Tuesday, June 22, 2010

கானல் நீர்

படிக்கப் படாத கவிதை புத்தகம்
மழை பார்க்க திறந்த ஜன்னல்
முகம் வருடும் குளிர் காற்று
சுகமான சாய்வு நாற்காலி
பசி அடங்கிய பின் மதியம்
குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்
படித்த வரியை கண்மூடி ரசிக்க அமைதி

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்

வரும் ஞாயிறாவது கிட்டுமா
இவை அனைத்தும்
ஏக்கத்தோடு மனது
அலுவலக வேலைக்கிடையில்.

-

Friday, June 18, 2010

ஆயிரம் பிறை கண்ட கண்கள்

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும். ஆம், நாம் நமது வயதை இழந்து அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நமது தாத்தா, பாட்டிகளிடம், நம்மிடம் இதுவரை சொல்லாத எத்தனையோ அனுபவக் கதைகள் அவர்கள் மனதில் புதையுண்டு கிடக்கின்றன.

மரத்தின் வயது ஏற ஏற அதிகரிக்கும் வளையங்கள் போல மனிதர்களின் தோல்களிலும் சுருக்கங்கள் வயதிற்கேற்ப அதிகரிக்கின்றன. உடல் வலு இழக்கிறது, ஞாபக சக்தி குறைகிறது, உடல் கலைத்து ஓய்வு தேடுகிறது. நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மற்ற அன்றாட செயல்களுக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது.

குழந்தையின் சிரிப்பில் மட்டுமல்ல முதுமையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம். எண்பது வயதுக்கு மேல் மனிதன் மீண்டும் குழந்தையாகத் துவங்குகிறான். பிறர் உதவி இன்றி தனித்து செயல்பட முடிவதில்லை.

எல்லோரும் இளமையாக இருக்க நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான முனைப்பு இல்லாதவர்களை பார்ப்பது அரிது. நரைக்கும் முடிக்கு சாயம் பூசி, விழுந்துவிட்ட பல்லுக்கு பொய்பல் கட்டி எப்படியாவது இளமையை தங்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.

வயதானவர்கள் உலகத்தின் வாழ்க்கையை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் உலகம் தன்னை அன்னியப் படுத்திவிட்டதாகவே உணர்கிறார்கள்.

பதின் வயதுகளில் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் தாத்தா இருக்கும் ஊருக்கு சென்று தங்குவது வழக்கம். அதுவும் கிராமம். அங்கே எங்கள் வீட்டு இரும்பு கேட்டிற்கு முன் ஊர் பஞ்சாயத்து டி.வி. இருக்கும். அமர்ந்து பார்பதற்கு கொட்டகை போன்ற அமைப்பில் தூண்கள் நிறுத்தி கூரை வேய்ந்திருப்பர். மாலை ஏழு மணிக்கு மேல்தான் டி.வி. பார்க்கவே ஆரம்பிப்பார்கள். அதுவரை, பகல் வேளைகளில் ஊரில் இருக்கும் வயதானவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த இடத்திற்கு சோம்பேறி மடம் என்றே பெயர். வயதானவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு எதற்கு சோம்பேறி மடம் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதிர்ந்த வயதில் ஓய்வாக அமர்ந்திருப்பது சோம்பேறித்தனமா என்ன?

பகல் வேளையில் அங்கு அமர்திருப்பவர்கள் பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். பேசிக்கொண்டோ , தாயம் அல்லது பதினைந்தாம் கரம் விளையாடிக் கொண்டோ அவர்களுடைய பகல் மெதுவாகவே நகரும். அவர்களுடைய விளையாட்டிலும் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. ஜெயிப்பது பற்றியோ தோற்றது பற்றியோ கவலை இருக்காது. அவர்களுக்குத் தேவை நேரம் செல்ல வேண்டும், அவ்வளவுதான்.

சில நாட்கள் நான் அங்கு சென்று அமர்ந்திருப்பது உண்டு. அங்கு ஒரு தாத்தா தினமும் வருவார், எண்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். ஆயிரம் பிறை கண்ட கண்கள், தலையிலிருந்து புருவம் வரை அனைத்து முடிகளும் நரைத்து வயதிற்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்கும். தடி ஊன்றி மெல்ல நடந்து வருவார். அதிகம் பேச மாட்டார், மற்றவர்கள் பேசுவதையும் வருவதையும் போவதையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பார். யாராவது கேள்வி கேட்டாலோ, பேச்சு கொடுத்தாலோ ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.

அப்பொழுது இதையெல்லாம் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். பின்பு அதற்க்கு மேல் அங்கு சலிப்புற்று வீட்டிற்க்கு வந்து விடுவேன். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் பொழுது அந்த பெரியவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே கண்முன் நிற்கிறது.

இளமை காலத்தில் ஓயாமல் பேசிய வாய் ஏன் இன்று மெளனத்தை தரித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் பரபரப்பான நிகழ்வுகளில் இருந்து உடற்சோர்வு அவர்களை தனிமைப் படுத்தி விட்டதோ. கண் பார்வை மங்கி, கேட்கும் திறன் குறைந்து, அதீத ஞாபக மறதியுடனான வாழ்க்கை பிடிப்பற்றதாகி விடுகிறதோ.

அவர்கள் எந்த ஒரு செயலையும் தம் இளமை காலத்தோடு ஒப்பிட்டுப் பார்பதாகவே தோன்றுகிறது. நம்முடைய செயல்களைப் பார்க்கும்போதோ அல்லது அது பற்றி பேச்சு எழும் போதோ பல பெரியவர்கள் 'உன்ன மாதிரிதா அந்த காலத்துல நானு...' என்று அவர்களுடைய அனுபவத்தை கூற ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடைய மனது தமது இளமை கால நினைவுகளை தொடர்ந்து அசை போட்டபடியே இருக்கிறது.

எண்பது வயது நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டிய வயது. ஆனால் சிலருக்கு அது கிடைப்பதில்லை. பெற்ற குழந்தைகளால் புறக்கணிக்கப் படும் பொழுது தங்களுடைய மிச்ச வாழ்நாளை கழிக்க எதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

மிக சிலரே எண்பது வயது தாண்டியும் விருப்பப் பட்டு வேலை செய்கின்றனர். எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு முதியவர் வயது தொண்ணூறை தொடும். ஆரோக்கியமான தேகம் இல்லாவிட்டாலும் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த வயதிலும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். அவரால் எப்பொழுதும் சும்மா உட்கார்ந்திருக்கவே முடியாது. எதாவது சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே இருப்பார். வீட்டில் இருப்பவர்கள் 'ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்..' என்று கூறினாலும், அவருக்கு வேலை செய்வது சிரமம் இல்லை, சும்மா உட்காந்திருப்பதுதான் சிரமம்.

அதே போல் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர். தினமும் ஆடு மேய்ப்பதை பார்க்க முடியும். விடாமல் மழை பெய்யும் நாட்கள் தவிர அவர் ஆடு மேய்க்காமல் இருந்த நாள் கிடையாது. ஆனால் இப்பொழுது சுத்தமாக நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். தன்னால் வேலை செய்ய முடியாமல் போனது அவர் மனதை மிகவும் பாதித்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை எல்லாம் காரணமின்றி திட்ட ஆரம்பித்தார். இன்றும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரையாவது திட்டிக் கொண்டே தான் இருப்பார். அதற்க்கு காரணம் நிச்சயம் தன்னால் முன்பு போல் எழுந்து நடக்க முடியவில்லை, வேலை செய்ய முடியவில்லை என்பதே.

தனது இயலாமையை மற்றவர்களை திட்டுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு காலமும் இந்த குடும்பத்திற்கு உதவியாய் இருந்துவிட்டு இன்று பயனற்று படுத்திருப்பதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

எந்நேரமும் ஓய்வாக இருப்பவருக்கு ஒவ்வொரு நாளும் மற்றும் ஒரு நாளே. குறிப்பிட்ட நேரத்திற்கு உண்பது உறங்குவது என்று ஒரு சின்ன சுழற்சிக்குள் தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். பண்டிகை பற்றியோ விசேஷ தினங்கள் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உணவு உடை என்று எதிலும் நாட்டம் இல்லாமலே இருக்கின்றனர். அவர்களுக்கான தேவைகளும் மிகவும் குறைந்துவிடுகிறது.

நண்பர்களிடம் தனிமை பற்றி எவ்வளவோ சிலாகித்துக் கூறியிருக்கிறேன். ஆனால் அதே தனிமைதான் முதியவர்களை வாட்டி வதைக்கிறது. அவர்களிடம் சற்று நேரமேனும் பொறுமையாக அமர்ந்து உரையாட குடும்பத்தில் யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நேரம் இருந்தாலும் அவசியம் இருப்பதில்லை. பொத்திப் பொத்தி வளர்த்த தம் மக்களே தன்னை புறக்கணிப்பதை நினைத்து மன வாட்டம் கொள்கின்றனர்.

இன்றைய வாழ்க்கை முறை அவர்களை வெகுவாக பாதிக்கிறது. அவர்களால் இந்த அவசர வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதேபோல் தங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் நிராகரிக்கப் படுவதையும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

சரியாக ஞாபகம் இல்லை, அப்பொழுது எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும். தோட்டத்தில் இருக்கும் கிணறுக்குச் சென்று நண்பர்களுடன் நீச்சல் அடிப்பது வழக்கம். ஒரு முறை பக்கத்து தோட்டத்தில் இருந்த தாத்தாவும் குளிப்பதற்காக வந்தார். தள்ளாடும் நடை, இருந்தாலும் எப்போதாவது கிணற்றுக்கு வருவதுண்டு. நீச்சல் தெரிந்தாலும் படிக்கட்டிலேயே அமர்ந்து குளிப்பார். நாங்கள் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய பொழுது அவர் முகத்தில் தண்ணீர் அடித்தது. 'கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கப்பா..' என்று கூறினார். அன்றைய குறும்புப் பருவத்தில் அவருடைய சிரமம் எங்களுக்கு தெரியவில்லை. வேண்டும் என்றே மேலும் மேலும் கை கால்களை அடித்து தண்ணீரை சிதறடிக்கச் செய்தோம். தாத்தாவால் படியில் நிற்கவே முடியவில்லை. அவர் மீண்டும் வேண்டாம் என்று சொல்லியும் நாங்கள் கேட்பதாக இல்லை.

மெதுவாக கிணற்றிலிருந்து மேலே ஏறி நின்றவர் 'இப்படிப் பன்னறீங்கலேப்பா..' என்றார் மெல்ல. அப்படிக் கூறும் பொழுதே அவர் குரல் கம்மியது. உதடுகள் துடித்தது. அதுவரை விளையாட்டாக செய்துகொண்டிருந்த நாங்கள் சட்டென்று அமைதியாகிவிட்டோம். என்ன சொல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. தாத்தாவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவருடைய உதடு துடித்து குரல் கம்ம என்ன காரணம். பிறகு அதுபற்றி நினைக்கும் போதெல்லாம் என் மனது கணக்கும். அந்த வயதான முதியவரின் உள்ளம் என்னவெல்லாம் நினைத்திருக்கும். தன் இளமை காலத்தில் இதுபோல் எப்படியெல்லாம் நீச்சல் அடித்திருப்பார், இன்று தன் இயலாமையை நினைத்து வருந்தினாரா? தான் சொல்வதை இந்த சிறுவர்கள் கூட கேட்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமா? அது மனதளவில் என்னை பாதித்த நிகழ்ச்சி. வயது முதிர்ந்தவர்களிடம் அவர்கள் மனது நோகாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி.

சொந்த தாத்தா பாட்டியையே மதிக்காத இந்தக் காலத்தில் வயதிற்கு மரியாதை கொடுப்போர் மிகச் சொற்பமே. அந்தக் காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவம் இன்றைய இளைய தலைமுறைக்கு வாய்மொழியாக கூற நினைத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்று அமைதியாகி விடுகின்றனர்.

எல்லா வீடுகளிலும் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கென இடம், படுக்கை ஒதுக்கப் படுகிறது. அவற்றோடு சேர்த்து அவர்களும் ஒதுக்கப் படுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி அதிகம் வெளியே வருவதில்லை. ஒரு ஆமை தன் ஓட்டிற்குள் பதுங்கிக் கொள்வதைப் போல அவர்களும் தங்களுக்கான இடத்திலேயே முடங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு உண்மையை எல்லோரும் மறந்து விடுகிறோம். எல்லோருக்கும் ஆயிரம் முறை முழு பிறை காண கிட்டுவதில்லை.


-

Friday, June 11, 2010

விடியாத இரவொன்று

அனுபவித்த இன்பத்தை
மீண்டும் மீண்டும் தேடும்
ருசி கண்ட பூனையாய்
மனது

நம்பிக்கை மேல் இழுக்க
துன்பங்கள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில்
வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம்

முன்னே புகழ்வதும்
பின்னே  இகழ்வதுமாய்
மனிதம் மறந்துவிட்ட
சுற்றம்

வெறி கொண்ட மக்களிடம்
பிறர் நலன் என்பது
கேலிப் பொருளான
பரிதாபம்

பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட
நிம்மதி

சற்றேனும் நிம்மதி
என்றுணரும் இரவு
 வேண்டும் எனக்கு
"விடியாத இரவொன்று".

-

Tuesday, June 8, 2010

இரவுப் பறவையின் எச்சம்

தூக்கம் வராமல் புரளும் முன் இரவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் பல நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டுச் செல்கின்றன. போர்வைக்குள் கதகதப்பாக படுத்துக் கொண்டு கண்களை மூட, நம்மைப் பார்த்ததும் எழுந்து ஓடி வரும் நாய் குட்டியைப் போல ஆழ்மனத்தின் எண்ணங்கள் ஓடி வருகிறது.

உறக்கம் வராத நேரங்களில் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருப்பதுண்டு. சில வேளைகளில் வானத்தைப் பார்த்தபடி படுத்துவிடுவதும் உண்டு. புறநகர்ப் பகுதியில் சற்று உள்ளடங்கிய வீடாதலால் அந்த நேரத்திற்கு வாகனப் போக்குவரத்தோ, இரைச்சலோ இருக்காது.

அந்த இரவும் அமைதியும் மனதை மயிலிறகாய் வருட ஆரம்பித்தது. இதமான வருடலில் பல எண்ணங்கள் துயில் கலைந்தன.

உயரமான இடத்தில் நின்று கொண்டு சமதளப் பரப்பை பார்ப்பது எப்பொழுதுமே பரவசம் அளிக்கக் கூடியது. என் கல்லூரி நாட்களில் அருகில் இருக்கும் சிவன்மலைக்கு தனியே செல்வதுண்டு. 'காங்கயம்' பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும்.

அங்கு மலை ஏறுவதற்கு படிகள் இருக்கும். வாகனங்கள் செல்ல தார் சாலையும் இருக்கும். அது மட்டுமன்றி, தார் சாலைகள் அமைப்பதற்கு முன், கோவிலுக்கு யானை செல்ல தனியே ஒரு பாதை இருக்கும். 'யானைப் படி' என்று பெயர். யானையால் படிக்கட்டில் இறங்க முடியாது என்பதால் இந்தச் சாலை. இது கற்களை சாய்வாக பரப்பி படிகள் இல்லாமல் யானை நடந்து வருவதற்கு ஏதுவாக பாதையை அமைத்திருப்பர். நான் மலைக்குப் போகும் சமயங்களில் அந்தச் சாலை அதிகம் பயன்பாடின்றி இருந்தது. கோவில் விசேஷம் எதுவும் இல்லாத தினத்தில் தான் நான் செல்வேன். அதனால் அந்த சமயங்களில் 'யானைப் படி' ஆள் அரவமின்றி இருக்கும். நான் அந்தப் பாதையில் தான் செல்வேன்.

அது ஒரு அற்புதமான அனுபவம். முக்கால்வாசி தூரம் சென்றவுடன் அமர்வதற்கு தோதாக ஒரு பாறை இருக்கும். அங்கு அமர்ந்து கொண்டு பார்த்தால் வெகு தொலைவு சமவெளி தெரியும். அங்கிருந்து பார்க்கும் பொழுது உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டதைப் போல தோற்றம் அளிக்கும். அடிவாரத்தில் வாகனங்கள் ஊர்வது தெரியும். இன்னும் சற்று தொலைவில் வீடுகள் புள்ளிகளாய் தெரியும். அதையும் தாண்டி காட்சிகள் அசையாத ஓவியங்களாய் தெரியும். அதற்க்கு மேல் புகை மண்டிய தோற்றம் தவிர ஒன்றும் தெரியாது.

சாதாரண இடங்களில் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே காணப் பழகிய கண்களுக்கு, இவ்வளவு தொலைவான காட்சி, முதன் முதல் இரயில் பார்க்கும் சிறுவனின் பிரமிப்பை கொடுக்கிறது. சிறிது நேரம் பார்வை நிலைகொள்ளாமல் அலைகிறது. மொத்தக் காட்சியையும் உள்வாங்கிக் கொள்ள துடிக்கிறது. சற்று நேரத்தில் எங்காவது ஒரு இடத்தில் நிலை குத்தி விடுகிறது.

தொடர்ச்சியான மலை பிரதேசங்கள் இப்படியான ஈர்ப்பை கொடுப்பதில்லை. சுற்றிலும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் மலைகள் பார்வை தூரத்தை குறைக்கின்றது. ஆனால் சமதளப் பரப்பில் இருக்கும் ஒரு சிறிய மலையில் நிற்கும் பொழுது, மலையடிவாரத்தில் இயங்கும் உலகம் ஊமைப் படமாய் காட்சி அளிக்கிறது.

வெயில் காயும் பகல், அவ்வப்பொழுது எங்காவது கேட்கும் குருவி கத்தும் ஓசை, ஆட்கள் அற்ற சுற்றம், சில நூறு அடிகள் கீழே சற்று வறட்சியான பூமி. நண்பனுடன் அந்த மலையில் அமர்ந்திருந்தேன். இதே இடத்தில் பல முறை தனியே அம்ர்ந்திருந்திருக்கிறேன். நேரம் போவது தெரியாமல் வேடிக்கை பர்ர்த்திருக்கிறேன். ஆனால், நண்பனுடன் சென்றிருந்த அன்றோ அதிக நேரம் இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அவனால் அரைமணி நேரத்திற்கு மேலாக உட்கார முடியவில்லை. அவனுடைய நச்சரிப்பால் திரும்பிவிட்டோம்.

பின்பு யோசித்துப் பார்க்கையில், ஏன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை? தனிமை அவ்வளவு கொடியதா? அந்த அமைதி அவனை பயம் கொள்ளச் செய்ததா? இரைச்சல் தவிர்த்து கொஞ்சம் நேரம் கூட இருக்க முடியாததன் காரணம் என்ன? கேள்விகள் மழைக் குமிழ்களாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

அந்த தனிமையும் அமைதியும் என்னை ஏன் கவர்ந்தது? அன்றாட வாழ்க்கையின் சத்தங்கள் அலுத்துவிட்டதா? எனில், அமைதியே மனதிற்கு நிம்மதியா? பின்பு எதற்காக இத்தனை ஆர்பாட்டங்கள்?

மலையில் தனியே அமர்ந்திருக்கும் பொழுது, அந்த அமைதியும், காட்சியும் எப்பொழுதும் என்னிடம் ஏதோ சொல்ல முனைவதைப் போலவே இருக்கும். எதையோ உணர்த்த துடிப்பதாகவே உணர்வேன். ஆனால், அது என்னவென்று தெளிவடைய முடிந்ததில்லை.

வீசும் காற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அதனூடே அலையும் சருகைப் போல் மலையின் அமைதிக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அந்த அமைதியினூடே பயணப் பட்டிருந்த நேரங்கள் கிடைத்தர்க்கரியவை.

ஒரு திருவிழா நாள். மலைக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல் யானைப் பாதையில் ஏறி சற்று தூரம் சென்று அமர்ந்து கொண்டேன். மலை அடிவாரத்தில் எங்கு நோக்கிலும் கூட்டம். சிலர் மலையை வளம் வருவதும் உண்டு. தார் சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. படிகளிலும் மக்கள் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அந்த விசேஷ தினத்தில் கூட அத்தனை கூட்டம் இருந்தும் நான்கைந்து பேரைத் தவிர அந்தப் பாதையில் யாரும் வரவில்லை.

தார் சாலை அமைக்கும் முன்னர் விசேஷ தினங்களில் படியில் ஏற சிரமப்படுபவர்கள் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பர். விசேஷ நாட்களில் இந்தப் பாதை திருவிழாக் கோலம் பூண்டிருந்திருக்கும். ஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளப் படாமல் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் தனிமையான இடங்களை வெகு சுலபமாக தவிர்த்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் ஏன் சந்தடிகளையும் ஆரவாரத்தையும் விரும்புவதுபோல் தனிமையையும் அமைதியையும் விரும்புவதில்லை என்று வியப்பாகவே இருக்கிறது.

மலைகளைப் பார்க்கும் பொழுது அவைகள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போலவே தோன்றும். அதில் வாழும் உயிர்களின் இயக்கம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. மலைகளில் அதன் கரடு முரடான நிலத்தில் சுற்றி அலைவது எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு புரிந்துகொள்ளப்பட முடியாத உணர்வின் வடிகாலாய் இருக்கிறது.

ஏன் இப்படி யாருமே தனிமையை விரும்பாமல் இதுபோன்ற நல்ல இடங்களை தவிர்கிறார்கள் என்ற எனது ஏக்கத்தை சிலர் வேறு மாதிரி தீர்துவைத்தார்கள். ஆம், இப்பொழுதெல்லாம் அந்த 'யானைப் படி' யில் யாரையும் அனுமதிப்பதில்லை. சிலர் அங்கு கும்பலாக வந்து மது அருந்துவதாகவும், பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மிகவும் வருத்தமாக இருந்தது.

அங்கு மலையோடு ஒன்றி புது புது அனுபவங்களை கொடுத்த தனிமை, இன்று இதோ மொட்டை மாடியில் தன்னைப் பற்றிய அனுபவத்தை அதே தனிமை கிளர்ந்தெழச் செய்து கொண்டிருக்கிறது.

நேரம் நழுவிக் கொண்டே இருந்தது. எழுந்துகொள்ள மனம் இல்லை. ஒரு இரவுப் பறவை ஒன்று பறந்தது, எதிர்பாராத விதமாக ஏன் காலின் மேல் எச்சமிட்டுச் சென்றது. எச்சத்தை துடைத்துவிட்டு யோசித்தபொழுது அந்த பறவையின் மேல் கோபம் வரவில்லை மாறாக வேறுமாதிரியான எண்ணங்களை எழுப்பியது. இந்த எச்சத்தைப் போல் நாமும் ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து துடைத்தெரியப் படுவோம். நாம் வாழ்ந்ததன் அடையாளமாக இந்த பூமியில் எதை விட்டு செல்வது.

சற்று முன் கொண்டிருந்த நினைவும் இந்த எண்ணமும் ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டுக் கொண்டன.

மலை அழிந்து போகுமா?  மனிதனின் வாழ்க்கையைப் போல் அதுவும் ஒருநாள் இல்லாமல் போகுமா? அதுபோல் அழிந்துவிட்ட மலைகள் எதாவது இருக்கிறதா? அப்படி அழிந்திருந்தால் தனது அடையாளமாக எதை விட்டுச் சென்றது? அதன் அடையாளம் அழியாததா? அல்லது அதுவும் அழியக்கூடியதா? வாழ்ந்து முடிந்த பின் எதற்காக நமக்கான அடையாளம் தேவைப் படுகிறது?

மயிலிறகின் வருடலில் விழிப்புற்ற எண்ணங்கள் இப்பொழுது கேள்விப் புயலால் அலைகழிக்கப் பட்டது. தாகத்தோடு அருந்திக் கொண்டிருக்கும் தண்ணீரை பாதியில் பிடுங்குவதைப் போல மழை தூர ஆரம்பித்து எண்ணங்களை இடைமறித்தது.

பின்னோக்கிய நினைவுகளையும் எழுந்த கேள்விகளையும் அங்கேயே விட்டுவிட்டு படுக்கைக்குத் திரும்பினேன். அவை இன்னும் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்னை மீண்டும் எதிர்பார்த்து.

-

Thursday, June 3, 2010

நகர வாழ்க்கை

நகர வாழ்க்கை
கடிகார வட்டத்தினுள்
சுற்றிவரும் முள்ளாய்
நான்.

பொய்முகம்
மூடிய முகத்தினுள்
முரண்பட்டு நின்றது
அகம்.

நூதன திருட்டு
எந்த பயமும் இல்லாமல்
அனுமதியின்றி எடுத்துச் சென்றாள்
என் கண் முன்னே
இதயத்தை.

கனவு
நிகழ் காலம் தாண்டி
அழைத்துச் செல்லும்
கால இயந்திரம்.

கனவு
நிகழாத நிகழ்வை
நிகழ்வதாகக் காட்டும்
மாயக் கண்ணாடி.

தொழில்நுட்பம்
அலைபேசியில்
கண்களால் பேசிக் கொண்டோம்
எஸ்.எம்.எஸ்.

-