருணங்களில்
மெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது
எங்கள் நட்பை.

நிலையில்லா மனது

கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து
உருகிய பெண்
அவளின் திருமணச் செய்தி கேட்டு
உறங்காமல் கிடந்த நாட்கள்...
சில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்
அவள் வீடு கடக்கையில் எழுந்த
இனம் புரியாத உணர்வை
கலைத்துச் சென்றாள்
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
தாவணிப் பெண்.

உதிர நினைக்கும் இலை

இலையுதிர் காலத்திற்காய்
ஏங்கும் இலை...
வாழ்ந்து கெட்டவனின்
இறுதிக்கால வாழ்க்கை.


வழி தெரியவில்லை

எவ்வளவு சொல்லியும் மனது
சமாதானமடையவில்லை
என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
அடுத்தவரின் கவிதையில்
படிக்கும் போது.


-

Tuesday, November 23, 2010

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ஒற்றைப் பூ
நீ கடித்துத் துப்பிய
விரல் நகம்
பதித்துச் சென்ற 
உன் பாதச் சுவடுகள்
என வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
கவிதைகள்
உறுதிப்படுத்துகின்றன
நீ வந்து சென்றதை.

கருப்பொருள்

ஒரு கவிதை எழுத நினைத்து
ஆரம்ப வரி தேடி அலுத்துவிட்டது
வேறு வழியில்லை
மீண்டும் உன்னிடமே தஞ்சம்.

என்னென்று சொல்ல

வார்த்தைகள் மாறி மாறி நின்று 
களைப்படைந்தன
உன் அழகை
வரையறுக்க முயன்று
காலம் முன்பின்னாக நகர்ந்து
சோர்ந்து போனது
உனக்கு இணையான அழகைத் தேடி
இப்படி இருக்க
உன்னவள் அழகா என்று கேட்பவரிடம்
ஒரு வார்த்தை பதிலாய்
என்னென்று சொல்ல!


-

Tuesday, July 27, 2010

பிரிவு

பிரிவு


'ஏக்கம்'
'எதிர்பார்ப்பு'
'மகிழ்ச்சி '
'துக்கம்'
உன்னால் மட்டுமே
இவ்வார்த்தைகளின்
முழுமையான பொருளுணர்ந்தேன்
இன்னும் ஒரு வார்த்தை
மிச்சம் இருக்கிறது
'மரணம்'

************************************

ஒரு துளி

உதிர்ந்த தண்ணீர்
தனக்குள் ஏற்றுக் கொண்ட பிம்பத்தை
உண்ண முடியாமல் துப்பிய மிச்சமாய்
மீண்டும் ஒரு துளி.

************************************

அது போதும்...

காற்றாக உன் இதையத்தில் நிறைய வேண்டும்
கண்ணோடு கண் பார்த்து கரைய வேண்டும்
காலம் அத்தோடு உறைய வேண்டும் 
அது போதும்... அது போதும்...

உன்னால் என் வாழ்க்கை மலர வேண்டும்
அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்
அது போதும்... அது போதும்...


-

Thursday, July 1, 2010

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை

நிற்கும் மதில் தாண்ட விரும்பி
இடமா வலமா குழம்பி
ஏதோ ஒரு பக்கம்
குதித்த பின்புதான் தெரிந்தது
குதித்த இடம்
ஒரு மதில் என்று .


தீதும் நன்றும்

என் விரல் வளர்த்த நகங்கள்
என் உடல் கிழிப்பது கண்டு
கை கொட்டும் விரல்கள்
தங்கள் நகம் மறந்து.

பழக்கமில்லாத கனவு

வண்ணம் தீட்டிய கம்பிகளுக்கிடையில்
சுருண்டிருந்த புலி ஒன்று
கனவு கண்டு திடுக்கிட்டது
தான் காட்டிற்குள் வேட்டையாடுவதாய்.

-

Tuesday, June 22, 2010

கானல் நீர்

படிக்கப் படாத கவிதை புத்தகம்
மழை பார்க்க திறந்த ஜன்னல்
முகம் வருடும் குளிர் காற்று
சுகமான சாய்வு நாற்காலி
பசி அடங்கிய பின் மதியம்
குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்
படித்த வரியை கண்மூடி ரசிக்க அமைதி

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்

வரும் ஞாயிறாவது கிட்டுமா
இவை அனைத்தும்
ஏக்கத்தோடு மனது
அலுவலக வேலைக்கிடையில்.

-

Friday, June 11, 2010

விடியாத இரவொன்று

அனுபவித்த இன்பத்தை
மீண்டும் மீண்டும் தேடும்
ருசி கண்ட பூனையாய்
மனது

நம்பிக்கை மேல் இழுக்க
துன்பங்கள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில்
வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம்

முன்னே புகழ்வதும்
பின்னே  இகழ்வதுமாய்
மனிதம் மறந்துவிட்ட
சுற்றம்

வெறி கொண்ட மக்களிடம்
பிறர் நலன் என்பது
கேலிப் பொருளான
பரிதாபம்

பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட
நிம்மதி

சற்றேனும் நிம்மதி
என்றுணரும் இரவு
 வேண்டும் எனக்கு
"விடியாத இரவொன்று".

-

Thursday, June 3, 2010

நகர வாழ்க்கை

நகர வாழ்க்கை
கடிகார வட்டத்தினுள்
சுற்றிவரும் முள்ளாய்
நான்.

பொய்முகம்
மூடிய முகத்தினுள்
முரண்பட்டு நின்றது
அகம்.

நூதன திருட்டு
எந்த பயமும் இல்லாமல்
அனுமதியின்றி எடுத்துச் சென்றாள்
என் கண் முன்னே
இதயத்தை.

கனவு
நிகழ் காலம் தாண்டி
அழைத்துச் செல்லும்
கால இயந்திரம்.

கனவு
நிகழாத நிகழ்வை
நிகழ்வதாகக் காட்டும்
மாயக் கண்ணாடி.

தொழில்நுட்பம்
அலைபேசியில்
கண்களால் பேசிக் கொண்டோம்
எஸ்.எம்.எஸ்.

-

Monday, May 17, 2010

காதல் - நினைவுகள் தாங்கி

உன் 
          தலையுதிர் பூ
          வரவுக்கான காத்திருப்பு
          ஒரு புன்னகைக்கான தவம்
          நினைவுகளால் உறங்காத இரவுகள்
          அலைபேசி அழைப்புக்கான எதிர்பார்ப்பு

மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை
நீ தவறவிட்ட கைக்குட்டை
உனக்கு பிடித்த பாடலின் முனுமுனுப்பு

இனி, எதுவும் இல்லை.

உன் திருமண அழைப்பை
எனக்கு அனுப்பாமலாவது இருந்திருக்கலாம்.

-

Tuesday, May 4, 2010

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

அவசியம் இல்லா அலைபேசி அழைப்பு
எங்களின் சுவாரஸ்ய உரையாடலை
கத்தரிக்கும்

அழகான பெண்
அவனிடம் மட்டும்
சிரித்து பேசுகையில்
நட்புப் காகிதத்தில்
சிறு கசங்கல் ஏற்படும்

நட்பில் ஒளிவு மறைவு
இல்லை என்றாலும்
சில விஷயங்கள்
மறைக்கப் பட்டே தீரும்

விவாதத்தில் தன்
கருத்து தவறாயினும்
முன்னிறுத்தப்படும்

இவைகளெல்லாம்
திட்டமிட்டு நடப்பதில்லை
ஆகவே நாங்கள்
நண்பர்கள் தான்.

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-

Tuesday, April 27, 2010

ஒவ்வொரு நாளும் ஏதாவது

ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றை சந்திக்க வேண்டி இருக்கிறது

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்சனை
கொஞ்சம் தனிமை

சில நேர அமைதி
சட்டென்று பொங்கும் கோபம்

நண்பனின் துரோகம்
சிறு புன்னகை
துளிர்க்கும் கண்ணீர்
வெறுக்கும் சுற்றம்
நீளும் நட்புக் கரம்

முரண் எண்ணங்கள்
ஈர்க்கப்படும் கவனம்
கூடா நட்பு
தெளிந்த மனது

தவிர்க்க முடியா ஆசை
தீராத தேடல்
முடிவில்லா பயணம்
எதிர்கொள்ளும் ஏமாற்றம்

புறம் பேசும் குணம்
விரும்பத்தகாத நிகழ்வு
கேட்கப் படும் உதவி
எதிர்பாரா அதிர்ச்சி

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது

ஆனாலும்,
இது எதுவும் இல்லாவிட்டால்
அது வாழ்க்கையாகவும் இருக்காது..

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

 -
 

Monday, April 19, 2010

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

எல்லோரும் பதிவு எழுதுகிறார்கள்
கவிதை அனுபவம் நகைச்சுவை என்று

ஆனால்  எழுதப்படும்
கரு சுற்றி வருகிறது

சுய கற்பனை
சுய எள்ளல்
சுய பெருமை
சுய பச்சாதாபம்

சந்தித்த இகழ்ச்சி
சந்தித்த மகிழ்ச்சி
சந்தித்த வறுமை
சந்தித்த நண்பர்

எதிர்கொண்ட நிகழ்வு
எதிர்கொண்ட பிரச்சனை
எதிர்கொண்ட காதல்
 எதிர்கொண்ட சமூகம்

சிந்தித்த கற்பனை
சிந்தித்த கவிதை
சிந்தித்த கதை

அனுபவித்த சோகம்
அனுபவித்த வரிகள்
அனுபவித்த பாடல்
அனுபவித்த புணர்ச்சி

எதிர்க்கும் ஜாதி
எதிர்க்கும் மதம்
எதிர்க்கும் கருத்துக்கள்

படைப்பின் நிறைகள்
படைப்பின் குறைகள்
படைப்பின் தத்துவங்கள்

கேட்ட செய்திகள்
பார்த்த புகைப்படங்கள்
நெஞ்சை வருடிய திரைப் படங்கள்
மற்றும் சில...

இது தாண்டி
யாரேனும் எழுதுங்கள்
தயவு செய்து...!

எனக்குத்தான் தோன்றவில்லை
உங்களுக்கும் கூடவா....!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

எதற்காக இந்த வாழ்க்கை!

எதற்கு இந்த வாழ்க்கை!

ஆசைப்பட்டு கேட்ட பொம்மை
கைக்கு கிடைக்காமல்
அதோ பாரு
யாரு வர்றாங்கன்னு
என்று சொல்லி
திசை திருப்பப் படுவதர்க்காகவா

பக்கத்து வீட்டு
பையனைப் போல்
துணி வேண்டும் என்று கேட்டதர்ற்கு
அது ஆயி என்று சொல்லி
கவனம் கவரப்படுவதர்க்காகவா

மிதிவண்டி இருந்தால் தான்
பள்ளிக்கு செல்வேன் என்று சொல்லி
அடம் பிடித்ததற்காக
மிதி வாங்குவதர்க்காகவா

பள்ளிப் படிப்பை தாண்டி
கல்லூரி செல்ல
வசதி இல்லாததை நினைத்து
கண்ணீர் வடிக்கவா

இளமை காலம் தாண்டியும்
பொருளாதாரம் நிமித்தமாக
எதிர் பார்த்த நேரத்தில்
ஆகாத கல்யாணத்தை நினைத்து
மனம் வாடவா

தாமதமாய் அமைந்த மனைவி
எதிர்பார்ப்பை நிறைவு
செய்யாதது கண்டு
மனம் புளுங்கவா

பெற்ற மக்களை
என் பால்யம் போல் அல்லாமல்
வசதியாய் வாழ வைக்க
முடியாததை நினைத்து
சுவற்றில் முட்டிக் கொள்ளவா

அல்லது என் வாழ்க்கை போலவே
எனது பிள்ளைகளின் வாழ்க்கை
மறு சுழற்சியாய்
அமைந்து விட்டதை நினத்து
மனம் புளுங்கவா

எதற்காக இந்த வாழ்க்கை!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Friday, April 16, 2010

என் காதலியின் பெயர்

முதல் முறை உன்னைப் பார்த்தேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்முகம் என்னுள் பதிந்து போனது

மறுமுறை காண்பேனா...
விடை தெரியாது...

விடை தெரியா கேள்விக்கு
விளக்க உரையாய்
வந்து சேர்ந்தாய்
எனது அலுவலகத்திற்க்கே

நீ வந்ததில் இருந்து
என் வேலை நாட்களில்
விடுப்பு என்பதே இல்லாமல்
பதிவு செய்து கொண்டது
என் அலுவலக
வருகை பதிவேடு

எதிரில் இருந்த
கணினி திரையை
மறைத்தது உன் பிம்பம்
என் எண்ணத்தில்

என் எண்ணத்தை
ஊடறுத்த உன் பிம்பத்தை
காண சுற்றி அலைந்தேன்
இதுவரை அறிந்திராத
அலுவலக இடுக்குகளிலும்

கண்டு கொண்டேன்
நீ இருக்கும் இடத்தை
அதோடு என் வேலை மறந்தேன்
என்னை மறந்தேன்

நீ அலுவலகம் வரும் நேரம்
நானும் வந்தேன்
நீ உணவருந்தும் வேளை
நானும் அருந்தினேன்
நீ விடுப்பில் இருந்தால்
நான் நெருப்பில் இருந்தேன்

வாரத்தில் ஏழு நாட்களும்
வேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்

காரணமின்றி உன் இருப்பிடத்தை
ஒவ்வொரு நாளும்
பலமுறை கடந்தேன்

அதற்க்கான காரணம் உனக்கு தெரித்திருக்க
நியாயம் இல்லை
ஏனெனில் நீ இதுவரை
என்னை பார்த்ததில்லை

நினைத்திருந்தேன்
வாழ் நாளின் ஆகச் சிறந்த
தருணங்கள்
கவிதைகள் என்னை ஆட்கொண்ட
நேரமென்று

அதை பொய்யாக்கிச் சென்றது
உன் பெயரை தெரிந்து கொண்ட பொழுது.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Friday, April 9, 2010

அடியே சிறுக்கி..! - என் கிராமத்து காதல்

அடியே சிறுக்கி..!

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

இழந்த பழம் பறிக்க நீ எடுத்து எரிஞ்ச கல்லு
எம்மேலபட்டு மனசு ஆயிடுச்சு நூறு சில்லு

குட்டி குட்டி மேகம் போல வெடுசிருக்கு காடெல்லாம் பருத்தி
அத பறிக்க வரும்போது நானும் வந்தேனே நிதம் உன்ன துரத்தி

ஏ மனசு பூரா நெரஞ்சுபுட்டே கண்ணான கண்ணாட்டி
அப்பவே முடிவாச்சு நீதா எம் பொண்டாட்டி

மெல்ல மெல்ல ஏத்துகிட்ட நீயும் என் காதல
அதனால கேட்டுப்புட்டேன் உயரின் இசை என் காதால

மச்சான்னு ஒருதடவ கூப்பிட்டுட்டு மறஞ்சுகிட்ட
திரும்பி பாத்து காணாம  நா ஒரு நிமிஷம் மாஞ்சுபுட்ட

புளிய தோப்புக்குள்ள குடுத்தியே ஆசையா ஒரு முத்தம்
அத நெனைச்சு மனசுக்குள்ள பாட்டுதா நித்தம்

வரப்பு மேல கால வெச்சு  ஏறும் போது உன் பாதம்
பணித்தண்ணி வழுக்கிவிட போகுதடி இது மார்கழி மாதம்

கம்மா தண்ணி எல்லாம் கர புரண்டு ஓடுதடி
சிறுக்கி உன் நினைப்பால எம் மனசு வாடுதடி

அழகான பொண்ணப் பார்த்தா யாருக்கும் ஆச வரும்
என்னோட காதலுக்கு இப்படியா மோசம் வரும் 

சுண்டி இழுக்குதடி உன் கண்டாங்கி புடவ கட்டு
மொத்த ஊரும் கெலம்புதடி உன்னைத்தா பொண்ணு கேட்டு

எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
இதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான்

மத்தவங்க சொல்லக்கேட்டு என்ன மறந்திடாத சின்னப்பொண்ணு
மறந்திட்டா ஏ ஒடம்ப திங்கத்தா காத்திருக்கு இந்த மண்ணு

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

----------------------------------------

இந்த கிராமத்து காதல பல பேரு படிச்சு பாக்க
மனசு வெச்சு பதியுங்க உங்க வாக்க

-

Tuesday, April 6, 2010

வாழ்க்கை சவாரி !

கண் விழித்த போது
நீல நிற குதிரை ஒன்று
அழகு காட்டி நின்றது

என் விருப்பம் கேட்காமலே
என்னை ஏற்றிக் கொண்டு
நடக்கத் தொடங்கியது

ஏறியது குதிரை என்று தெரியாமலே
துவங்கியதென் பயணம்

 ஏறிய குதிரையின் சூட்சுமம் புரிவதர்க்குள்
பயண தூரத்தின்
கால் பங்கை கடந்திருதேன்

அப்போதும் சூட்சமம் மட்டுமே புரிந்திருந்தது
 பிரயாணத்தின் பாதை புரியவில்லை

எனது பாதையில் குறுக்கும்
நெடுக்குமாக பல குதிரைகள்
அலைந்து  கொண்டிருந்தன

சில குதிரைகள்
என்னை இடறிச் சென்றன
சில என்னை
உடன் அழைத்துச் சென்றன

எனக்கு என் குதிரையில்
பயணிக்க பிடிக்கவேயில்லை

மற்ற குதிரைகள் என்னை வசீகரித்தன
இருந்தபோதும் நான் பயணிப்பதை
நிறுத்தவே இல்லை

ஒரு கட்டத்தில் எனது குதிரை
துள்ளலுடன் பயணிக்க ஆரம்பித்தது
எனது பாதை மறந்து

குதிரை சில நேரம்
சிலிர்த்துக் கொன்டது
தாகத்தில் அலைந்தது
வெறி கொண்டு ஓடியது

மாறிய பாதையை
மாற்ற முடியவில்லை
நிதானித்த பின்பு

கிடைத்த பாதையில்
தொற்றிக் கொண்டன
சுமைகளும்

சுகமாய் இருந்த சுமைகள்
நடக்க நடக்க
எரிச்சலூட்டின

உதற நினைத்தாலும்
சுமைகள் குதிரையை
விடுவதாய் இல்லை

சுமைகளாலும்
நெடுந்தூர பயனத்தாலும்
இதோ எனது குதிரை
 களைத்து விட்டது

தனது பயணத்தை
முடித்துக் கொள்ள
விரும்புகிறது

நானும் இறங்கிக் கொள்கிறேன்
அடுத்த குதிரையில் எனது
பயணத்தை எதிர்நோக்கி!


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.


-

Saturday, April 3, 2010

நான் வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்!

நான் நானாய் பிறந்ததற்குப் பதில்
வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்.

ஒரு பறவையாய்
கல்லாய்
மரமாய்
காகிதமாய்

ஆனால்...

பறவையாய் இருப்பின்
மாமிச பட்சிணிகளால்
அகோரமாய் அடித்து உண்ணப்படலாம்

கல்லாய் இருப்பின்
கலவரத்தில் யாரோ ஒருவரின்
மண்டையப் பிளக்க
உபயோகப் படுத்தப் படலாம்

மரமாய் இருப்பின்
பற்றி எறியும் தீ நாக்குகள்
சிறு குழந்தைகளின்
தசையை தீண்ட
காரணமாய் இருந்து விடலாம்

காகிதமாய் இருப்பின்
ஏதோ ஒரு ஊரின், நாட்டின்
நாட்டு மக்களின்
கருப்பு பக்கங்களைப் பற்றி
எழுத பயன்படுத்தப் படலாம்

இப்படி வேறு எதுவாக பிறப்பினும்
அதிலும் சில சங்கடங்கள்
இருப்பது கண்டு
நான் நானாக பிறந்ததர்க்கே
மகிழ்வுறுகிறேன்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Tuesday, March 23, 2010

சூழ்நிலைக் கைதிகள்

நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நடைபாதையில் தூங்கும்
மனிதர்களை இறக்கத்துடன் பார்த்து
கால் படாமல் ஒதுங்கிச் செல்வோம் 
ஆனால் அவர்களுக்கு
உறைவிடம் தரமாட்டோம்.
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பிச்சை எடுக்கும் சிறுமிக்கு
ஒத்தை ரூபாய் பிசையிட்டு
கர்ணனாய் நினைத்து நகர்ந்துவிடுவோம்
அச்சிறுமியின் துயரப் பின்புலம் பற்றி
எண்ணமாட்டோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பேருந்துப் பயணத்தில்
நிற்கும் பெரியவருக்கு
யாராவது இடம் கொடுப்பார்களா என்று
சுற்றிலும் பார்த்துவிட்டு
உறங்குவது போல் கண்மூடிக் கொள்வோம்
எமது இருக்கையில்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

சாலை விதிகளை மீறும்
வாகன ஓட்டிகளை
மனதிற்குள் திட்டிக் கொள்வோம்
எங்கள் வாகனங்களை
நிறுத்தமில்லா இடங்களிலும் நிறுத்துவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

 வெளிநாடுகளின் தூய்மையைப் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசுவோம்
ஆனால் எம் நாட்டில்
கூச்சப் படாமல்  பொது இடங்களை
அசுத்தம் செய்வோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

கண்ணெதிரே அநியாயம் நடப்பினும்
பாராமுகமாய் இருந்து விட்டு
சமுதாயத்தை திட்டுவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-